Header Ads



சர்வதேச அழுத்தத்துக்குள் சிக்கியிருக்கும் இலங்கை மீட்க சகலரும் ஒன்றிணைய வேண்டும் - அமைச்சர் ரிஷாத்

ஜெனீவா மனித உரிமைகள் பேரவைக்கு அமெரிக்கா சமர்ப்பித்திருக்கும் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தால் பாரிய தாக்கம் எதுவும் ஏற்படப் போவதில்லை என தெரிவித்த கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் இது ஒரு மாயை எனவும் சிலர் பூதாகரமாக்கிக் காட்ட முயற்சிப்பவும் சுட்டிக் காட்டினார்.

முப்பது வருடங்களுக்குப் பின்னர் கட்டியெழுப்பப்பட்டு வரும் தமிழ், சிங்கள நல்லுறவை மீண்டும் நிரந்தரமாகப் பிரிக்கும் முயற்சியொன்றே இதனூடாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் விசனம் தெரிவித்தார். கொள்ளுப்பிட்டியிலுள்ள தனது அமைச்சில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஜெனீவாவில் இடம்பெற்று வரும் மனித உரிமைகள் பேரவை அமர்வில்  பங்கேற்பதற்காக நாளை வியாழக்கிழமை ஜெனீவா புறப்படவிருக்கும் நிலையில் அமைச்சர் றிசாத் பதியுதீன் நேற்று விசேட செய்தியாளர் சந்திப் பொன்றை நடத்தினார். அங்கு அவர் மேலும் விளக்கமளிக்கையில் கூறியதாவது,
 
அண்மைக்கால நிகழ்வுகள் சிங்கள தமிழ் பேசும் இனங்கள் மத்தியில் பிளவை ஏற்படுத்தக் கூடிய அச்சுறுத்தல்களையே உருவாக்கி வருகின்றன. அரசாங்கம் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை அமைத்து அதன் சிபாரிசுகளைப் பெற்றுக் கொண்டுள்ளது. இந்தச் சிபாரிசுகளை பாராளுமன்றத் தெரிவுக் குழு மூலம் ஆராய்ந்து 6 மாதங்களுக்கிடையில் அரசியல் தீர்வைக் காணப்போவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார்.

இவ்வாறானதொரு நிலையில் அமெரிக்கா இலங்கை தொடர்பில் தீர்மானமொன்றை ஜெனீவா மனித உரிமைகள் பேரவைக்கு சமர்ப்பித்திருக்கின்றது. இந்தத் தீர்மானம் இலங்கைக்கு பாரிய தாக்கத்தை ஏற்படுத்தப்போவதில்லை. இத வெறும் மாயை மட்டுமே ஆகும். இதனை சிலர் பெரும்பான்மை மக்கள் மத்தியில் பூதாகரமாக்கிக்காட்ட முனைகின்றனர்.

30 வருடங்களுக்குப் பின்னர் கட்டியெழுப்பப்பட்டு வரும் தமிழ்  சிங்கள நல்லுறவை மீண்டும் நிரந்தரமாகப் பிரிக்கும் ஒரு சதி இதன் பின்னணியில் காணப்படுகிறது. நாட்டில் மற்றொரு பாரிய இன விரிசலை ஏற்படுத்த நாம் ஒரு போதும் துணை போகக் கூடாது.

கடந்த காலத்தில் பேரினவாத தலைவர்களின் தவறான வழிநடத்தல்களால் விரும்பத்தகாத பல்வேறு விடயங்கள் அரங்கேற்றப்பட்டன. இதில் பிரதானமானது தான் ஒரு மொழிக் கொள்கை. இதனால் ஏற்பட்ட பின் விளைவுகள் வரலாற்றில் மறக்க முடியாதவையாகும். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பெரும்பான்மை மக்களின் பெரும்பான்மையைப் பெற்று ஆட்சி நடத்தி வருகிறார்.

அவருடன் இணைந்திருக்கும் எனைய தரப்பினரின் ஒத்துழைப்புடனேயே  அரசியல் தீர்வைக் காண வேண்டிய நிலை அவருக்கு உருவாகியுள்ளது. அதன் காரணமாகவே நல்லிணக்க ஆணைக் குழுவின் சிபாரிசுகளை பாராளுமன்றத்திலுள்ள சகல கட்சிகளையும் உள்வாங்கி பாராளுமன்றத் தெரிவுக்குழுவை அமைத்து இதற்கு இணக்கத்தைப் பெற்றுக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். பெரும்பான்மை  சமுகத்தின் இணக்கப்பாட்டுடன் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வை வென்றெடுக்கும் முயற்சியாகவே  இதனை நாம் பார்க்க வேண்டியுள்ளது.

இந்த நல்ல சூழ்நிலையில் நாடு சர்வதேச அழுத்தத்துக்குள் சிக்கியிருக்கின்றது. இதனை நாமனைவரும் இலங்கையர் என்ற உணர்வோடு செயற்பட்டு மீட்சி பெறச் செய்ய வேண்டும். இனங்களின் நல்லுறவு இனியொருபோதும் பாதிப்படைய நாம் இடமளிக்க கூடாது என்றும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.