Header Ads



மஹிந்தவை புகழும் அப்பாஸ் - பலஸ்தீனர் இலங்கையில் உயர்கல்வி கற்க புதிய வாய்ப்பு

இலங்கை - பலஸ்தீன் ஆகிய இரு நாடுகளுக்குமிடையிலான நட்புறவை மேலும் வலுப்படுத்துவதற்கு பலஸ்தீன் ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ¤ம், இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களும் இணக்கம் கண்டுள்ளனர். இரு நாட்டுத் தலைவர்களதும் தலைமையில் கொழும்பில் நடைபெற்ற இருபக்க பேச்சுவார்த்தையின் போதே இந்த இணக்கப்பாடு காணப்பட்டது.

பலஸ்தீன் ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் தலைமையிலான பலஸ்தீன உயர்மட்ட ராஜதந்திரக் குழு இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு கொழும்புக்கு வந்து சேர்ந்தது. இக்குழுவினர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ  தலைமையிலான இலங்கை அரசாங்கத்தின் உயர்மட்ட அரச பிரதிநிதிகளுடன்  இருபக்க பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டனர். ஜனாதிபதி செயலகத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றது. இச்சமயமே மேற்படி இணக்கம் காணப்பட்டது.

இரு நாட்டு மக்களும் நன்மை பெறும் வகையில் இரு நாடுகளுக்கிடையிலான அரசியல், பொருளாதாரம் மற்றும் கலாசாரம் ஆகிய துறைகளின் உறவை மேலும் வலுப்படுவது குறித்து இரு நாட்டு தலைவர்களும் விஷேட கவனம் செலுத்தினர்.

பலஸ்தீன நோக்கத்திற்காக இலங்கை தொடர்பாக அளித்துவரும் ஒத்துழைப்புக்கு பலஸ்தீன் ஜனாதிபதி அப்பாஸ் இச்சமயம் பாராட்டுத் தெரிவித்தார். அதேநேரம் நிலையான சமாதானத்தை ஏற்படுத்தி சுபீட்சத்தை நோக்கி தற்போது இலங்கை பயணிப்பதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

‘உங்களது தலைமைத்துவத்தினால் தான் இதனை அடைய முடிந்துள்ளது. உங்களது வழிகாட்டலின் ஊடாக இலங் கையின் எதிர்காலம் மிகவும் சிறப்பாக அமையும் எனக் கருதுகின்றேன் என்றும் ஜனாதிபதி அப்பாஸ் சுட்டிக்காட்டினார்.

இவ்வேளையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு இலங்கைக்குத் தொடராக அளித்த ஒத்துழைப்புக்காக பலஸ்தீன வெளிவிவகார ஆணைக்குழுவுக்கு முதலில் இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவிப்பதாகக் கூறினார்.

இலங்கை சமாதானத்தின் பலா பலன்களை அனுபவித்துக் கொண்டிருக்கின்றது. இவ்வேளையில் இங்கு நிலவுகின்ற முதலீட்டு வாய்ப்புகளில் கவனம் செலுத்துமாறு பலஸ்தீன வர்த்தக சமூகத்திற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அழைப்பும் விடுத்தார்.

பலஸ்தீனின் கல்வி மேம்பாட்டுக்கு ஒத்துழைப்பு நல்குவதற்கு கிடைத்துள்ள வாய்ப்பையிட்டு இலங்கை பெரிதும் பெருமைப்படுகின்றது. பலஸ்தீன கல்வி திணைக்களத்தின் கீழ் பணிபுரியும் முன்பள்ளி மற்றும் முதலாம் தர வகுப்பு ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கும் வேலைத் திட்டத்திற்கு இலங்கை தற்போது உதவி அளித்து வருவதாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார்.

இதேநேரம் பலஸ்தீன மாணவர்கள் மருந்துவம் மற்றும் பொறியியல் துறைகளில் இலங்கையில் உயர்கல்வியைத் தொடர வாய்ப்புகள் அளிக்கப்படும் எனவும் ஜனாதிபதி கூறினார்.

இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தக நடவடிக்கைகளை வலுப்படுத்து வதற்கு வர்த்தக கவுன்ஸில் ஒன்றும் அமைக்கப்படுவதும் அவசியம். பலஸ்தீனுக் கும், இலங்கைக்கு மிடையிலான உல்லாச பயணத் துறையை மேம்படுத்துவதற் கான கூட்டுவேலைத் திட்டமொன்றும், இரு நாடுகளுக்குமிடையில் உயர் கல்வி துறையில் விரிவுரையாளர்களையும், ஆராய்ச்சியாளர்களையும் பரிமாறுவதற்கான திட்டமொன்றும் செயற்படுத்துவது அவசியம் என்றும் சுட்டிக்காட்டினார்.

இப்பேச்சுவார்த்தையில் சிரேஷ்ட அமைச்சர் அதாவுட செனவிரட்ன அமைச்சர்கள் பேராசிரியர் ஜி. எல். பீரிஸ், பசில் ராஜபக்ஷ, ரிஷாட் பதியுத்தீன், எஸ். பி. திஸாநாயக்கா, பிரதியமைச்சர் நியோமால் பெரேரா, பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் டி குணவர்தன உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டார்கள்.

No comments

Powered by Blogger.