Header Ads



இலங்கையர்கள் 6000 பேருக்கு ஹஜ் வாய்ப்பு..! - பிரதமரின் கடிதத்திற்கு பலன் கிட்டுமா?


TN
மர்லின் மரிக்கார்

இலங்கைக்கு இவ்வருடம் ஒதுக்கப்பட்டிருக்கும் ஹஜ் கோட்டாவை 6 ஆயிரம் வரை அதிகரிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கை குறித்து திருப்திகரமான முறையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென்று சவூதி அரேபியாவின் ஹஜ் விவகாரத்துக்குப் பொறுப்பான அமைச்சின் செயலாளர் பைஜல் பின் அப்துல் அஸிஸ், இலங்கை அரச ஹஜ் குழுவின் இணைத்தலைவரான சுற்றாடல் பிரதியமைச்சர் ஏ.ஆர்.எம். அப்துல் காதரிடம் உறுதியளித்துள்ளார்.

இலங்கை முஸ்லிம் களுக்கென இவ்வருடம் 2800 ஹஜ் கோட்டாவை சவூதி அரேபிய அரசாங்கம் ஒதுக்கியுள்ளது. ஆனால் இந்த தொகை இலங்கை முஸ்லிம்களுக்கு போதாது.

அந்த எண்ணிக்கையை 6 ஆயிரம் வரை அதிகரிப்பதற்கான நியாயத்தை தெளிவுபடுத்தி பிரதமரும் சமய விவகார அமைச்சருமான டி.எம். ஜயரட்ண, சவூதி அரேபியாவின் ஹஜ் விவகார அமைச்சருக்கு கடிதம் ஒன்றை எழுதியு ள்ளார்.

அந்த கடிதத்தை அரச ஹஜ் குழுவின் இணைத் தலைவரான பிரதியமைச்சர் அப்துல் காதர், சவூதி அரேபியாவுக்கு எடுத்துச் சென்று அவ்வமைச்சின் செயலாளரிடம் கையளித்தார். இதன்போது இடம் பெற்ற பேச்சுவார்த்தையின் போது அமைச்சின் செயலாளர் மேற்கண்டவாறு உறுதியளித்ததாக பிரதியமைச்சர் காதர் கூறினார்.

சுமார் ஒரு மணித்தியாலம் இடம்பெற்ற இப்பேச்சுவார்த்தையின் போது இலங்கை முஸ்லிம்களுக்கென ஒதுக்கப்பட்டிருக்கும் ஹஜ் கோட்டாவை 6 ஆயிரம் வரை அதிகரிப்பதற்கான நியாயத்தை அமைச்சின் செயலாளருக்கு விரிவாக எடுத்துக் கூறியதாகவும் அவர் கூறினார். இந்த நியாயங்கள் குறித்து விசேட கவனம் செலுத்திய அவர் இலங்கைக்கான ஹஜ் கோட்டாவை அதிகரிப்பதற்கான கோரிக்கை குறித்து திருப்திகரமான வகையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமென்று கூறியதாகவும் அவர் சொன்னார்.

அந்த வகையில் இவ்வருடம் இலங்கை முஸ்லிம்களுக்கான ஹஜ் கோட்டா 6 ஆயிரம் வரை அதிகரித்து கிடைக்கப் பெறுமென்றும் பிரதியமைச்சர் காதர் நம்பிக்கை தெரிவித்தார். மேற்படி சந்திப்பு வெற்றிகரமாக இடம் பெற்றதாகவும் பிரதி அமைச்சர் கூறினார்.

No comments

Powered by Blogger.