Header Ads



வாயை சற்றுத் திறந்து, அன்பாக ஒரு புன்னகை உதிர்க்கவேண்டும் - ஜனாதிபதி மஹிந்த



உலகிலேயே நலன்புரி செயற்பாடுகளில் முதன்மை வகிக்கும் நாடு இலங்கை தான் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். கல்வி, சுகாதாரம், விவசாயம் போன்ற துறைகளில் இலவச சேவையை வழங்குவதுடன் மானியங்களையும் வழங்கி வரும் முதன்மையான நாடாக இலங்கையைக் குறிப்பிட முடியுமெனவும் 13 இலட்சம் அரச ஊழியர்கள், ஐந்து இலட்சம் ஓய்வூதியக்காரர்களுக்கும் சம்பளம், கொடுப்பனவுகளை வழங்குவதுடன் மக்களுக்கான சுமைகளை அரசாங்கம் ஏற்றுக்கொண்டு நலன்புரி நடவடிக்கைகளிலும் இலங்கை முன்னுதாரணமாகத் திகழ்வதாகவும் அவர் தெரிவித்தார்.

சர்வதேச தாதியர் தினம்  அலரி மாளிகையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். இந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி,

ஒரு வருடத்துக்கு இரண்டு அல்லது மூன்று தடவைகள் தாதியர்களை அலரி மாளிகைக்கு அழைத்து நியமனம் வழங்குதல் உட்பட பல்வேறு நிகழ்வுகளை நடத்தி அவர்கள் மத்தியில் உரையாற்றி வருகின்றேன். தாதியர்களின் சேவையொன்றே இலஞ்ச ஊழல்களுக்கு உட்படாதது.

தாதியர்கள் தமது இரண்டு காதுகளையும் திறந்து உன்னிப்பாக செவிமடுக்க வேண்டியவர்கள். அதேபோன்று எப்போதும் இரு கண்களையும் அகல விரித்து ஆராய்ச்சியில் ஈடுபடும் கண்களாகவேண்டும் எனவும் வாயை மட்டும் திறக்காமல் தேவையானபோது மட்டும் அதனைத் திறப்பதை வழங்கப்படுத்திக்கொள்ள வேண்டும் என இங்கு கூறப்பட்டது.

எனினும் நான் ஒன்றைக் கூறவிரும்புகின்றேன். வாயையும் சற்றுத் திறந்து அன்பாக ஒரு புன்னகையை உதிர்க்கவேண்டும். அதன் மூலம் வெளிப்படும் அன்பும் கருணையும் நோயாளிகளுக்கு மிகவும் அவசியமானது. ஆனால் இக்காலங்களில் நாம் ஒருசில தாதியர்களின் திருப்தியற்ற செயற்பாடுகளையே கேட்க முடிகிறது.

அவர்கள் நோயாளிகளோடு பழகும் விதம், அவர்களைப் பராமரிக்கும் வித மும் வித்தியாசமாகியுள்ளதுடன் அவை திருப்தியற்றதாயுள்ளதாக பல முறைப்பாடுகள் எமக்குக் கிடைத்து வருகின்றன. தாதியர் சேவை சம்பளத்துக்காகச் செய்யும் ஒரு தொழிலல்ல. அது ஒரு தேசிய சேவை. மக்களுக்கான சேவையாகும். அதற்கேற்ப மிகுந்த அவதானத்துடனும் அர்ப்பணிப்பு டனும் சேவை செய்வதில் தாதியர் திடசங்கற்பம் பூணவேண்டும்.

தமது பராமரிப்பிலுள்ள நோயாளரை சகோதரர்களைப் போன்று, உறவினர்களைப் போன்று கவனிப்பது மிக அவசியமாகும்.

தாதியர் சேவையில் மட்டுமன்றி பல்வேறு துறைகளிலும் பிரச்சினைகள் உள்ளன. பொருளாதாரப் பிரச்சினை உள்ளது. பிரச்சினை இல்லாதவர்களே கிடையாது. அரச சேவையாளர்களை ஆறு இலட்சத்திற்குக் கொண்டு வந்து அதிலும் மேலும் ஒரு இலட்சத்தைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்த ஒரு கால கட்டத்தை நாம் அறிவோம்.

இன்னுமொருபுரம் விஞ்ஞானத்துறையில் சித்திபெற்றவர்களே தாதியாக முடியும். கலைத்துறையில் சித்திபெற்றவர்கள் அதற்குத் தகுதியானவர்களில்லை எனக் கூறப்படுகிறது. தாதிமார் தொடர்பான பல பிரச்சினைகளை சங்கத்தின் தலைவர் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் என்னோடு பேசி அதற்குத் தீர்வு கண்டார். டாக்டர்மார்களின் பிரச்சினைகள் பலவும் பேச்சுவார்த்தை மூலமாகத் தீர்க்கப்பட்டன. நாம் அப்பிரச்சினைகளுக்குச் சுமுகமாகப் பேசி தீர்வு காணமுடிந்தது. இங்கு தமிழில் உரையாற்றிய ஜனாதிபதி நாம் அனைவரும் இணைந்து நாட்டைக் கட்டியெழுப்புவோம் என தெரிவித்தார்.

 

No comments

Powered by Blogger.