நாட்டில் 20 சதவீத குழந்தைகளுக்கு போசாக்கு குறைபாடு - கட்டாயம் பாலூட்ட கோரிக்கை
இலங்கையில் ஐந்து வயதுக்கு குறைந்த 20 சதவீதத்துக்கும் அதிகமான சிறார்கள் நிறை குறைந்தவர்களாகக் காணப்படுவதாக குழந்தை நல மருத்துவர் பேராசிரியர் ஹரேந்திரா டீ சில்வா தெரிவித்துள்ளார்.
இலங்கையில் வாழும் சிறார்களின் போசாக்கு மட்டம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவில் இங்கு வாழும் 21.1 சதவீதமான சிறார்கள் குறை போசாக்கு மட்டத்தில் உள்ளதாக, குழந்தை நல மருத்துவத்துறையின் பேராசிரியரும், களனிப் பல்கலைக்கழகத்தின் குழந்தை நல மருத்துவபீடத் தலைவருமான பேராசிரியர் ஹரேந்திரா டீ சில்வா தெரிவித்துள்ளார்.
ஒரே வயதைக் கொண்ட 14.7 சதவீதமான சிறார்கள் உடல் நலக்குறைபாட்டைக் கொண்டுள்ளதாகவும், 17.3 சதவீதமான சிறார்கள் குறை வளர்ச்சியைக் கொண்டுள்ளதாகவும் பேராசிரியர் டீ சில்வா தெரிவித்துள்ளார்.
தேசிய போசாக்கு மாதத்தைக் கொண்டாடும் முகமாக யூன் 06 அன்று சுகாதார கல்வித் துறையினரால் மேற்கொள்ளப்பட்ட கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பேராசிரியர் இத்தகவலை வெளியிட்டுள்ளார்.
இலங்கையில் தோட்டத் தொழிலாளர்கள் வாழும் பிரதேசங்களிலேயே போசாக்கு குறைவு மட்டம் அதிகளவில் நிலவுவதாகவும், இங்குள்ள ஆறு மாதம் தொடக்கம் இரண்டு வயதுக் குழந்தைகளில் 25 சதவீதமானவர்கள் இவ்வாறான ஊட்டச்சத்துக் குறைபாட்டைக் கொண்டுள்ளதாகவும், 32 சதவீதமானவர்கள் குறைவளர்ச்சியைக் கொண்டுள்ளதாகவும் பேராசிரியர் டீ சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.
தாய்ப் பாலூட்டுதலின் மூலம் குழந்தைகள் எவ்வாறான ஊட்டச்சத்துக்களைப் பெற்றுக் கொள்கின்றார்கள் என்பது தொடர்பாக 85 சதவீதமான பாலூட்டும் தாய்மாருக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டுள்ள போதிலும், 75 சதவீதமானவர்கள் குழந்தை பிறந்து நான்கு மாதங்களின் பின்னர் பாலூட்டுதலை நிறுத்துவதாகவும் குழந்தை மருத்துவத்துறைப் பேராசிரியர் டீ சில்வா குறிப்பிட்டுள்ளார்.
ஊட்டச்சத்துக் குறைபாட்டை நிவர்த்தி செய்வதற்கு தாய்மார்கள் முதல் ஆறு மாதங்களும் பாலூட்ட வேண்டியது இன்றியமையாத ஒன்று என இவர் பரிந்துரைத்துள்ளார்.

Post a Comment