Header Ads



நாட்டில் எவரும் அகதியாக வாழக்கூடாது என்பது ஜனாதிபதியின் விருப்பம் - அமைச்சர் றிசாத்

இந்த நாட்டில் எவரும் அகதியாக வாழக்கூடாது எல்லோரும் அவர்களுடைய சொந்த கிராமங்களில் எவ்வித பிரச்சினையும் இன்றி நிம்மதியாக வாழ வேண்டும் என்ற உணர்வோடும் கொள்கையோடும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார் என அமைச்சர் றிஸாத் பதியுதீன் தெரிவித்தார்.

வட மாகாண மீள்குடியேற்றம் தொடர்பான விசேட கலந்துரையாடல் கடந்த செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்தின் ஜெய்க்கா மண்டபத்தில் வட மாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திர சிறி தலைமையில் இடம்பெற்ற போது உரையாற்றுகையிலேயே அமைச்சர் றிஸாத் பதியுதீன் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

யுத்தம் முடிவடைந்த நிலையில் நூற்றுக்கு நூறு வீதம் மீள்குடியேற்றப்படாத மற்றும் மீள்குடியேற்றத்திற்குத் தடையாக உள்ள காரணங்கள் எவை? அம்மக்கள் மீள்குடியமர்வதற்கு செய்ய வேண்டிய வேலைத்திட்டம் என்ன? என்பதனை அடையாளம் கண்டு நிவர்த்தி செய்வதற்காக மாகாண சபையூடாக விசேட திட்டம் அமுல்படுத்தப்பட்டு வருவதாக அமைச்சர் றிஸாத் பதியுதீன் தெரிவித்தார். இந்த நிலையிலே வட மாகாண சபையின் கீழே உள்ள மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய 5 மாவட்டங்களிலும் உள்ள கிராமங்களில் இடம்பெயர்ந்து அகதிகளாக வாழ்ந்து வரும் மக்களும் இலங்கைக்கு வெளியே அகதிகளாக வாழ்ந்து வரும் மக்களும் மீண்டும் அவர்களது சொந்த மாவட்டத்தில் மீள்குடியமர்த்தப்பட வேண்டும் என்பதில் ஜனாதிபதி மிகவும் கவனமாக இருக்கின்றார்.

இந்த மாவட்டத்துக்குப் பொறுப்பான அமைச்சர் என்ற வகையிலே என்னிடமும் மாகாண சபைக்கு பொறுப்பானவர் என்ற வகையில் வட மாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திர சிறியிடமும் இந்தப் பொறுப்பை ஜனாதிபதி ஒப்படைத்துள்ளார்.

இந்த நிலையில் இந்த வேலைத்திட்டத்தினை மாகாண சபையின் ஊடாக அரசாங்க அதிபர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம சேவகர்கள், ஏனைய திணைக்கள தலைவர்கள், மாகாண அமைச்சின் செயலாளர் ஆகியோரை இணைத்து குறித்த தேவைகளை அடையாளம் கண்டு அவற்றை எவ்வாறு பூர்த்தி செய்து கொடுப்பது என்பவை தொடர்பாக குறித்த கலந்துரையாடல் அமைந்துள்ளதாகவும் அமைச்சர் றிஸாத் பதியுதீன் மேலும் தெரிவித்தார்

No comments

Powered by Blogger.