துனிஷியாவில் இஸ்லாத்திற்கு எதிரான கண்காட்சி - முஸ்லிம்கள் எதிர்ப்பு போராட்டம்
துனீஷியாவில் ஏற்பட்ட கலவரத்தை தொடர்ந்து தலைநகர் சபாப் உட்பட எட்டு பிராந்தியங்களில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்த கலவரத்திற்கு சலபிகள் மீது அரசு குற்றம் சாட்டியுள்ளது. இதன்போது பொலிஸ் நிலையங்கள், நீதிமன்றங்கள் மற்றும் ஓவிய அரங்கு மீது கலவரக்காரர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் பல பொலிஸார் காயமடைந்துள்ளனர்.
துனீஷியாவில் இடம்பெற்ற ஓவிய கண்காட்சியை தொடர்ந்தே இந்த கலவரம் வெடித்துள்ளது. இந்த ஓவிய கண்காட்சியில் மக்காவை கேலி செய்யும் வகையான ஒவியம், பெண்ணின் நிர்வாண ஓவியம் மற்றும் எறும்புகளுக்குள் ‘அல்லாஹ்’ என்று எழுதப்பட்ட கலைவடிம் ஆகியன இணைக்கப்பட்டிருந்தன. இதற்கு எதிராக சலபிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து அன்றைய தினம் இரவே இந்த கலவரம் வெடித்தது.
எனினும் இந்த கலவரத்துடன் தமக்கு தொடர்பில்லை என சலபிகள் மறுத்துள்ளனர். எனினும் அல் கொய்தா அமைப்பின் தலைவர் அய்மன் அல் சவாஹிரி துனீஷியாவில் இஸ்லாமிய சட்டம் அமுல்படுத்தப்பட வேண்டும் என அறிவித்து ஒரு சில மணி நேரங்களிலேயே கலவரம் வெடித்தமை குறிப்பிடத்தக்கது. இந்த கலவரத்துடன் தொடர்புடைய 165 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு ள்ளனர்.
இவர்களுக்கு எதிரான 2003ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீவிர வாத சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பதாக உள்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது. துனீஷியாவில் கடந்த ஆண்டு ஏற்பட்ட மக்கள் எழுச்சிக்கு பின்னர் ஆட்சிக்கு வந்த மிதவாத இஸ்லாமிய கட்சியான அன்ஹதா இவ் வன்முறைக்கு கண்டனம் வெளியிட்டுள்ளது.
மதத்தை இழிவு படுத்தும் செயல்களை ஏற்க முடியாது என்றும் அதற்கு அமைதியான முறையிலேயே எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்றும் அந்த கட்சி குறிப்பிட்டுள்ளது. எனினும் இந்த வன்முறைகள் அன்ஹதா அரசை சிக்கலுக்குள்ளாகியுள்ளது.
ஏற்கனவே சலபிகள் கடந்த மாதம் துனீஷியாவில் உள்ள மதுச்சாலைகள், விற்பனை நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தியது. தீவிர மாதசார்பற்ற நாடான துனீஷயாவில் ஷரியா சட்டத்தை அமுல்படுத்த சலபிகள் அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

Post a Comment