Header Ads



எகிப்தில் தொடர்ந்து சவால்களை எதிர்நோக்கும் இஹ்வான்கள்


எகிப்தின் புதிய அரசியல் அமைப்பை எழுதுவதற்கான சட்டவாக்க குழுவை தேர்வு செய்யும் கூட்டத்தில் இருந்து மிதவாத கட்சிகள் வெளிநடப்பு செய்துள்ளன. இஸ்லாமிய வாதிகள் அதிக ஆசனங்களை ஆக்கிரமிக்க முயற்சிப்பதாக கூறியே கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த கூட்டத்தில் இருந்து மிதவாதிகள் வெளியேறியுள்ளனர்.

இதனால் எகிப்தின் புதிய அரசியல் அமைப்பை தயாரிப்பதற்கான குழுவை தேர்வு செய்வதில் தொடர்ந்தும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எகிப்து ஜனாதிபதி தேர்தலின் இரண்டாம் சுற்று தேர்தல் நடைபெற ஒருவாரமே உள்ள நிலையில் இந்த சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே எகிப்து ஜனாதிபதியின் அதிகாரம் வரையறுக்கப்படாத நிலையிலேயே அங்கு தேர்தல் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

எகிப்தின் இரண்டாம் சுற்று ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் 16,17ம் திகதிகளில் நடைபெறவுள்ளது. இதில் முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் அரசில் பிரதமராக இருந்த அஹமட் ஷபீக் மற்றும் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் மொஹமட் மொர்சி ஆகியோர் போட்டியிடவுள்ளனர்.

எனினும் எகிப்தில் மக்கள் எழுச்சியின் மூலம் கடந்த ஆண்டில் ஹொஸ்னி முபாரக் அரசு கவிழ்க்கப்பட்டதன் பின் அங்கு புதிய அரசியல் அமைப்பை எழுதுவதில் தொடர்ந்தும் சிக்கல் நீடிக்கிறது. முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பினரை பெரும்பான்மையாகக் கொண்ட எகிப்து பாராளுமன்றம் புதிய அரசியல் அமைப்புக்கான 100 பேர் கொண்ட சட்டவாக்க குழுவை கடந்த ஆண்டு தேர்வு செய்தது.

இதில் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு மற்றும் அந்நூர் ஆகிய இஸ்லாமிய கட்சிகள் 70 வீத உறுப்பினர்களை வென்றது. இதற்கு மிதவாதிகள் மற்றும் மத சார்பற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து நீதிமன்றத்தால் அந்த குழு இடைநீக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில் புதிய அரசியல் அமைப்பு குழுவை 48 மணி நேரத்திற்குள் அமைக்க வேண்டும், இல்லாவிட்டால் எகிப்தை ஆளும் இராணுவ கவுன்ஸில் தாமே புதிய அரசியல் அமைப்புக்கான வரைவை முன்வைப்பதாக அரசியல் கட்சிகளுக்கு இராணுவ கவுன்ஸில் கடந்த வாரம் எச்சரிக்கை விடுத்தது.

இந்நிலையில் 100 பேர் கொண்ட அரசியல் அமைப்பு குழுவில் இஸ்லாமியவாதிகளின் பிரதிநிதித்துவத்தை பாதியாக வரையறுக்க 22 அரசியல் கட்சிகளும் கடந்த வெள்ளிக்கிழமை இணக்கம் தெரிவித்தன.

இதன்படி நேற்று முன்தினம் நடந்த புதிய அரசியல் அமைப்பை தேர்வு செய்வதற்கான கூட்டத்தில் 50 வீதமான உறுப்பினர்கள் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு மற்றும் அந்நூர் கட்சிகளுக்கு இடையில் பகிரப்பட தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மிதவாதிகள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளியேறியுள்ளனர். இதற்கு முன்னணி இஸ்லாமிய பல்கலைக்கழகமான அல் அஸ்ஹரும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது.

இது குறித்து மிதவாத கட்சியான சுயாதீன எகிப்து கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எமாத் கட் கூறும்போது, “இஸ்லாமிய மற்றும் மிதவாதிகளுக்கு இடையில் சட்டவாக்கக் குழு உறுப்பினர் 50-50 வீதமாக பகிர தீர்மானிக்கப்பட்டது. ஆனால் இறுதியில் அந்த 50 உறுப்பினர்களும் முஸ்லிம் சகோதரத்துவ மற்றும் சலபி உறுப்பினர்களிடம் இருந்து மாத்திரம் தேர்வு செய்யப்பட்டது எமக்கு அதிர்ச்சி அளித்துள்ளது” என்றார்.

அரசியல் அமைப்பு குழுவின் 50 ஆசனங்கள் முஸ்லிம் சகோதரத்துவ மற்றும் சலபிகளுக்கு இடையில் பகிரப்பட்டால் எஞ்சிய உறுப்பினர்களிலும் ஏனைய இஸ்லாமியவாதிகள் ஊடுருவுவார்கள் என மிதவாத, மதசார்பற்ற கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

இதில் இஸ்லாமிய கட்சியான வசாத் மற்றும் தீவிர கமா இஸ்லாமியா ஆகிய கட்சிகளும் அரசியல் அமைப்பு குழுவுக்கு பிரதிநிதிகளை பரிந்துரை செய்துள்ளன. இவை மிதவாதிகளுக்கான ஆசனங்களில் பெறப்படுகிறது என எமாத் கட் குறிப்பிட்டார்.

இதன்படி பார்த்தால் அரசியல் அமைப்பு குழுவின் 50 ஆசனங்களை முஸ்லிம் சகோதரத்துவ மற்றும் சலபிகள் பெற்றால் எஞ்சிய 50 ஆசனங்களில் 21 ஆசனங்கள் அரச நிர்வாகங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும். பின்னர் மேலும் 11 ஆசனங்கள் எஞ்சிய அரசியல் கட்சிகளுக்கு இடையில் பகிர்ந்தளிக்கப்படும். பின்னர் எஞ்சியுள்ள 18 ஆசனங்கள்தான் ஏனைய முழு எகிப்தியருக்கும் வழங்கப்படும் என்றும் எமாத் கட் மேலும் தெரிவித்தார்.

இதனிடையே மிதவாத கட்சிகளின் நடவடிக்கைக்கு முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு அதிருப்தி வெளியிட்டுள்ளது. சிறிய கட்சிகள் தமது திட்டத்தை பெரிய கட்களுக்கு திணிக்கப்பார்க்கிறது என்று முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் பேச்சாளர் மஹ்முத் கொஸ்லன் குறிப்பிட்டுள்ளார்.

“அவர்கள் பாராளுமன்றத்தில் ஆறு அல்லது ஏழு வீதமான ஆசனங்களை வென்றிருக்கிறார்கள்.

ஆனால் அவர்களது கருத்தை எஞ்சிய 94 வீதமானோருக்கு திணிக்கப்பார்க்கிறார்கள்” என்று கொஸ்லான் குறிப்பிட்டார்.

இது தவிர எகிப்து அரசியலில் மேலும் சிக்கல்கள் நீடிக்கின்றன. இரண்டாவது சுற்று தேர்தலில் போட்டியிடும் அஹமட் ஷபீக்கின் வேட்பாளர் தகுதி குறித்து எகிப்து நீதிமன்றம் எதிர்வரும் வியாழக்கிழமை தீர்மானிக்கவுள்ளது.

இதில் அவர் தேர்தலில் போட்டியிட தகுதி இழக்கும் பட்சத்தில் அவருக்கு இரண்டாவது சுற்று தேர்தலில் போட்டியிடுவதில் சிக்கல் ஏற்படும்.

இதே தினத்தில் அண்மையில் நடந்த எகிப்து பாராளுமன்ற தேர்தல் சட்ட ரீதியானதா என்பது குறித்தும் நீதிமன்றம் தீர்ப்பு அளிக்கவுள்ளது. இந்த தீர்ப்பு பாதகமாக அமைந்தால் பாராளுமன்றம் கலைக்கப்பட வாய்ப்பு உள்ளது.

No comments

Powered by Blogger.