யாழ்ப்பாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை தடுக்க விஷக்கருத்து பரப்புதல்
கொழும்பு வாழ் யாழ் முஸ்லிம் பிரதிநிதிகளுடனான சந்திப்பு- 16 ஏப்ரல் 2012
யாழ் முஸ்லிம் சிவில் சமூகம் யாழ் முஸ்லிம் சமூகத்தின் மீள்குடியேற்றம் தொடர்பில் காத்திரமான முன்னெடுப்புகளை மேற்கொள்வதற்கு முன்வந்துள்ளது.
2009ம் ஆண்டு முதல் இலங்கைத் தேசத்தில் ஏற்பட்டிருக்கும் யுத்தமற்ற சூழல் பொதுவாக இலங்கை மக்கள் மத்தியிலும் குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாண மக்கள் வாழ்வில் புதியவொரு அத்தியாயத்தை ஏற்படுத்தியுள்ளது. யுத்தம் காரணமாக வெளியேற்றப்பட்ட மக்கள் மீண்டும் தமது பூமிகளில் மீளக்குடியேறத் தொடங்கியுள்ளனர்.
அரச, அரச சார்பற்ற நிறுவனங்களின் பங்களிப்புகளுடன் பல்வேறு வேலைத்திட்டங்கள் குறிப்பிட்ட பிரதேசத்தில் முன்னெடுக்கப்படுகின்றன. அதேபோன்று 1990களில் தமிழீழ விடுதலைப் புலிகளினால் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட யாழ்ப்பாண முஸ்லிம்களும் மீண்டும் தமது தாயக மண்ணில் மீளவும் குடியேறுவதற்கான முன்னெடுப்புகளை மேற்கொள்கின்றார்கள்.
இரண்டு மணித்தியாள வெளியேற்றம் சுமார் 21 வருட கால அகதி வாழ்வு என்பன முஸ்லிம்கள் உடனடியாக மீள்குடியேறுவதற்கு உரிய சாத்தியப்பாடுகளை தோற்றுவிக்கவில்லை. இந்நிலையில் எவ்வித திட்டமிடல்களுமின்றிய மீள்குடியேற்ற முன்னெடுப்புகளே இதுவரை மேற்கொள்ளப்பட்டன.
இதன் மூலமாக சிறப்பானதும் வினைத்திறனுடன் கூடிய மீள்குடியேற்ற செயற்திட்டத்தை அமுலாக்குவது சாத்தியமற்றது. இதனை நன்குணர்ந்த யாழ்ப்பாணம் சிவில் அமைப்புகள் அரசியல் சமூக இனத்துவ வேறுபாடுகளுக்கு அப்பால் சென்று சாத்தியமான வினைத்திறனுடன் கூடிய மீள்குடியேற்ற செயற்திட்டமொன்றினை “யாழ் முஸ்லிம் மீள்குடியேற்றம்- சிவில் சமூக முன்னெடுப்புகள்” என்னும் மகுடத்துடன் முன்னெடுக்க தீர்மானித்துள்ளார்கள்.
இச்செயற்திட்டத்தை கூட்டாக முன்னெடுக்கின்ற உடன்பாட்டினை பின்வரும் நான்கு அமைப்புகள் எட்டியுள்ளன.
1. சமூக கல்வி அபிவிருத்தி அமைப்பு (செடோ) 1998கள் முதல் யாழ் முஸ்லிம்களின் சமூக கல்வி மேம்பாடுகளில் அக்கறையுடன் தொழிற்பட்ட ஒரு சமூக சேவை நிறுவனமாகும்.
2. தகவல் வழிகாட்டல் மத்திய நிலையம்- யாழ்ப்பாணம், 2010 முதல் யாழ்ப்பாணம் முஸ்லிம்களை சிந்தனா ரீதியாக வழிகாட்டுவதை இலக்காகக்கொண்ட அமைப்பாகும்.
3. யாழ் முஸ்லிம் நிபுணர்கள் மன்றம், 2009 முதல் யாழ் சமூகத்தில் காத்திரமான மீள்குடியேற்றம் சமூகக் கட்டமைப்புகளை ஏற்படுத்தும் நோக்கில் ஸ்தாபிக்கப்பட்ட அமைப்பாகும்.
4. ஹிறா கல்வி மறுமலர்ச்சி அகடமி – யாழ்ப்பாணத்திலும், யாழ்ப்பாணத்திற்கு வெளியிலும் வாழ்கின்ற முஸ்லிம் மாணவர்களின் கல்வி மறுமலர்ச்சியை அடிப்படையாகக் கொண்ட அமைப்பாக இது அமைகின்றது.
எனவே மேற்படி வேலைத்திட்டம் தொடர்பாக யாழ் மாவட்ட முஸ்லிம்களுக்கு விளக்கமளிக்கும் சந்திப்புக்களை குறித்த அமைப்புகளின் பிரதிநிதிகள் மேற்கொள்கின்றார்கள், அந்தவகையில் அதன் முதலாவது சந்திப்பு கொழும்புவாழ் யாழ் முஸ்லிம் சம்மூகத்துடன் நேற்று (16-04-2012) தெஹிவளை ஜயசிங்க மண்டபத்தில் இடம்பெற்றது.
இதில் கொழும்புவாழ் யாழ் சமூகப்பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டார்கள். குறித்த சந்திப்பில் “யாழ் முஸ்லிம் மீள்குடியேற்றம்- சிவில் சமூக முன்னெடுப்புகள்” என்னும் கருத்திட்டம் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டது, அதன்போது,
யாழ்ப்பாண முஸ்லிம் சமூகத்தின் மீள்குடியேற்ற செயற்திட்டமானது விஞ்ஞானரீதியில் வடிவமைக்கப்பட்டு பின்வரும் நான்கு பிரதான அடிப்படைகளில் மேற்கொள்ளப்படுதல் வேண்டும் என்ற கருத்திட்டத்திற்கு அமைய முன்னெடுக்கப்படும் என குறித்த அமைப்புகள் உடன்பாடு கண்டிருக்கின்றன.
1. மீள் உரிமை கோருதல் அல்லது மீள் அடையாளப்படுத்தல்
2. மீளத்திரும்புதல்
3. மீள் நிர்மாணம்
4. நல்லிணக்கம்
யாழ்ப்பாணம் கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளனத்தின் மீள்குடியேற்ற செயற்பாடுகளுக்கு மேலும் வலுச்சேர்க்கும் விதத்தில் 40 உப கருத்திட்டங்களை உள்ளடக்கியதாக குறித்த வேலைத்திட்டம் அமைய இருக்கின்றது எனவும் குறித்த சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஒரு சிலர் யாழ்ப்பாணத்தில் முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் நடைபெறக்கூடாது என்பதற்காக விஷக்கருத்துக்களைப் பரப்பிவருகின்றமை குறித்தும் குறித்த சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டது.
உண்மையில் யாழ்ப்பாணத்தில் நடைபெறுகின்ற பிரமாண்டமான அபிவிருத்தித்திட்டங்கள், அதனால முஸ்லிம்களுக்கு ஏற்படவிருக்கும் வர்த்தக வாய்ப்புகள், வேண்டுமென்றே இருட்டடிப்புச் செய்யப்படுகின்றமை, முஸ்லிம்களின் காணிகளை அடிமட்ட விலைப்பெறுமதிக்கு அபகரிப்புச்செய்ய எடுக்கப்படும் முயற்சிகள், சுய நல நோக்குடைய அரசியல்வாதிகளின் தவறான வழிநடாத்தல்கள், குறித்தும் குறித்த சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டது.
சந்திப்பில் கலந்துகொண்ட முக்கிய பிரமுகர்கள், குறித்த 4 அமைப்புகளினதும் முயற்சியை பாராட்டியதுடன், அதனை முன்னெடுப்பதற்கு தம்மாலான முழுமையான ஒத்துழைப்புக்களையும் நல்குவதாகவும் தெரிவித்தனர். இவ்வாறான சந்திப்புக்கள் தொடர்ந்தும் ஏற்பாடு செய்யப்படவேண்டும், அதுவே யாழ்ப்பாண முஸ்லிம்களின் அடையாளத்தை உறுதிப்படுத்த உதவும் என்றும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.
நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் ஏற்பட்டாளர்கள் நன்றி தெரிவித்து, இவ்வாறான சந்திப்புகள், யாழ்ப்பாணம், புத்தளம், நீர்கொழும்பு, வவுனியா ஆகிய பிரதேசங்களிலும் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தனர்.

தலையை விட்டு வலைப் பிடிக்கின்றீர்கள்.
ReplyDeleteமேற்படி கூட்டம் நடைபெற இருந்த செய்தியை இரண்டொரு நாட்களுக்கு முன்னமே பிரசுரிக்கத் தவறி விட்டீர்கள்.
இது யாழ்ப்பாண முஸ்லீம்களுக்கு மத்தியில் ஒருங்கிணைப்பு போதிய அளவில் இல்லை என்பதனையே சுட்டிக் காட்டுகின்றது.
இவ்வாறான குறைபாடுகள் களையப்பாடல் வேண்டும்.
யாழ் முஸ்லிம் இணையத்தளம் ஏனைய செய்திகளுக்கு கொடுக்கும் அதே அளவான முக்கியத்துவத்தை யாழ்ப்பாண முஸ்லீம்கள்
தொடர்பான செய்திகளுக்கும் வழங்க வேண்டும், அல்லது அதிக முக்கியத்துவத்தை வழங்க வேண்டும்.
யாழ்ப்பாண முஸ்லீம்கள் தொடர்பான முக்கிய செய்திகளை மட்டும் வெளியிடுவது என்றில்லாமல்,மார்க்கத்துக்கு முரணில்லாத சிறு சிறு ஒன்றுகூடல்கள், கலாச்சார நிகழ்வுகள்,ஜும்மா பயான்கள், கலந்துரையாடல்கள், ஒஸ்மானியா
பாடசாலையில் நடைபெறும் பரீட்ச்சை முதற்கொண்டு பாடசாலை தமிழ்த்தினப் போட்டி போன்ற
அன்றாடச் செய்திகளுடன், யாழ்ப்பாண சந்தையில் முக்கிய பொருட்களின் விலை விவரங்கள்,
யாழ்ப்பானத்திட்கே உரிய பாரம்பரிய பொருட்கள், மீன்வகைகள், இறால், கருவாடு போன்றவற்றின் விலை விபரங்கள், யாழ்ப்பாணத்தில்
பனங்காய், பனங்கிழங்கு, கடல் பொருட்கள் போன்றவற்றிட்கான பருவ காலங்களின் ஆரம்பம், விலை விபரங்கள் என்பவற்றை
வெளியிடல் வேண்டும்.
இவ்வாறான செய்திகள் யாழ்ப்பாணத்தை இரு தசாப்தகாலமாக பிரிந்திருக்கும் மக்களிடம் நிச்சயமாக யாழ்ப்பாணம் பற்றிய
உணர்வுகளை ஏற்படுத்தவும், யாழ்ப்பானத்துடனான பிணைப்புகளை மேற்கொள்ளவும் உதவும்.
இது மீள்குடியேற்றத்துக்கான ஊந்துதலாகவும் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.
இவை குறித்து அதிக கவனம் செலுத்துங்கள்.
யாழ்ப்பணத்தில் பொருத்தமான நபர்களை தேர்ந்தெடுத்து செய்திகளை பெற்றுக் கொள்ளுங்கள்.