''கிழக்கு முஸ்லிம் முதலமைச்சர் பதவி'' - வெளியார் வேண்டாமென்கிறார் நிசாம் காரியப்பர்
கிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீமை நியமிக்க அரசு தீர்மானித்துள்ளதாக சில ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ள நிலையில், கிழக்கு மண்ணைச் சேர்ந்த ஒருவரே கிழக்கின் முதலமைச்சராக வரவேண்டும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதிச் செயலாளர் நாயகமும், கல்முனை மாநகர பிரதி முதல்வருமான சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் பரபரப்புக் கருத்தை வெளியிட்டுள்ளார்.அதேவேளை, கிழக்கின் முதலமைச்சராக இம்முறை இப்பிரதேசத்தைச் சேர்ந்த முஸ்லிம் மகன் ஒருவருக்கு இடமளிக்க தமிழ்ச்சமூகம் முன்வரவேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி மண்டபத்தில் நேற்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் கௌரவ அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் இக்கருத்துகளை வலியுறுத்தியுள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது:
மறைந்த தலைவர் அஷ்ரப் நாட்டின் பல பகுதிகளிலும் தலைமைத்துவங்களை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுத்துவந்துள்ளார். அந்த வகையில்தான் இப்போதைய தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு அன்று கட்சியில் முக்கிய பொறுப்பை வழங்கி, தேசியப் பட்டியல் மூலம் அவரை நாடாளுமன்ற உறுப்பினராக நியமித்ததுடன் நாடாளுமன்றத்தில் குழுக்களின் பிரதித் தலைவராகவும் அமர்த்தினார்.
அதேவேளை, தலைவர் அஷ்ரப், கிழக்கு மாகாணசபைக்கான முதலாவது தேர்தலில் இந்த மண்ணைச் சேர்ந்த சட்டத்தரணி சேகு இஸ்ஸதீனை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தி எதிர்க் கட்சித் தலைவராக அமர்த்துவதற்கு வழிசமைத்தார் என்பதை நாம் மறந்து விடமுடியாது. இந்தப் பிரதேச மக்களுக்காக உருவாக்கப்பட்ட மாகாணசபையின் ஆட்சியை இந்த மண்ணில் பிறந்த ஒருவரே ஆளவேண்டும். இந்த ஆட்சி அதிகாரத்தை எங்கிருந்தோ வருகின்ற ஒருவரின் கைகளில் ஒப்படைத்துவிட்டு நாம் பின்னர் வருத்தப் படக்கூடாது.
அவ்வாறு நடக்குமாயின் நாம் மேலும் ஐந்து வருடங்கள் ஏக்கத்துடன் காலத்தைக் கடத்த நேரிடும் என்பதை அனைவரும் இப்போதே புரிந்துகொள்ள வேண்டும். எதிர்வரும் கிழக்கு மாகாணசபைத் தேர்தல் மிகவும் முக்கியத்துவமிக்கதாக அமையவுள்ளது. தமிழரின் அங்கீகாரம் பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முதன் முறையாக இத்தேர்தலில் போட்டியிடப் போகிறது.
ஜெனிவா மாநாட்டுக்குப் பின்னர் அமையப் போகின்ற இம்மாகாண சபைக்குக் காணி மற்றும் பொலிஸ் உட்பட பெரும் அதிகாரங்கள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. ஆகையால் இத்தகைய உயர் அதிகாரங்கள் பொருந்திய மாகாணசபையை இந்த மண்ணில் பிறந்த ஒரு முஸ்லிம் மகன் ஆள்வதன் மூலமே எமது பிராந்தியத்தைக் கட்டி யெழுப்பவும், மக்கள் நலன்களை நிறைவேற்றவும் முடியும் என்பதை நான் வலியுறுத்திக் கூறுகின்றேன்.
வடக்கிலும், கிழக்கிலும் மாகாணசபைகளுக்குத் தேர்தல் நடக்கவிருக்கின்ற சூழ்நிலையில் இப்பகுதியில் தமிழ் முஸ்லிம் சமூகங்களிடையே முரண்பாடுகளையும் பிரச்சினைகளையும் தோற்றுவிப்பதற்கு சிங்களப் பேரினவாத சக்திகள் பெரும் சதித் திட்டங்களைத் தீட்டிவருகின்றன. இது விடயத்தில் இரு சமூகத்தினரும் விழிப்புடன் செயற்பட வேண்டும்.
போர்க் காலத்தில் தமிழ் முஸ்லிம் உறவு பாதிக்கப்பட்டிருந்த போதிலும் இப்போதைய சூழலில் அந்த உறவு கட்டியெழுப்பப்பட வேண்டும் என்பதை இரு தரப்பினரும் புரிந்து செயற்படவேண்டும். மறைந்த தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப், தமிழர் விடுதலைக் கூட்டணி மூலமே அரசியலில் ஈடுபட்டார். போர் தலை தூக்கியதாலேயே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியைத் தோற்றுவித்து முஸ்லிம்களுக்காகப் பேச வேண்டிய தேவை ஏற்பட்டது.
இன்று போர் முடி வடைந்திருக்கின்ற சூழ் நிலையில் இரு சமூகங்களும் ஒன்றிணைந்தே தமது சமூகங்களுக்காகப் போராட வேண்டியுள்ளது. ஆனால், இந்த ஒற்றுமையை சீர் குலைத்து அதில் குளிர் காய்வதற்கு சிங்களப் பேரின வாதசக்திகள் முயற்சித்து வருகின்றன. இதற்கு எமது அரசியல் தலைமைகள் துணை போவதற்கு நாம் இடமளிக்கக் கூடாது என்றார்.
yes i am 100% agree with above comment , this typ of Problem makers should be eradicated form our socity but from motherland since we are thinking all srilankans are one nation, what happend to this mad ( Kodarik Kampu )
ReplyDelete