மூக்கை நுழைக்காமல் இருங்கள்
சர்வதே சமூகம் இலங்கை விவகாரத்துக்குள் மூக்கை நுழைக்காமல், தங்களின் சொந்த வேலையைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று மூத்த அமைச்சர் டியு.குணசேகர தெரிவித்துள்ளார். ஜெனிவா தீர்மானம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் நடைபெற்ற சிறப்பு விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இந்த விவாதத்தில் தொடர்ந்து உரையாற்றிய அவர்,
“இறுதிக்கட்டப் போரின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனிதஉரிமை மீறல்கள் தொடர்பாகவே ஐ.நா. மனிதஉரிமைகள் பேரவையில் தீர்மானம் முன்வைக்கப்பட்டது. 1983 கறுப்பு ஜுலை குறித்தோ, 1988ல் இடம்பெற்ற அரச பயங்கரவாதம் குறித்தோ அனைத்துலக மட்டத்தில் யாரும் கேள்வி எழுப்பவில்லை.
போரில் மக்கள் இறப்பது இயல்பு தான் என்று ஆப்கானிஸ்தான் போர் தொடர்பாக அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் கூறினார். ஆனால், உறுதிப்படுத்தப்படாத குற்றச்சாட்டு தொடர்பாக இலங்கை மீது கேள்வி எழுப்பப்படுகிறது. இதன்மூலம் அமெரிக்காவின் இரட்டைவேடம் தெரிகிறது. போரின் இறுதி நாட்களில், சண்டையை நிறுத்தவும், ஐ.நா. படையை அனுமதிக்கவும், அனைத்துலக மட்டத்தில் இருந்து அழுத்தங்கள் வந்தன.
இதனை ஏற்க மறுத்த காரணத்தினால் தான், குரோத நோக்கத்துடன் இலங்கைக்கு எதிரான தீர்மானம் முன்வைக்கப்பட்டது. இந்தியாவை, மேற்கு நாடுகளுடன் சேர்ந்து விட்டதாக கூறும் குற்றச்சாட்டை ஏற்க முடியாது. இங்கு பிரச்சினை ஏற்படும் போது தமிழ்நாட்டில் அதன் பிரதிபலிப்பு வெளிப்படும். இலங்கைக்கு எதிராக வாக்களிக்க இந்தியாவுக்கு உரிமை உள்ளது. அது தொடர்பாக எமக்கு இந்தியாவுடன் எந்தக் விரோதமும் இல்லை.
இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களித்திருந்தாலும், அது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் பாதிப்பை ஏற்படுத்தாது. இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்திருந்தால், மன்மோகன்சிங் ஆட்சியில் இருக்க முடிந்திருக்காது. இரு நாடுகளுக்குடையில் தொடர்ந்து நெருங்கிய உறவு உள்ளது. இந்தியா தந்திரோபாயமாக முன்னெடுப்பை மேற்கொண்டது. இந்தியாவுக்கு உள்ளகப் பிரச்சினை இருக்கும்.
வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்றுதல், தமிழ்நாட்டின் அழுத்தம் காரணமாக இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களித்தது. ஈராக்கிலோ, ஆப்கானிஸ்தானிலோ அமெரிக்கா தலையிடும் போது ஐ.நா வின் அனுமதி பெறப்படவில்லை. ஆனால், இன்று ஐ.நாவின் தலையீட்டுடனேயே எதையும் செய்ய வேண்டியுள்ளது. இதற்கு அனைத்துலக அதிகார மாற்றமே காரணம்.
ஐ.நா.வில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் தோல்வியடையும் என்று நாம் அறிந்திருந்தோம். ஆனால் இந்தத் தோல்வி எமக்கு மட்டுமன்றி முழு நாடுகளுக்கும் ஏற்பட்ட தோல்வி. நாம் கொள்கை ரீதியான காரணத்தின் கீழே இதனை எதிர்த்தோம். தனியொரு நாட்டுக்கு எதிரான தலையீட்டையே நாம் எதிர்த்தோம். நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை வெளியிடப்பட்டு 3 மாதங்களே ஆகின்றன. விமர்சிக்கும் போது நியாயமான முறையில் விமர்சிக்க வேண்டும்.“ என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

புத்திகெட்ட அமைச்சர் சர்வதேச நாடுகளின் உதவி இல்லை என்றால் புலிகளை வெல்ல முடியுமாமோ இது சாதாரண சிங்களவனுக்கு கூடதெரியுமே
ReplyDelete