முஸ்லிம்களையும் அரசாங்கத்தையும் வேறுபடுத்த சதி - ஜனாதிபதி மஹிந்த சொல்கிறார்
TN
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முஸ்லிம் ஒன்றியக் குழு பிரதியமைச்சர் பைஸர் முஸ்தபா தலைமையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களை அண்மையில் அலரி மாளிகையில் சந்தித்தது.
மாகாண சபை, உள்ளூராட்சி சபை முஸ்லிம் உறுப்பினர்களும் இதில் கலந்துகொண்டு முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.
இக்கூட்டத்தில் பல்வேறு பிரச்சினைகள் கலந்துரையாடப்பட்டன. விஷேடமாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களும், கட்சியினரும் எதிர்நோக்கும் பிரச்சினைகள், முஸ்லிம்களுக்கு எதிரான பல்வேறு சூழ்ச்சிகள், கல்வி மற்றும் அபிவிருத்தி விடயங்கள் ஹஜ் விடயம் ஆகியன இங்கு கலந்துரையாடப்பட்டன. இவற்றை கவனமாக செவிமடுத்த ஜனாதிபதி அவர்கள்,
இவ்வாறான ஒரு அமைப்பு முஸ்லிம்களின் பிரச்சினைகளைத் தீர்க்க ஏற்பாடு செய்திருப்பது வரவேற்கத்தக்க விடயம் எனவும் இவ்வமைப்பு மூலம் ஸ்ரீ. ல. சு. கட்சியின் வளர்ச்சியும் முஸ்லிம்களினதும் பிரச்சினைகளைத் தீர்க்கவும் உறுதுணையாக அமையுமெனவும் ஜனாதிபதி கூறினார்.
இன்று முஸ்லிம்களையும் அரசாங்கத்தினையும் வேறுபடுத்த பல்வேறு சதி முயற்சிகள் இருந்தாலும் அவை எமது பொறுமையான செயற்திட்டங்களினால் முறியடிக்கப்பட்டு வருவது தற்போது முஸ்லிம்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருப்பதே, இந்தளவு சரித்திரம் காணாத அளவு முஸ்லிம் பிரதி நிதித்துவம் ஏற்படக் காரணமாக உள்ளது.எனவே முஸ்லிம்கள் பொறுமையாக ஏனைய இனத்தவருடன் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பதே எனது ஆவலாக உள்ளது எனவும் ஜனாதிபதி அவர்கள் எடுத்துரைத்தார்.

Post a Comment