Header Ads



ஆஸாத்தின் வெறியாட்டத்திற்கு பதிலடி - 7 நாடுகளின் சிரிய தூதுவர்கள் வெளியேற்றம்

சிரியாவின் ஹவுலா நகரில் கடந்த வெள்ளிக்கிழமையன்று நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட 100 பேர் பலியாகினர். இப்படுகொலைக்கு அமெரிக்கா பிரான்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்திருந்தன. ஆனால் இந்த சம்பவத்துக்கு தாங்கள் காரணமல்ல என, சிரியா வெளியுறவுத் துறை தகவல் தொடர்பாளர் ஜிகாத்-அல்-மக்திசி தெரிவித்திருந்தார்.

நேற்று சிரியாவிற்கு வருகை தந்த ஐ.நா.வின் தூதுக்குழு தலைவரான கோபி அனான் இப்படுகொலைக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். அதுமட்டுமின்றி இப்படுகொலைக்கு சிரிய அரசே காரணம் என்று குற்றம் சாட்டினார்.

ஹவுலா நகரில் நடத்தப்பட்ட தாக்குதலின் போது தப்பிப் பிழைத்தவர்கள் அனைவரும் அங்குள்ள கட்டடம் ஒன்றில் தஞ்சம் புகுந்தனர். அங்கு புகுந்த சிரியப்படைகள் குழந்தைகள், பெண்கள் என்றும் பாராமல் அனைவரையும் சுட்டுக் கொன்றுள்ளது என்று கூறினார்.

இதனால் பல உலகநாடுகளும் சிரியாவின் இப்படுகொலையை வன்மையாக கண்டித்துள்ளது மட்டுமின்றி, அந்நாட்டின் நட்பை துண்டித்துக் கொள்ளும் நடவடிக்கைகளிலும் இறங்கியுள்ளன. இதில் முதல்கட்டமாக ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின், கனடா ஆகிய நாடுகள் தங்களது நாட்டில் உள்ள சிரிய தூதர்களை நாட்டை விட்டே வெளியேற்றியுள்ளது. மேலும் பல உலகநாடுகள் சிரியத் தூதர்களை தங்களது நாட்டிலிருந்து விரட்டியடிக்கும் திட்டத்தில் இறங்கியுள்ளன.

சிரியாவில், அதிபர் பஷார்-அல்-ஆசாத்தின் ஆட்சியை எதிர்த்து, கிளர்ச்சியாளர்கள் கடந்த 14 மாதங்களாக போராடி வருகின்றனர். கிளர்ச்சியாளர்களை ஒடுக்க, ராணுவம் மேற்கொண்ட நடவடிக்கையில், 10 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் இறந்துள்ளனர்.

No comments

Powered by Blogger.