வீட்டில் தூங்கிய 6 மாத குழந்தையை கடித்துக்கொன்ற தெரு நாய் - ஆசிரியை வீட்டில் சம்பவம்
வீட்டுக்குள் தூங்கிக் கொண்டிருந்த, ஆறு மாத ஆண் குழந்தையை, தெரு நாய் ஒன்று தூக்கிச் சென்று கடித்துக் குதறி கொன்ற கோர சம்பவம் ஆந்திராவில் நடந்துள்ளது.
ஆந்திரா அனந்தபுரம் மாவட்டம், கணோகல்லு நகரை அடுத்த எர்றகுண்டா கிராமத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில், ஆசிரியராகப் பணியாற்றுபவர் திப்பண்ணா. இவருக்கு திருமணமாகி, 3 வயதில் பெண் குழந்தை உள்ளது. ஆறு மாதத்திற்கு முன் ஆண் குழந்தை பிறந்தது.
நேற்று முன்தினம் அதிகாலை, கிராமத்தில் மின்தடை ஏற்பட்டதால், காற்றுக்காக வீட்டின் கதவைத் திறந்துவிட்டு, இரு குழந்தைகளுடன் ஆசிரியர் தம்பதியினர் தூங்கிக் கொண்டிருந்தனர். அதிகாலை, 5.30 மணிக்கு இவரது வீட்டிற்குள் புகுந்த தெரு நாய் ஒன்று, தூங்கிக் கொண்டிருந்த, ஆறு மாத ஆண் குழந்தையை வாயில் கவ்வியபடி எடுத்துச் செல்வதை தெருவில் வசிப்பவர்கள் கண்டனர்.
இதையடுத்து, நாயைத் துரத்திச் சென்றவர்கள் குழந்தையை மீட்பதற்குள், குழந்தையின் தலைப்பகுதியை, அந்த நாய் கடித்துக் குதறி காயப்படுத்திவிட்டது. குழந்தையில் உடலில் இருந்து அதிகளவில் ரத்தம் வெளியேறியதால், அக்குழந்தை பரிதாபமாக இறந்துவிட்டது. குழந்தையை கொன்ற தெரு நாய் புதருக்குள் ஓடி மறைந்தது.
தகவல் அறிந்த குழந்தையின் பெற்றோர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது, குழந்தை இறந்து போனதை கண்டு கதறி அழுதனர். இச்சம்பவம் அக்கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Post a Comment