Header Ads



இஹ்வானுல் முஸ்லிமினின் எதிராளியும் வெற்றி பெற்றதாக கூறுகிறார்..!


எகிப்து அதிபர் தேர்தலில் தங்களது வேட்பாளார் முஹம்மது முர்ஸி வெற்றிப் பெற்றதாக முஸ்லிம் சகோதரத்துவ இயக்கமான இஃவானுல் முஸ்லிமீனின்  அறிக்கை வெளியிட்டதைத் தொடர்ந்து முன்னாள் சர்வாதிகாரி ஹுஸ்னி முபாரக்கிற்கு நெருக்கமான முன்னாள் பிரதமர் அஹ்மத் ஷஃபீக், தானும் வெற்றிப் பெற்றுள்ளதாக கூறியுள்ளார். இதனால் அதிபர் தேர்தலில் யார் வெற்றிப் பெற்றார் என்பது குறித்த நிச்சயமற்ற சூழல் நிலவி வருகிறது.

முஹம்மது முர்ஸி 12.7 மில்லியன் வாக்குகள் பெற்று வெற்றிப் பெற்றதாக இஃவானுல் முஸ்லிமீன் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தது. ஆனால், சில மணிநேரங்களுக்குள் 52 சதவீத வாக்குகளை தாம் பெற்றுள்ளதாக அஹ்மத் ஷஃபீக் ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

ஆனால், யாருடைய வெற்றியும் அதிகாரப்பூர்வமாக இதுவரை அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் எகிப்தை ஆளும் ராணுவ அரசு(SCAF) தம் வசம் கூடுதல் அதிகாரங்கள் இருக்கும் வகையில் சட்டம் இயற்றியதைத் தொடர்ந்து அதிபர் தேர்தல் முடிவு குறித்த நிச்சயமற்ற நிலைமை நீடிக்கிறது.

ஜூன் மாத இறுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிவிலியன் அரசிடம் அதிகாரத்தை ஒப்படைக்கப் போவதாக ராணுவ கவுன்சில் அறிவித்துள்ளது. ஆட்சியை கையாண்டுவரும் ஜெனரல்களில் ஒருவரான முஹம்மது அல் அஸார் இதனை தெரிவித்தார்.

கடந்த வாரம் எகிப்து பாராளுமன்றத்தை உச்சநீதிமன்றம் கலைத்ததைத் தொடர்ந்து ராணுவ கவுன்சில் சுயமாக சட்டம் இயற்றியுள்ளது. நாட்டின் பட்ஜெட்டை முற்றிலும் தம் கட்டுக்குள் வைத்திருக்கும் அதிகாரத்தை ராணுவ கவுன்சிலுக்கு வழங்குவதே புதிய சட்ட உருவாக்கத்தின் முக்கிய நோக்கமாகும். இதன் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபருடைய அதிகாரங்களை பறிப்பதாகும்.

தேர்தலில் முஹம்மது முர்ஸி அதிகாரப்பூர்வமாக வெற்றிப் பெற்றதாக அறிவிக்கப்பட்டால் எகிப்தின் இரு துருவங்களான ராணுவத்திற்கும், இஃவானுல் முஸ்லிமீனுக்கும் இடையே அதிகாரப் போட்டியை உருவாக்க இச்சட்டம் வழிவகுக்கும்.

எகிப்தில் முதல் மக்கள் அதிபராக முஹம்மது முர்ஸி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக ஃப்ரீடம் அண்ட் ஜஸ்டிஸ் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள இணையதளம் முதன் முதலில் அறிவித்தது. இதனைத் தொடர்ந்து கெய்ரோவில் கட்சி தலைமையகத்தில் நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பில் முர்ஸி, தாம் வெற்றிப் பெற்றதாக அறிவித்தார். 52.5 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளதாக முஹம்மது முர்ஸி தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து ஷஃபீக்கும் தாம் வெற்றிப்பெற்றதாக அறிக்கை வெளியிட்டார். ராணுவம் தம் வசம் கூடுதல் அதிகாரங்களை வைத்துக்கொள்வது எகிப்தில் கடும் எதிர்ப்பை உருவாக்கியுள்ளது.

No comments

Powered by Blogger.