Header Ads



இலங்கை சிறுவர்களை பீடித்துள்ள கணனி விளையாட்டு ஆபத்தானது - மனநல மருத்துவர்

அபிவிருத்தி அடைந்த நாடுகளைப் போன்றே தற்போது இலங்கையிலும் கணனி விளையாட்டுக்களினால் பல்வேறு பாதிப்புக்கள் ஏற்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக இளம் தலைமுறையினர் டிஜிட்டல் யுகத்திற்கு தங்களை அடிமையாக்கிக் கொண்டுள்ளனர்.

கணனி விளையாட்டுக்கள் மற்றும் இணைய பயன்பாடு இளம் தலைமுறையின் ஆக்கத் திறன்களையும் கலாச்சார விழுமியங்களையும் பறித்துச் சென்றுள்ளது. குறிப்பாக நகரப் பகுதிகளில் மட்டுமன்றி கிராமப் பகுதிகளிலும் கணனி விளையாட்டுக்கள் மீது இளம் தலைமுறையின் மோகம் அபரிமிதமான அளவில் வளர்ச்சியடைந்துள்ளது.

கணனி சார் அறிவு நாட்டின் அபிவிருத்திக்கும் தனிமனித வளர்ச்சிக்கும் மிகவும் முக்கியமானது என்பதனை மறுப்பதற்கில்லை. எனினும், தற்போதைய இளம் சமூகத்தினர் கணனியை எவ்வாறு பயன்படுத்துகின்றனர் என்பதில் சிக்கல் நிலைமை காணப்படுகின்றது.

இளைஞர் யுவதிகள் மட்டுமன்றி பாடசாலை மாணவர்களும் கணனியை பொழுது போக்கு நோக்கத்திற்காகவே அதிகளவில் பயன்படுத்துகின்றனர் என்பது வருத்தத்திற்குரியது. இலங்கையின் சில நகர் பகுதிகளில் பத்து வீதமான சிறுவர் சிறுமியர் கணனி விளையாட்டுக்களில் கொண்டுள்ள அதீத ஆர்வத்தினால் ஏதேனும் ஓர் வகை உளப் பாதிப்பினை எதிர்நோக்கி வருவதாக அண்மைய புள்ளி விபர ஆய்வுத் தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன.

இந்த புத்தாண்டு பண்டிகைக் காலத்தில் கூட மரபு ரீதியான விளையாட்டுக்கள் பொழுது போக்கு அம்சங்களில் ஈடுபடுவதிலும் சிங்கள தமிழ் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த இளம் தலைமுறையினர் கணனி விளையாட்டுக்களில் கூடுதல் ஆர்வம் காட்டுகின்றனர். கணனி விளையாட்டு மற்றும் இணயை பயன்பாட்டுக்கு அடிமையாகும் பல நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருவதாக கிரிபத்கொட ஆதார வைத்தியசாலையின் மனநல மருத்துவர் என்.குமாரநாயக்க தெரிவிக்கின்றார்.

போதைப் பொருள் பயன்பாடு, இணைய மற்றும் கணனி விளையாட்டுக்கு அடிமையாதல் போன்றவற்றை ஓர் உள நலக் குறைபாடாகவே கருதப்பட வேண்டுமென குறிப்பிடுகின்றார். கணனி மீதான மோகம் சிறுவர் சிறுமியரின் அன்றாட வாழ்கைச் சக்கரத்தை மோசமாக பாதிக்கின்றது. குறிப்பாக உணவு உட்கொள்ளல், குளித்தல் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் கூட சிலருக்கு இல்லாம போகக் கூடிய ஆபத்து ஏற்பட்டுள்ளது.

கணனி விளையாட்டுக்களில் நீண்ட நேரம் ஈடுபடுவேர் அதிக கோபம், உடல் அயற்சி, அழுத்தம், மன உலைச்சல், தலைவலி உள்ளிட்ட பல்வேறு நோய்களினால் பீடிக்கப்படுகின்றனர் என மருத்துவர் குமாரநாயக்க தெரிவிக்கின்றார்.

No comments

Powered by Blogger.