தமிழ் இளைஞர்களின் விடுதலைக்கு உதவிய நான், தமிழ் மக்களின் விரோதி அல்ல - றிசாத்
மன்னாரிலிருந்து இர்ஷாத் றஹ்மத்துல்லா
மீள்குடியேற்ற அமைச்சராக நான் இருந்த போது கிழக்கு மாகாணத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டு இடம் பெயர்ந்த இரண்டு இலட்சம் தமிழ் மக்களையும், வன்னி இறுதி யுத்தத்தில் இருந்து இடம் பெயர்ந்த மூன்று இலட்சம் தமிழ் மக்களையும் அவர்களது சொந்த மண்ணில் அடிப்படை வசதிகளை செய்து கொடுத்து மீள்குடியேற்றினேன். இவ்வாறு மனித நேயத்துடன் தமிழ் மக்களுக்கு நான் இனம்,மதம்,மொழி கடந்து பணியாற்றியுள்ளேன். ஆனால் இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் சில வங்குரோத்து நிலைக்கொண்ட ஆயுதக் குழுக்களில் இருந்து வந்து பாராளுமன்ற உறுப்பினர்களாகியிருக்கின்றவர்களும், அவருக்கு துணைபோகும் சிலரும் என்னை தமிழ் மக்களின் விரோதிகளாக காட்ட முயலுகின்றார்கள் என தெரிவித்த அகில இலங்கை முஸ்லிம காங்கிரஸின் தலைவரும், கைத்தொழில், வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன், பட்டதாரிகளான நீங்கள் உண்மையினை விளங்கிக் கொண்டு அதனை சமூகத்தின் முன் எடுத்துரைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
மன்னார் மாவட்ட பட்டதாரிகள் அமைப்பு மன்னாரில் ஏற்பாடு செய்திருந்த பட்டதாரிகளின் சந்திப்பில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போது அமைச்சர் றிசாத் பதியுதீன் மேற்கண்டவாறு கூறினார்.
மன்னார் மாவட்ட பட்டதாரிகள் சங்க தலைவர் எஸ்.சீலன் தலைமையில் இடம் பெற்ற இந்த நிகழ்வில் அமைச்சர் மேலும் பேசுகையில்,
இந்த மண் என்பது எமது மண், இந்த மண்ணிலிருந்து 1990 ஆம் ஆண்டு முஸ்லிம்கள் புலிகளினால் துரத்தப்பட்ட போது நானும் வெளியேறினேன். புத்தளத்தில் உள்ள அகதி முகாமில் பல வருடங்கள் வலியினை அனுபவித்தவன். அகதி வாழ்க்கை என்பது இந்த நாட்டில் எவருக்கும்,ஏற்படக் கூடாது என்ற பிரார்த்தனையினை செய்பவன் நான். துன்பியல் வாழ்வு என்பதை எவரும் எமக்கு கதைகளாக சொல்லி புரியவைக்கத் தேவையில்லை.
இவ்வாறு புலிகளினால் துரத்தப்பட்ட போதும், யுத்தம் முடிவடைந்த பின்னர் தடுப்பில் இருந்த எத்தனை தமிழ் இளைஞர்களை அவர்களது பெற்றோர்கள், உறவினர்கள்,எனது தமிழ் மக்களுக்கான இணைப்பாளர்கள் பட்டியலிட்டு கொண்டு வந்து தந்த போது, அதனை ஜனாதிபதியுடன், பாதுகாப்பு செயலாளருடன், இரானுவ தலைவர்களுடன் ,அவர்கள் விரும்பி போராளிகளாக செல்லவில்லை. பலவந்தமாக பிடித்து செல்லப்பட்டவர்கள் அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கேட்டு விடுதலை பெற்றுக் கொடுத்து இன்று அவர்கள் அவர்களது உறவுகளுடன் வாழ்வதற்கு வழியேற்படுத்தி கொடுத்துள்ளேன்.
நானும் ஒரு இடம் பெயரந்தவன் என்பதினால் தான் இந்த வறுமையில் வாழும், மக்களது பசி,பட்டினி,துன்பம்,தேவைப்பாடுகள் என்பனவெல்லாம் எனது உள்ளத்திலும் ஊரிப் போயிருக்கின்றது.அவர்களுக்கு உதவி செய்யும் போது அவர்கள் இந்துவா, கத்தோலிக்கரா, மேல்சாதியா, கீழ் சாதியா என்றெல்லாம் நான் பார்த்ததில்லை.அவற்றைறெல்லாம் கடந்து எனது வன்னி மாவட்ட மக்கள் என்ற உணர்வுதான் என்னில் மேலோங்கியிருக்கின்றது.
எமது மக்களது அபிவிருத்திக்கு யாரெல்லாம் எம்மோடு கடந்த காலங்களில் இருந்து உதவி செய்து வருகின்றார்களோ அது இங்கிருக்கும் ராஜன் குரூஸாக ,செல்லத்தம்பு அண்ணனாக, பிரதேச சபை உறுப்பினர் சிலுவை பீரிஸாக இருக்கலாம். இந்த மக்களுக்கு எதையெல்லாம் இவர்கள் கேட்கின்றார்களோ,அதனை பெற்றுக் கொடுப்பதற்கு எனது இரத்த உறவுகளை விடவும் நான் முன்னுரிமை கொடுத்து பணியாற்றிவருகின்றேன்..இந்த பதவியினை நாம் பெற்றுக் கொள்ள அவர்கள் வழங்கிய பங்களிப்பை நாம் ஒரு போதும் மறந்து செயற்பட்டதில்லை.
நானும் இந்த மண்ணில் பிறந்தவன் , இது எனது மாவட்டம் என்ற உணர்வு எமக்கும் இருக்கின்றது. நான் அரசியலுக்கு விரும்பி வந்தவன் அல்ல. அகதி முகாமில் நான் அன்று பட்ட கஷ்டம் இந்த அரசியலுக்கு என்னை தூண்டியது.அந்த தூண்டலால் தான் இன்று ஒரு அமைச்சராக மாறி அகதி சமூகத்திற்காக பல போராட்டங்களை நடத்தி வருகின்றேன்.அந்த போராட்டம் இந்த மாவட்டத்தில் எவறும் அகதி என்ற நாமத்துடன் எங்கும் வாழக் கூடாது என்பதனால்.ஆனால் எந்த மதத்தையும் அழிப்பதோ,அல்லது மதம் சார்ந்தவர்களை அவமானப்படுத்துவதோ எமது நோக்கமுமல்ல,அவ்வாறு ஒரு போதும் நாம் சிந்தித்ததுமில்லை.சிந்திக்கப் போவதுமில்லை.ஆனால் இந்த மண்ணில் பிறந்த, அனைத்து உரிமைகளையும் கொண்ட எனக்கு எதிராக அன்று ஆலயமொன்றில் யாழ்ப்பாணத்திலிருந்து அழைத்து வரப்பட்ட ஆனந்த சங்கரி,சுரேஷ் பிரேமசந்திரன் போன்றவர்கள் எனது முகத்திரையினை கிழிக்க வேண்டும் என்ற பதாகைகளை ஏந்தி நின்றதை ஊடகங்களில் பார்த்தேன்,எங்கிருந்தோ கொண்டுவரப்பட்ட இறக்குமதிகளை கொண்டு இந்த மண்ணை சேர்ந்தவனை அழிக்க வேண்டும் என்று சதி செய்வது சரிதானா இதனது அர்த்தம் என்ன என்பதை உங்களிடம் கேட்க விரும்புகின்றேன்.
நான் எப்போது பாராளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமானம் செய்தேனோ அன்று முதல் இந்த மக்களுக்கு நேர்மையான பணியினை செய்;துவருகின்றோம்,எத்தனையோ கத்தோலிக்க ஆலயங்களுக்கு,இந்து கோயில்களுக்கு நிதியினை ஒதுக்கீடு செய்து கொடுத்துள்ளோம் என்பதை இங்கு நான் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
இன்னுமொரு குற்றச் சாட்டு என்மீது சுமத்தப்படுகின்றதாம்.590 முஸ்லிம்களுக்கும்,10 தமிழர்களுக்கும் நான் உத்தியோகம் வழங்கியுள்ளதாக,ஆனால் அது பிழையான தகவலாகும்,கடந்த 20 வருடங்களாக வெளியேற்றப்பட்ட ஒரு இலட்சத்துக்கம் அதிகமான முஸ்லிம்கள் புத்தளம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வாழ்ந்து வந்தனர்.அவர்கள் வாழ்ந்த பிரதேசங்களில் தொண்டர் ஆசிரியர்களாக பணியாற்றிவர்கள்,மற்றும் இடம் பெயர்ந்த முஸ்லிம்களுக்கான செயலகத்தின் கீழ் கடந்த 13 வருடங்களாக பணியாற்றியவர்கள் இவர்கள் தமது மாவட்டங்களுக்கு செல்ல வேண்டும்என்ற தீர்மானம் அரசால் எடுக்கப்பட்டது.அதன் பின்னர் அவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு இங்குள்ள சில திணைக்களங்களுக்குள் உள்வாங்கப்பட்டனர்.அதில் யாழ்ப்பாணம்,உள்ளிட்ட ஏனைய மாவட்டங்களை சேர்ந்தவர்களும் இருக்கின்றனர்.இது தான் உண்மையான விடயமாகும்.
தமது மண்ணுக்கு திரும்பும் விடயங்களில் தமிழராக , கத்Nhலிக்கர்களாக, முஸ்லிம்களாக இருக்கட்டும். அவர்கள் புத்தளத்திலிருந்தோ, இந்தியாவிலிருந்தோ எங்கிருந்து இந்த மண்ணைச் சேர்ந்தவர்கள் வந்தாலும், அவர்களை அவர்களது சொந்த மண்ணில் மீள்குடியேற்றும் பொறுப்பு எமக்கு இருக்கின்றது.அதனை செய்யும் போது வரும் சதிகள், தடைகள் ,சாவல்கள் என்பனவற்றை முறியடித்து நியாயத்தினை வெற்றிக் கொள்ளும் இப்பயணத்தில் பட்டதாரிகளான நீங்கள் ஆற்ற வேண்டிய பொறுப்பு மிகவும் அவசியமானது. நியமனங்களை அரச துறையில் பெற்றுக் கொள்ள தகுதி பெற்றுள்ள நீங்கள்,பதவிகளை பொறுப்பெடுத்த பிறகு சகலரையும் சமமானவர்கள் என்ற பார்வையோடு பாரக்க வேண்டும் என்றும் அமைச்சர் றிசாத் பதியுதீன் கூறினார்.
இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹூனைஸ் பாருக்,ஆளுநரின் ஆணiயாளர் எஸ் எல்.டீன்,அமைச்சரின் இணைப்பு செயலாளர்களான அலிகான் ஷரீப், முனவ்வர், முஹ்ம்மத் முஜாஹிர், அமைச்சரின் இணைப்பாளர் செல்லத்தம்பு, மற்றும் பிரதேச சபை உறுப்பினர் நவ்சீம், நானாட்டான் பிரதே சபை உறுப்பினர்களான ஞானராஜ், சூசை குளாஸ் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.



Post a Comment