Header Ads



இஹ்வானுல் முஸ்லிம்களுக்கு எதிரான குற்றச்சாட்டு எடுபடுமா..?



எகிப்து ஜனாதிபதி வேட்பாளரும் ஹொஸ்னி முபாரக் அரசின் பிரதமருமான அஹமட் ஷபீக் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பை கடுமையாக விமர்சித்துள்ளார். கிறிஸ்தவர்களுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடுவதாகவும் எகிப்தை ஒரு மதவாத நாடாக்க முயற்சிப்பதாகவும் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்புக்கு எதிராக அவர் குற்றம்சாட்டினார்.

எகிப்து தொலைக்காட்சியில் நேற்று முன்தினம் உரையாற்றிய அஹமட் ஷபீக் இவ்வாறு தெரிவித்தார். இதில் ஹொஸ்னி முபாரக் தீர்ப்பை தொடர்ந்து கெய்ரோவில் கூடியுள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள் குறித்து ஷபீக் கூறும் போது, முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு ஒரு மதவாத தேசத்தை உருவாக்க முயற்சிப்பதாகக் குறிப்பிட்டார்.

எனினும் தஹ்ரியார் சதுக்கத்தில் தொடர்ந்து 1000க்கும் மேற்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் கூடியுள்ளனர். இதில் ஹொஸ்னி முபாரக்கின் இரு மகன்களுக்கும் எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து அவர்கள் விடுவிக்கப்பட்டது மற்றும் 6 முன்னாள் அதிகாரிகள் தண்டனையில் இருந்து தப்பியது குறித்து ஆர்ப்பாட்டக்காரர்கள் தமது கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். கடந்த சனிக்கிழமை வழங்கப்பட்ட தீர்ப்பில் ஆர்ப்பாட்டக் காரர்களை கொன்ற குற்றச்சாட்டில் முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக்கிற்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. எனினும் இந்த குற்றச்சாட்டிற்காக முபாரக்கிற்கு மரணதண்டனை விதிக்காததற்கும் தஹ்ரியார் சதுக்கத்தில் கூடியுள்ள ஒரு சில ஆர்ப்பாட்டக்காரர்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

எகிப்து ஜனாதிபதி தேர்தலில் அஹமட் ஷபீக் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் வேட்பாளர் மொஹமட் மொர்சியுடன் இரண்டாவது சுற்றில் போட்டியிடவுள்ளார். இரண்டாவது சுற்று தேர்தல் எதிர்வரும் 16, 17, ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு கிறிஸ்தவர்களின் வாக்களிக்கும் உரிமையை தடுக்கும் முயற்சியில் ஈடுபடுவதாக குறிப்பிட்டுள்ளார். அத்துடன் தாம் ‘நவீன, சிவில் தேசம் ஒன்றை அமைக்க முயற்சிப்பதாகவும் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு நாட்டை இருண்ட யுகத்துக்கு அழைத்துச் செல்வதாகவும் ஷபீக் குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.