Header Ads



எகிப்து பாராளுமன்றம் பதற்றத்துடன் மீண்டும் கூடியது


எகிப்து நாட்டில், கடந்த மாதம் சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி கலைக்கப்பட்ட பார்லிமென்ட், புதிய அதிபர் முகமது முர்சி உத்தரவின் படி, செவ்வாய்கிழமை  மீண்டும் கூடியது.

எகிப்து அதிபராக, 30 ஆண்டுகளாக ஆட்சி செய்த முபாரக், பொது மக்களின் தொடர் போராட்டம் காரணமாக, கடந்த ஆண்டு பதவி விலகினார்.இடைக்கால அரசை, ராணுவ உயர்மட்ட கவுன்சில் கவனித்துக் கொண்டது. இதற்கிடையே, கடந்த ஜனவரி மாதம், பார்லிமென்ட் தேர்தல் நடந்தது. தேர்வு செய்யப்பட்ட மூன்றில் ஒரு பங்கு எம்.பி.,க்கள் முறைகேடாக வெற்றி பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்ததால், ராணுவ அரசின் தலைமையில் அமைந்த கோர்ட், கடந்த மாதம், பார்லிமென்டை கலைக்க உத்தரவிட்டது.

இதனிடையே, புதிய அதிபர் முகமது முர்சி, தேர்தல் நடக்கும் வரை, கலைக்கப்பட்ட பார்லிமென்டை, மீண்டும் கூட்ட வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, ராணுவ உயர் அதிகாரிகள் சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டனர். "பார்லிமென்ட்டை கலைக்க நாங்கள் இட்ட உத்தரவுதான் இறுதியானது' என, நீதிபதிகள் தெரிவித்தனர். எனினும்,  எகிப்து பார்லிமென்ட் செவ்வாய்கிழமை  மீண்டும் கூடியது.

பார்லிமென்ட் சபாநாயகர் சாத் இ கதாத்னி, சபையை சிறிது நேரம் நடத்தினார். ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் சபைக்கு வந்திருந்தனர். விடுதலை கட்சி மற்றும் இடதுசாரி கட்சி எம்.பி.,க்கள், இந்த கூட்டத் தொடரை புறக்கணித்தனர். அதிபர் முர்சி, அரசியலமைப்புக்கு எதிரான புரட்சியை மேற்கொள்வதாக இவர்கள் குற்றம் சாட்டினர்.

No comments

Powered by Blogger.