Header Ads



பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடைபெறுமென முஸ்லிம்கள் அஞ்சுகின்றனர் - டாக்டர் ஜயலத்

தம்புள்ளை பள்ளிவாசல் மீது அண்மையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் குறித்த விசாரணைகள் நடத்தப்பட்டு இன்னும் குற்றவாளிகள் சட்டத்தின் முன நிறுத்தப்படாமையையிட்டு நான் ஆச்சரியப்படுகிறேன் என ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி பொது செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டாக்டர் ஜயலத் ஜயவர்தன தெரிவித்தார்.

குறித்த பள்ளிசாவல் நிறுவகத்தினரால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள போதிலும் விசாரணைகள் மந்த கதியில் இடம்பெறுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பில் அவர் விடுத்துள்ள குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

"இலங்கையில் சட்டம் மற்றும் நீதி ஆகிய மந்தமடைந்துள்ளமை இதற்கு ஓர் உதாரணமாகும். இதுவரை இந்த தாக்குதல் சம்பவம் குறித்த விசாரணைகள் நடத்தப்படாமையினால் குருநாகல், எகலியாகொடை, தெஹிவளை ஆகிய பகுதிகளிலுள்ள முஸ்லிம் பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்படலாம் என்ற அச்சமும் தற்போது முஸ்லிம் சமுதாயத்தில் உருவாகியுள்ளது.

மேலும் எதிர்காலத்தில் இப்படியான ஆலயங்கள் மற்றும் மத வழிபாட்டு  தலங்கள் மீதான தாக்குதல்களுக்கும் இவ்வாறான சம்பவங்கள் உதாரணங்களாகி விடலாம். இலங்கை அரசியல் அமைப்பில் எமது நாட்டு பிரஜைகளுக்கு தத்தமது மத வழிபாடுகளில் ஈடுபடுவதற்கான உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன.

அரசமைப்பின் படி கிடைக்க பெற்றுள்ள இந்த உரிமைகளை பாதுகாக்க அரசாங்கம் மற்றும் பொலிஸார் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்" என்றார்.

No comments

Powered by Blogger.