Header Ads



தலிபான்களின் அதிரடியில் அதிர்ந்தது ஆப்கானிஸ்தான் (வீடியோ)


ஆப்கானிஸ்தானில் பார்லிமென்ட், ஜெர்மன், ரஷ்ய தூதரகங்கள், நட்சத்திர ஓட்டல்கள் உள்ளிட்ட இடங்களில், தலிபான்கள் தொடர் தாக்குதலை நடத்தினர். ஆப்கானிஸ்தானில், அமெரிக்க தாக்குதலால் ஆட்சியை இழந்த தலிபான்கள், அரசுக்கு எதிராக பல்வேறு வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். காபூல் நகரில் உள்ள ரஷ்யா மற்றும் ஜெர்மன் தூதரகம், நேட்டோ படைகளின் தலைமை அலுவலகம், பார்லிமென்ட் கட்டடம் உள்ளிட்ட ஏழு இடங்களில் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

தற்கொலை படை தாக்குதல் :ஜலாலாபாத் மாவட்டத்தில் உள்ள ராணுவ தளத்தின் மீதும், விமான நிலையத்தின் மீதும், தற்கொலை படை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. லோகர் மற்றும் பக்டியா மாகாணங்களிலும் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

பார்லிமென்டை கைப்பற்ற முயற்சி: காபூலில் பார்லிமென்ட் மீதும், ரஷ்ய தூதரகத்தின் மீதும் ராக்கெட் தாக்குதலை நடத்தினர். தலிபான்கள் சிலர் பார்லிமென்டுக்குள் நுழைய முயன்றபோது, அங்கிருந்த பாதுகாவலர்கள் அவர்களை அனுமதிக்கவில்லை.ஜெர்மன் தூதரகத்தின் மீது நடந்த தாக்குதலில், அந்த கட்டடத்தில் தீப்பிடித்து கரும்புகை பரவியது.பிரிட்டன் தூதரக அதிகாரிகள் தங்கியிருந்த வீட்டின் மீது இரண்டு ராக்கெட்கள் ஏவப்பட்டு, தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

காபூலில் சமீபத்தில் கட்டப்பட்ட நட்சத்திர ஓட்டல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில், அந்த கட்டடம் தீப்பற்றி எரிந்தது. இந்த ஓட்டலை தலிபான்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.உஷார் நிலைஇந்த தாக்குதலை கேள்விப்பட்ட அமெரிக்க தூதரகம், சைரன் ஒலியை எழுப்பி, தனது ஊழியர்களை பாதுகாப்பான இடத்தில் தங்கும்படி அறிவித்தது.

47 தலிபான்கள் பலி:ஆப்கானிஸ்தானின், 11 மாகாணங்களில் நேற்று முன்தினம் முதல், நேற்று வரை பாதுகாப்புப் படையினர், நேட்டோ படையினருடன் சேர்ந்து நடத்திய அதிரடி நடவடிக்கையில், 47 தலிபான்கள் கொல்லப்பட்டனர். 31 பேர் காயமடைந்தனர். 21 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. ஹெராத் மற்றும் தகார் மாகாணங்களில் தலிபான்கள் வைத்த இரண்டு கண்ணி வெடிகள் செயலிழக்கச் செய்யப்பட்டன.

ஆப்கானிஸ்தான் பாதுகாப்புப் படையினரின் இந்த நடவடிக்கைக்கு, பதிலடி கொடுக்கும் விதமாக தலிபான்கள் நேற்று, பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.தங்கள் அமைப்பினர் நடத்திய இந்த தாக்குதலில், விரோதிகள் பலர் கொல்லப்பட்டு விட்டதாக, தலிபான் தகவல் தொடர்பாளர் சபியுல்லா தெரிவித்துள்ளார்.




No comments

Powered by Blogger.