Header Ads



பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவின் ஆவேசம்

கிழக்கு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பயிற்சிப்பீடம் தொடர்பாக அரியநேத்திரன் (பா.உ) அவர்கள் நேற்று (30.05.2012) வீரகேசரி பத்திரிகையில் வெளியிட்ட செய்தி தொடர்பாக பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புழ்ழாஹ் கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளதாக பிரதியமைச்சரின் ஊடகச் செயலாளர் ஏ. எம். ஜெசீம் தெரிவித்துள்ளார்.

கிழக்கு பல்கலைக்கழகத்தின் வைத்திய பீடத்தில் கற்கின்ற பயிற்சியாளர்களுக்கு இதுவரையில் அவர்களுக்கான வதிவிட பயிற்சிகள் வழங்கப்படவில்லை. அதன் மூலம் அந்த பல்கலைகழகத்தில் படிக்கின்ற மாணவர்கள் எதிர்காலத்தில் பல பிரச்சினைகளை எதிர் நோக்குவார்கள். எனவே இது தொடர்பாக மிக விரைவில் கிழக்கு பல்கலைகழகத்திலே வைத்திய துறையிலே கல்வி கற்கின்ற வைத்தியபீட மாணவர்கள் பயிற்சிக்காக அவர்களுக்கான வசதிகள் செய்யப்பட வேண்டுமென  சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதியமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவருமான கௌரவ எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புழ்ழாஹ் அவர்கள் கௌரவ உயர்கல்வி அமைச்சர் எஸ். பி. திசாநாயக்க அவர்களிடமும், உயர்கல்வி அமைச்சரின் செயலாளர் அவர்களிடமும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடமும் பல தடவைகள் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளார்.

அது மாத்திரமல்ல அவர்களுக்கான பயிற்சிகளை முழுமையாக வழங்குவதற்கான வசதிகள் மட்டக்களப்பு வைத்தியசாலையிலே தற்போது போதுமான கட்டிடவசதிகள் இல்லாத காரணத்தினால்தான் அந்த உள்ளக பயிற்சி நெறிகளை வழங்க முடியாதுள்ளதாக அங்கிருந்து தகவல் கிடைத்தது. எனவே அவ்வாறான நிலையில் அந்த பயிற்சிகளில் ஒரு சில பிரிவை தற்காலிகமாக காத்தான்குடி தள வைத்தியசாலையிலே அமைக்க முடியுமெனவும், இதற்கு போதுமான கட்டிட வசதிகள் இருப்பதாகவும் அதன் மூலம் மட்டக்களப்பு வைத்திசாலையோடு காத்தான்குடி வைத்தியசாலையும் இணைந்து இதற்கான உள்ளக பயிற்சிகளை வழங்க முடியுமென்ற ஆலோசனையை கௌரவ பிரதியமைச்சர் அவர்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு முன்வைத்தார்.

அந்த அடிப்படையில் தான் உயர்கல்வி அமைச்சு இது தொடர்பாக சில ஆலோசனைகளையும் ஆராய்ச்சிகளையும் செய்ததே தவிர பாராளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் கூறியதைப்போல உள்ளக பயிற்சிகளை காத்தான்குடிக்கு முழுமையாக மாற்றுவதற்கான எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இது முற்று முழுதான பொய்யான ஒரு கூற்றாகும்.

இது மாத்திரமல்ல அதிலும் இன்னும் அவ்வாறு மாற்றுவதற்கான எந்த ஒரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை. ஒரு சில பயிற்சிகளை மாத்திரம் காத்தான்குடி தள வைத்தியசாலையில் மாற்றுவது தொடர்பான ஒரு ஆலோசனை மாத்திரமே முன் வைக்கப்பட்டது. எனவே இவ்வாறு பாராளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் அவர்கள் சமூக ரீதியிலும் இன ரீதியிலும் சிந்திப்பதை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

கிழக்கு பல்கலைக்கழகத்தில் இருக்கின்ற பயிற்சிகளில் ஒரு சில பயிற்சிகளை மாத்திரம் காத்தான்குடி தள வைத்தியசாலையில் மாற்றுவது எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தப் போவது இல்லை. ஆனால் காத்தான்குடி தள வைத்தியசாலையும் மட்டக்களப்பு வைத்தியசாலையும் இணைந்ததாகவே செயற்படும். ஆகவே இவ்வாறு காத்தான்குடி வைத்தியசாலைக்கு இடம் மாற்றுவது என்பது ஒரு முஸ்லிம்கள் செறிந்து வாழ்கின்ற பகுதிக்கு இடம் மாற்றுவது என்றால் மட்டக்களப்பு வைத்தியசாலையையும் ஒரு தமிழ் வைத்தியசாலையாக கருதுகின்றாரா? என்று கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அவர்களிடம் நான் கேட்க விரும்புவதாக மேலும் பிரதியமைச்சர் ஹிஸ்புழ்ழாஹ் தெரிவித்தார்.

எனவே  மட்டக்களப்பில் இருக்கின்ற வைத்திசாலையும் காத்தான்குடியிலும் இருக்கின்ற வைத்தியசாலையும் மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கான வைத்தியசாலையே தவிர முஸ்லிம்கள், தமிழ் மக்கள் என்று மக்களை பிரித்து தொடர்ந்தும் இவ்வாறான இனவாத கீழ்த்தரமான அரசியல் செய்வதிலிருந்து கௌரவ  பாராளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் அவர்கள் முழுமையாக தன்னை விலக்கிக்கொள்ள வேண்டுமென்று இந்த சந்தர்ப்பத்திலே நான் கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன்.

நாங்கள் முப்பது வருட கால யுத்தத்தின் பின்னர் இனவாதத்தினை அழித்து ஜனாதிபதி தலைமையில் இன்று இனங்கழுக்கிடையில் ஒரு பரஸ்பர உறவினை வளர்த்து வருகின்றோம். இந்த சூழ்நிலையில் கிழக்கு பல்கலைகழகத்தின் உள்ள 6 பயிற்சிகளில் ஒரு பயிற்சியினை காத்தான்குடியில் அமைய வேண்டுமென கோருவதில் என்ன தவறு இருக்கிறது என்று கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் அவர்களிடம் கேட்க விரும்புவதாக பிரதியமைச்சர் ஹிஸ்புழ்ழாஹ் மேலும் தெரிவித்தார்.

தகவல் -  ஏ. எம். ஜெசீம,  ஊடக செயலாளர்
பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புழ்ழாஹ்
சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதி அமைச்சு

No comments

Powered by Blogger.