Header Ads



சீ.ஐ.டி. யின் பிடிக்குள் பள்ளிவாசல்கள் - நிலைமையை மேலும் மோசமாக்கும் என எச்சரிக்கை

முஸ்லிம் பள்ளிவாசல் தொடர்பான பதிவு விபரங்களையும் அப்பள்ளிவாசல் நிர்வாகிகளின் தனிப்பட்ட தரவுகளையும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சேகரித்து சென்றுள்ளமை குறித்து அரசாங்கம் உண்மை நிலையை வெளிப்படுத்த வேண்டும் ௭ன்று ஐக்கிய தேசியக் கட்சியின் மேல் மாகாண சபை உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து கருத்துத் தெரிவித்த முஜிபூர் ரஹ்மான் கூறியதாவது, முஸ்லிம் கலாசார அலுவல்கள் திணைக்களத்துக்கு சென்றுள்ள குற்றப் புலனாய்வுப் பிரிவினர் பள்ளிவாசல்கள் குறித்த விபரங்களையும் அப்பள்ளிவாசல்களின் நிர்வாகிகளின் தனிப்பட்ட தரவுகளையும் பதிவு செய்து சென்றுள்ளனர்.

குற்றப் புலனாய்வுப் பிரிவுப் பொலிஸார் பள்ளிவாசல்கள் தொடர்பான தரவுகளை சேகரித்துள்ளமை முஸ்லிம் மக்களிடையே பாரிய சந்தேகத்தை உருவாக்கியுள்ளது. இதுகுறித்து அரசாங்கம் உடனடியாக தெளிவுபடுத்த வேண்டும். கடந்தகால சம்பவங்களோடு ஒப்பிடுகையில் இதனை பாரியதொரு சூழ்ச்சியாகவே கருதவேண்டியுள்ளது.

ஏனெனில் அரச நிறுவனமொன்றுக்குச் சென்று பள்ளிவாசல்கள் குறித்தும் அதன் நிர்வாகிகள் தொடர்பிலும் விபரங்களை சேகரிக்க வேண்டிய தேவை குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு இல்லை.

முஸ்லிம்களையும் இஸ்லாத்தையும் தீவிரவாதமாக வெளிப்படுத்துவதற்காகவே இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறுகின்றன. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அரச நிர்வாகம் உடனடியாக தலையிட்டு உண்மையை வெளிப்படுத்த வேண்டும். தம்புள்ளை பள்ளிவாசல் மீதான தாக்குதல் மற்றும் தெகிவளை பள்ளிவாசல் தொடர்பான பிரச்சினைகள் முழுமையாக தீர்க்கப்படுவதற்கு முன்னர் பள்ளிவாசல்கள் தொடர்பில் விபரங்களை குற்றப் புலனாய்வுப் பிரிவுப் பொலிஸார் சேகரித்துள்ளமை நிலைமையை மேலும் மோசமாக்குவதாகவே அமையும். ௭னவே அரசாங்கம் உண்மை நிலையை தெளிவுபடுத்த வேண்டும்.




No comments

Powered by Blogger.