Header Ads



கட்டாரில் மஹிந்த ராஜபக்ஸ உரை (படங்கள் இணைப்பு)


30 வருடங்களாக பயங்கரவாத அச்சுறுத்தலை எதிர்நோக்கியிருந்த இலங்கை மீண்டும் பிராந்தியத்தின் முக்கிய பொருளாதார மற்றும் வணிக மத்திய நிலையமாக தமது இடத்தை பெற்றுவருவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவிக்கின்றார்.

இலங்கை மக்கள் இன்று முன்னோக்கி சென்று, நிரந்தர சமாதானத்தை அடைவதற்கும், பொருளாதார சுபீட்சத்தை பெற்றுக்கொள்ளவும் தயாராக இருப்பதாக ஜனாதிபதி கூறியுள்ளார். ஒரே நாடு என்ற அடிப்படையில் செயற்பட்டால் மாத்திரமே குறித்த நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்ள முடியுமெனவும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

கட்டாரில் இன்று ஆரம்பமான டோஹா பொருளாதார மாநாட்டின் 12 ஆவது கூட்டத்தொடரில் உரையாற்றிய போதே, ஜனாதிபதி இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

மக்களை பொருளாதார ரீதியில் வலுப்படுத்தவும், நல்லிணக்கத்தின் ஊடாக நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்தவும் தேவையான செயற்பாடுகள் மேற்கொள்வதற்கு இலங்கை அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளதாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

உணவு தன்னிறைவு என்ற இலக்கை நோக்கி இலங்கை துரித கதியில் முன்னேறி வருவதாக தெரிவித்த ஜனாதிபதி, வர்த்தக மற்றும் வணிக நடவடிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு, பிராந்தியத்தின் பொருளாதார மத்திய நிலையமாக மாறுவதே நாட்டின் சங்கல்பம் எனவும் குறிப்பிட்டுள்ளார். கட்டார் அரச தலைவரான ஹமிர் ஷேக் ஹமாட் கலீபா அல்தானியின் அழைப்பை ஏற்று டோஹா பொருளாதார மாநாட்டில் விசேட விருந்தினராக ஜனாதிபதி கலந்துகொண்டுள்ளார்.

இம்முறை டோஹா பொருளாதார மாநாட்டில் 84 நாடுகள் மற்றும் அமைப்புக்களை பிரதிநிதித்துவப்படுத்தி 600 விருந்தினர்கள் கலந்துகொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று அதிகாலை கட்டார் சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்த ஜனாதிபதியை கட்டார் வெளிவிவகார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் வரவேற்றனர். இலங்கையின் அரச தலைவர் ஒருவர் கட்டாருக்கு விஜயம் மேற்கொள்ளும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.




No comments

Powered by Blogger.