எதிர்வரும் டிசம்பர் மாதம் ஓ.எல். பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர் கவனத்திற்கு..!
எதிர்வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் பரீட்சைகள் திணைக்களத்தினால் பரீட்சார்த்திகளிடமிருந்து கோரப்பட்டுள்ளன.
பரீட்சைக்கு தோற்றவுள்ள பாடசாலை மற்றும் தனிப்பட்ட பரீட்சார்த்திகள் இம்மாதம் (ஜூன்) 30 ஆம் திகதி வரை விண்ணப்பங்களை அனுப்பி வைக்க முடியுமென பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை பாடசாலையிலிருந்து விலகியவர்கள் மாத்திரமே தனிப்பட்ட பரீட்சார்த்திகளாக விண்ணப்பிக்க முடியுமெனவும். அவ்வாறு பாடசாலையில் கற்றுக் கொண்டு தனிப்பட்ட பரீட்சார்த்திகளாக விண்ணப்பிப்பவர்கள் பரீட்சை தடைக்கு உட்படுத்தப்படுவரெனவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்தோடு பரீட்சைக்கு தோற்றும் தனிப்பட்ட பரீட்சார்த்திகள் தமது நிரந்தர வதிவிடத்திற்கு அருகிலுள்ள பரீட்சை மத்திய நிலையம் அமைந்துள்ள நகரத்தையே தெரிவு செய்ய வேண்டும் என்பதோடு, பிரதேச கிராம சேவகரின் உறுதிப்படுத்தல் ஒப்பந்தத்துடன் விண்ணப்பங்களை அனுப்பி வைக்குமாறு திணைக்களம் கேட்டுக் கொண்டுள்ளது.
பரீட்சைகள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள மாதிரி விண்ணப்ப படிவத்தை ஒத்ததாக 28 x 21 செ.மீ. அளவான தாளில் விண்ணப்பத்தை தயாரித்து அதனை சரிவர பூர்த்தி செய்து பரீட்சை ஆணையாளர் நாயகம், பாடசாலை பரீட்சைகள் ஒழுங்கமைப்புக் கிளை, இலங்கை பரீட்சைத் திணைக்களம், தபாற் பெட்டி 1503 , கொழும்பு என்ற முகவரிக்கு பதிவுத் தபாலில் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
இதேவேளை பாடசாலை பரீட்சார்த்திகளுக்கான விண்ணப்பப் படிவங்கள் தபால் மூலம் பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் இதுவரை விண்ணப்பப் படிவங்கள் கிடைக்கப் பெறாத பாடசாலைகள் உடனடியாக பரீட்சைகள் திணைக்களத்தை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Post a Comment