அமைச்சர் ரிஷாத் பதியுதீன் கைது செய்யப்படுவாரா..?
ரவூப் ஹஸீர்
இன்று 20.07.2012 காலை 10.30 மணிக்கு முஸ்லிம் காங்கிரஸ் தலைமைக்காரியாலயம் “தாருஸ்ஸலாமில்“ நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மன்னார் நீதிமன்ற தாக்குதல் குறித்த ஹக்கீமின் கருத்து கேட்கப்பட்ட போது, அதற்கு பதில் அளித்த நீதி அமைச்சர் ஹக்கீம் பின்வருமாறு தெரிவித்தார்.
நியமனப் பத்திரங்களை நிரப்பும் பணி மும்முரமாக தாருஸ்ஸலாமில் நடந்து கொண்டிருந்த போது, நீதிச் சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர் அவசர அவசரமாக என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மன்னார் நீதிமன்றத்திலும் அதன் வளாகத்திற்கருகிலும் நடைபெறு வன்முறைகள் பற்றி அறியத் தந்ததுடன் பிரதம் நீதியரசர் உடனடியாக செயலாளரை என்னுடன் தொடர்பு கொள்ளச் சொன்னதாகவும் சொன்னார்.
உடனடியாக பொலிஸ் உயர் அதிகாரிகளுடனும், படையதிகாரிகளுடனும் தொடர்புகளை ஏற்படுத்தினேன். ஆனால் அதற்குள் நிலைமை கட்டு மீறி போயிருந்தது. கட்சி தனியாக தேர்தல் கேட்கும் கடைசி நிமிட முடிவை எடுத்து இருந்ததன் காரணமாக கிழக்கின் மூன்று மாவட்டங்களுக்கும் உடனடியாக நான் போயாக வேண்டிய சூழ்நிலை இருந்ததனால் வன்னி பிரதேச பிரமுகர்களுடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நிலைமைகளை அவதானித்தும், ஆலோசனைகளை கூறியும் வந்தேன்.
நேற்று மாலை அம்பாறையில் இருந்து விமானம் மூலம் திரும்பியவுடனேயே சட்டதரணிகள் சங்க தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாச ரஜபக்ஷவுடன் தொடர்பு கொண்டு கதைத்தேன். இன்று காலை சட்டதரணிகள் சங்க தலைவருடன் நேரில் மன்னார் சென்று விபரங்களை தெளிவாக விசாரித்து, அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள எண்ணியிருந்தேன். ஆனால், துரதிஷ்டவசமாக இன்று அனைத்து சட்டத்தரணிகள் சங்கங்களும் இச் சம்பவத்துக்கான எதிர்ப்பைக் காட்ட பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு இருப்பதனால் எங்களுடைய அந்த விஜயம் பலனளிக்காது என்பதனால் அது பிற்போடப்பட்டுள்ளது.
இந்த நேரத்தில் குறுக்கீடு செய்த ஒரு ஊடகவியலாளர் சம்பவங்களுக்கு பின்னணியில் இருந்து செயல்பட்டதாக குறிப்பிடப்படும் வன்னியைச் சேர்ந்த அமைச்சர் கைது செய்யப்படுவாரா? என்று கேட்டார்.
இதற்கு சிரித்துக் கொண்டே பதில் அளித்த அமைச்சர், இதுவரை அவருக்கு எதிராக புகார் எதுவும் செய்யப்பட்டதாகவோ பொலிஸ் பதிவுகள் உள்ளதாகவோ எதுவும் இல்லாத நிலையில் அது சாத்தியமானதல்ல என்றார். தொடர்ந்து குறுக்கீடு செய்த ஊடகவியலாளர் அந்த அமைச்சருக்கு இச்சம்பவத்துடன் தொடர்பில்லை என்கின்றீர்களா? என்றபோது என் சக அமைச்சரவை சகா ஒருவர் மீது தகுந்த நியாயங்கள் விசாரணைகள் எதுவும் இன்றி என்னால் எப்படி விரல் நீட்ட முடியும் என்று ஹக்கீம் குறிப்பிட்டார்.

Post a Comment