Header Ads



அரபு தேசங்களுக்கு நன்றி சொல்கிறது இலங்கை

ஐ.நா. மனித உரிமைகள் பேரவை உள்ளிட்ட விவகாரங்களில் பலஸ்தீனம் உள்ளிட்ட அரபுலகத்தின்  ஆதரவுக்கு இலங்கை நன்றி வெளியிட்டுள்ளது. பலஸ்தீனம் ஜனாதிபதி மொஹமட் அப்பாஸுடன்  இலங்கை வந்துள்ள அந்நாட்டு  வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ரியாழ் என். ஏ. மாலிகியுடன் திங்கட்கிழமை வெளிவிவகார அமைச்சில் நடைபெற்ற சந்திப்பின் பின்னர் அவருடன் இணைந்து நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ்  அரபுலகத்துக்கு  இலங்கை சார்பாக நன்றியை வெளியிட்டுக் கொண்டார்.

“நாம் முகம் கொடுத்த ஐ. நா. மனித உரிமைகள் பேரவை மற்றும் பொதுச் சபைக் கூட்டம் உள்ளிட்ட எமது விவகாரங்களில் நாம் விடுத்த அழைப்புக்கு ஆதரவளித்த பலஸ்தீனத்துக்கும் அரபுலகத்துக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்”  என்று பீரிஸ்  இதன்போது கூறினார்.

இலங்கைக்கும் பலஸ்தீனத்துக்கும் இடையிலான உறுதியான நப்புறவு தொடர்ந்தும் பேணப்பட்டு வருகிறது. எமக்கிடையிலான இருதரப்பு உறவுகள் சிறப்பான புரிந்துணர்வுடன் பேணப்பட்டு வருகிறது.

இரு நாடுகளினதும் ஜனாதிபதிகளுக்கு  இடையிலான சந்திப்பின் போது அரசியல்  ஒத்துழைப்பு, பொருளாதாரம், சுற்றுலா, உயர்கல்வி ஆகிய 4 துறைகளிலும் இரு நாடுகளும் இணைந்து செயலாற்றுவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது”  என்று அமைச்சர் பீரிஸ் மேலும் கூறினார். இதேநேரம் பலஸ்தீனத்தின் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி மாலிகி இங்கு பேசுகையில்,

“இச் சந்திப்பின் போது இருதரப்பு உறவுகள் பற்றிப் பேசினோம். இலங்கைக்கு நாம் ஏற்கனவே ஒத்துழைப்புகளை வழங்கிக் கொண்டிருக்கிறோம்.
நாம் ஒத்துழைப்புகளை வழங்கிவரும் மிகச் சில நாடுகளில் இலங்கையும் ஒன்று. அரசியல், வர்த்தகம் உள்ளிட்ட  விடயங்களில் இலங்கையுடன் தொடர்ந்தும் ஒத்துழைத்து செயல்பட நாம் தயார் . அதற்கான இணக்கத்தையும் வெளியிட்டுள்ளோம்” என்றார்.

No comments

Powered by Blogger.