தலிபான்கள் எமது எதிரிகள் அல்ல, அல்ஹைதாதான் இலக்கு என்கிறது அமெரிக்கா
தலிபான்கள் விஷயத்தில், அமெரிக்கா தற்போது மென்மையான அணுகுமுறையை மேற்கொண்டு வருகிறது. அதற்கு சான்றாக, நேற்று அந்நாட்டின் துணை அதிபர் அளித்த பேட்டியில்,"தலிபான்கள் அமெரிக்காவின் எதிரிகள் அல்ல' எனத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா, ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான்களுடன், ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், அதில் முக்கிய கட்டம் எட்டப்பட்டு விட்டதாகவும், நேற்று முன்தினம் தகவல்கள் வெளியாயின. இந்நிலையில், நேற்று அமெரிக்க துணை அதிபர் ஜோ பிடன் அளித்த பேட்டியில், தலிபான்கள் குறித்துக் கூறியதாவது: தலிபான்கள் அமெரிக்காவின் எதிரிகள் அல்ல. அமெரிக்காவின் நலன்களுக்கு, அவர்கள் பாதகமாக இருப்பதால், அவர்கள் நமது எதிரி என்று, அதிபர் இதுவரை ஓர் அறிக்கை கூட விட்டதில்லை என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். ஒரு வேளை, நம்மோடு ஒத்துழைப்பு தரும் ஆப்கன் அரசைக் கவிழ்த்து விட்டு, நமக்கு கெடுதல் செய்ய முற்படுவார்களானால், அப்போது தான் நமக்கு பிரச்னை. இவ்விவகாரத்தில், இரண்டு பாதைகள் உள்ளன. ஒன்று, அல்-குவைதாவை ஒழிக்க வேண்டும். இரண்டாவது, ஆப்கன் அரசு, தலிபான்களால் கவிழ்க்கப்பட முடியாத அளவிற்கு உறுதிப்படுத்தப்பட வேண்டும். அப்போது தான், இரு தரப்புக்கிடையிலான பேச்சு நடக்கும். இவ்வாறு, பிடன் தெரிவித்தார்.
வெள்ளை மாளிகை ஊடகச் செயலர் ஜே கார்னே, பிடனின் பேட்டியை ஆதரித்து, நேற்று விடுத்த அறிக்கையில், "ஆப்கானிஸ்தான் மீது, அமெரிக்கா படையெடுக்கவில்லை. தலிபான்கள் ஆட்சியில் இருந்தபோது, அமெரிக்கா அங்கு படைகளை அனுப்பவில்லை. அல்-குவைதா அமெரிக்கா மீது நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாகத் தான், அமெரிக்கா படைகளை அனுப்பியது' என்றார்.

Post a Comment