Header Ads



எகிப்தின் தரீர் சதுக்கம் மீண்டும் அதிருகிறது..! அமெரிக்காவும் எச்சரிக்கை..!!



எகிப்து மக்களால் தேர்வுசெய்யப்பட்ட சிவில் அரசிடம் முழு அதிகாரத்தையும் வழங்குமாறு ஆளும் இராணுவ கவுன்ஸிலுக்கு அமெரிக்கா அழுத்தம் கொடுத்துள்ளது. அவ்வாறு செய்ய தவறும் பட்சத்தில் பில்லியன் டொலர் கொண்ட எகிப்துக்கான இராணுவ மற்றும் சிவில் உதவிகள் குறித்து மீள் பரிசீலனை செய்ய வேண்டி வரும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது.

அமெரிக்க இராஜாங்க திணைக்களம் மற்றும் பாதுகாப்பு தலைமையகமான பென்டகன் ஆகியன எகிப்துடன் நெருங்கிய உறவை கடைபிடித்து வருகிறது. எனினும் எகிப்தை ஆளும் இராணுவ கவுன்ஸில் தேர்தல் மூலம் தேர்வு செய்யப்பட்ட ஜனாதிபதியின் அதிகாரங்களை மட்டுப்படுத்தி நாட்டின் முழு அதிகாரங்களையும் தன்னிடம் தக்க வைக்கும் வகையிலான இடைக்கால அரசியல் அமைப்பொன்றை பிரகடனப்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்தே அமெரிக்கா மேற்படி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த பிராந்திய நட்பு நாடான எகிப்தில் கடந்த ஆண்டு ஏற்பட்ட ஹொஸ்னி முபாரக் அரசுக்கு எதிரான மக்கள் எழுச்சிக்கு பராக் ஒபாமா நிர்வாகம் ஆதரவளித்திருந்தது. எனினும் எகிப்தில் இஸ்லாமிய அமைப்பான முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் வளர்ச்சி குறித்து வொஷிங்டன் கவலையடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்த எகிப்தின் இரண்டாம் சுற்று ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் வேட்பாளர் மொஹமட் முர்சி வெற்றி பெற்றதாக அந்த அமைப்பு அறிவித்துள்ளது. எனினும் இந்த தேர்தலில் தாமே வெற்றிபெற்றதாக எதிர்த்து போட்டியிட்ட அஹமட் ஷபீக் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக்கின் அரசில் பிரதமராக இருந்த அஹமட் ஷபீக்கின் தேர்தல் பிரசார அலுவலகம் விடுத்துள்ள அறிவிப்பில் தமது கணக்கெடுப்பில் அஹமட் ஷபீக் 52 வீதமான வாக்குகளை வென்றிருப்பதாகவும் முர்சி ஆதரவாளர்கள் மில்லியன் கணக்கான வாக்கு அட்டைகளை எண்ண தவறிவிட்டதாகவும் குறப்பிட்டுள்ளது.

எனினும் எகிப்து ஜனாதிபதி தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகள் நாளைய தினமே வெளியிடப்படவுள்ளது.

எவ்வாறாயினும் சுயாதீன கண்காணிப்பாளர்கள் மற்றும் அரசு ஊடகம் ஆகியன மொஹமட் முர்சி மூன்று அல்லது நான்கு வீத வாக்கு வித்தியாசத்தில் வென்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளன. இந்நிலையில் நாட்டின் முழு அதிகாரத்தையும் தொடர்ந்து தம்மிடமே தக்க வைத்துக்கொண்டிருக்கும் இராணுவ கவுன்ஸிலுக்கு எதிராக முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. ‘மில்லியன் மனிதர்களின் ஆர்ப்பாட்டம்’ என இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அந்த அமைப்பு பெயர் சூட்டியுள்ளது.

இதனிடையே கலைக்கப்பட்ட பாராளுமன்றத்திற்குள் நுழைய எம்.பிக்கள் நேற்று முன்தினம் முயன்றுள்ளனர். எனினும் அங்கு பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருக்கும் இராணுவத்தினர் அவர்களை தடுத்து நிறுத்தியுள்ளனர்.

முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பை பெரும்பான்மையாகக் கொண்ட எகிப்து பாராளுமன்றம் இராணுவ கவுன்ஸிலால் கடந்த வெள்ளிக்கிழமை கலைக்கப் பட்டது.

இதேவேளை, தேர்வாகும் புதிய ஜனாதிபதியிடம் எதிர்வரும் ஜூன் 30 ஆம் திகதி அதிகாரங்கள் கையளிக்கப்படும் என இராணுவ கவுன்ஸில் அறிவித்துள்ளது. கெய்ரோவில் நேற்று முன்தினம் நடத்திய ஊடக மாநாட்டில் இராணுவ கவுன்ஸில் இந்த அறிவிப்பை வெளியிட்டது. பிரமாண்ட வைபவத்துடன் அதிகார மாற்றம் இடம்பெறும் என இராணுவ கவுன்ஸில் உறுப்பினரான ஜெனரல் மொஹமட் அல் அஸார் குறிப்பிட்டார்.

அதேபோன்று பதவியேற்கும் ஜனாதிபதியின் பதவிக்காலமும் குறுகியதாக இருக்கும் என இராணுவ கவுன்ஸிலின் ஆலோசனைக் குழு தலைவர் சமஹ் அஷவ்ர் குறிப்பிட்டார். ‘பதவி ஏற்கும் புதிய ஜனாதிபதி ஏற்றாலும் ஏற்காவிட்டாலும் அவரது பதவிக் காலம் குறுகியதாக இருக்கும்’ என அவர் கூறினார்.

எகிப்தில் நிரந்தர அரசியல் அமைப்பு நிறைவேற்றப்பட்டதன் பின்னரே ஜனாதிபதியின் பதவிக் காலம் குறித்து தெளிவு கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது. இராணுவ கவுன்ஸில் வெளியிட்ட இடைக்கால அரசியல் அமைப்பின்படி நாட்டில் சட்டம் எழுதுவது, பட்ஜட் அமைப்பது உட்பட அனைத்து அதிகாரமும் இராணுவ கவுன்ஸிலிடமே இருக்கும். இராணுவ கவுன்ஸிலின் அனுமதி இன்றி பதவி ஏற்கும் ஜனாதிபதிக்கு எந்த தீர்மானமும் நிறைவேற்ற முடியாது.



No comments

Powered by Blogger.