Header Ads



ஆர்ப்பாட்டங்களை கண்டு நான் அஞ்சமாட்டேன் - பிரிட்டன் பிரதமரிடம் அடித்துக்கூறிய மஹிந்த ராஜபக்ஸ


s fm & tn

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் பிரித்தானிய விஜயம், இலங்கைக்கு பல நன்மைகளை ஏற்படுத்தி கொடுத்துள்ளதாக  ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார். பிரித்தானியாவின் 2 ஆம் எலிசபெத் மகாராணியின் ஆட்சிகால வைரவிழா நிகழ்வில் கலந்து கொள்வதற்காக இலங்கை ஜனாதிபதி அங்கு சென்றிருந்தமை தொடர்பாக ஊடக பிரதானிகளை தெளிவூட்டும் செய்தியாளர் சந்திப்பு  இடம்பெற்றது.

இலங்கை அரச தலைவர் ஒருவர் பிரித்தானியாவுக்கு அண்மையில் மேற்கொண்ட மிக முக்கிய விஜயமாக தாம் கருதுவதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்தநிலையில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரித்தானியா சென்றிருந்த போது புலம் பெயர்ந்த தமிழர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டிருந்தனர்.

எனினும், அவர்களின் திட்டங்கள் எவ்வகையிலும் பயனளிக்காது என ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க குறிப்பிட்டார். ஏனைய நாடுகளின் அரச தலைவர்கள் ஒரு பேருந்தில் அழைத்துச் செல்லப்பட்ட போதும், இலங்கை ஜனாதிபதிக்கு மாத்திரம் குண்டு துளைக்காத வாகனமும், பாதுகாப்பு உறுப்பினர்களின் சேவையும் வழங்கப்பட்டிருந்தன.

இதனடிப்படையில், ஜனாதிபதியின் இந்த விஜயத்தின் ஊடாக புலம்பெயர்ந்தவர்களுக்கு உரிய பதில் வழங்கப்பட்டுள்ளதாகவும், ஜனாதிபதியின் செயலாளர் குறிப்பிட்டார்.

மகாராணியின் ஆட்சிகால நிறைவு நிகழ்வில் கலந்து கொள்வதற்காக இலங்கை ஜனாதிபதிக்கு 7 தடவைகள் அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததாக நிகழ்வில் கலந்து கொண்ட பிரித்தானியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் கிரிஸ் நோனிஸ் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் விஜயத்தின் ஒரே ஒரு நிகழ்ச்சியின் போது மாத்திரம் எல்.ரீ.ரீ.ஈ.யை ஆதரிக்கும் இலங்கையில் இருந்து சென்ற புலம்பெயர்ந்த தமிழர்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்தினார்கள். அதனால் அவர்களுக்கு பிரிட்டிஷ் முதலீட்டாளர்களை சந்திக்கும் வாய்ப்பு கிட்டவில்லை.

மற்றபடி ஜனாதிபதி அவர்கள் கலந்து கொண்ட 6 நிகழ்ச்சிகளும் இலங்கைக்கு நன்மையை ஏற்படுத்தக்கூடிய வகையில் வெற்றிகரமாக நடைபெற்றது என்று நேற்று ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவின் தலைமையில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட பிரிட்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் கறிஸ் நோனிஸ் தெரிவித்தார்.

இந்த சம்பவத்தை அடுத்து, பிரிட் டிஷ் மகாராணியார் கலந்து கொண்ட ஒரு நிகழ்வுக்கு முன்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரிட்டிஷ் பிரதம மந்திரி டேவிட் கெமரூனுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தினார்.

கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை பற்றி இரு தேசத் தலைவர்களும் விரிவான முறையில் கலந்துரையாடினார்கள். இலங்கை அரசாங்கம் வடபகுதியில் மேற்கொண்டு வரும் அபிவிருத்தி நடவடிக்கைகளை பாராட்டிய பிரிட்டிஷ் பிரதம மந்திரி, நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கைகளையும் படிப்படியாக நிறைவேற்ற வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்.

அதற்கு பதிலளித்த ஜனாதிபதி, எங்கள் நாட்டு மக்களுக்கு நல்லதே செய்வேன். அதற்காக நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளை நிச்சயம் நடைமுறைப்படுத்துவேன் என்று உறுதியளித்தார்.

இந்த சந்தர்ப்பத்தில் பிரிட்டிஷ் பிரதம மந்திரி டேவிட் கெமரூன், இலங்கையின் புலம்பெயர்ந்த தமிழர்கள் ஜனாதிபதிக்கு எதிராக பிரிட்டனில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றமை குறித்து தாம் வேதனைப்படுவதாகவும் அதற்காக ஜனாதிபதி அவர்களிடம் கவலை தெரிவித்திருந்தார். அதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, என்னுடைய 42 வருட கால அரசியல் வாழ்க்கையில் இது போன்ற பல நிகழ்வுகளை சந்தித்திருக்கிறேன்.

அதற்காக நான் என்றும் அஞ்சியோ, மனம் குழப்பமடையவோ இல்லை. எனக்கும், எனது பாரியாருக்கும் பூரண பாதுகாப்பை பிரிட்டிஷ் அரசாங்கம் அளித்திருக்கிறது. அதற்காக நான் நன்றியைத் தெரிவிக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

ஜனாதிபதி அவர்களுக்கு பிரிட்டனில் அச்சுறுத்தல் ஏற்படும் என்பதற்காக பிரிட்டிஷ் அரசாங்கம் இலங்கை ஜனாதிபதிக்கும் அவரது பாரியாருக்கும் குண்டுத்துளைக்காத வாகனத்தில் மகாராணியாரின் வைரவிழா நிகழ்வுகளில் பாதுகாப்பாக கலந்து கொள்வதற்கு வசதிகளை செய்து கொடுத்தது.

மற்ற நாடுகளின் அரசாங்கத் தலைவர்கள் பஸ்களில் பயணித்து, இந்த நிகழ்வுகளில் கலந்து கொண்ட போதும் இலங்கை ஜனாதிபதிக்கு இந்த விசேட பாதுகாப்பை பிரிட்டிஷ் அரசாங்கம் வழங்கியதென்று  உயர் ஸ்தானிகர் கிறிஸ் நோனிஸ் மேலும் தெரிவித்தார்.

1 comment:

  1. பிரிட்டன், அமெரிக்கா சொல்வதுபோல், ஆடினால் மகிந்தா மட்டுமல்ல, யாரும் பயப்படத் தேவையில்லை.

    ReplyDelete

Powered by Blogger.