எகிப்தில் 5 ஆவது நாளாக தொடர்ந்து கிளர்ச்சி
எகிப்தில் ராணுவ ஆட்சிக்கு எதிரான கலவரம் ஐந்தாவது நாளாகவும் தொடர்ந்தது. நேற்று காலையில் தாரிர் சதுக்கத்தில் திரண்டிருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு மற்றும் கண்ணீர் புகை குண்டு வீச்சு ஆகியவற்றை நடத்தினர். இதில் பலர் காயம் அடைந்தனர்.எகிப்தில், ராணுவ ஆட்சி உடனடியாக நீக்கப்பட வேண்டும் எனக் கோரி, கடந்த நவம்பர் 18ம் தேதி முதல் தலைநகர் கெய்ரோவில் உள்ள தாரிர் சதுக்கத்தில் சிலர் தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 17ம் தேதி, திடீரென தாரிர் சதுக்கத்தில் இருந்தவர்கள் மீது பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்தி, அவர்களை சதுக்கத்தில் இருந்து விரட்டினர். அன்று முதல் தொடர்ந்து இருதரப்புக்கும் இடையில் மோதல் வலுத்து வருகிறது.இதற்கிடையில், பெண் ஒருவரை இரு போலீசார், அடித்து அவரது உள்ளாடை தெரியும் படி பலரது முன்பாக தரையில் இழுத்து வந்த காட்சி, வெளியுலகுக்குத் தெரிய வந்தது
இதுகுறித்து நேற்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:சில மாதங்களுக்கு முன்பு, ஆட்சிக்கு எதிராக பெண்கள் தங்கள் உயிரையும் துச்சமாக மதித்துப் போராடிய அதே வீதியில் இன்று அவர்கள் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்படுகின்றனர். கடந்த ஆட்சியின் வீழ்ச்சிக்கு பெண்கள் கணிசமான பங்களித்துள்ளனர்.அதேநேரம் இன்று அவர்கள் போலீசால் தாக்கப்படுகின்றனர். இந்த நிலைமை புரட்சியை இழிவுபடுத்தியுள்ளது. இது அந்நாட்டிற்கு உகந்ததல்ல.இவ்வாறு கிளின்டன் தெரிவித்துள்ளார்.இதையடுத்து, நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும் என ராணுவ கவுன்சில் கூறியுள்ளது.
இந்நிலையில்,நேற்று காலையில், தாரிர் சதுக்கத்தில் இருந்து பார்லிமென்ட் செல்லும் சாலையில் போலீசார் ஏற்படுத்தியிருந்த தற்காலிக சுவரை அகற்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் முயன்ற போது, போலீசார் அவர்களை நோக்கி துப்பாக்கிச் சூடு, தடியடி மற்றும் கண்ணீர் புகை குண்டு வீச்சு நடத்தினர்.சம்பவ இடத்தருகில், ராணுவ ஆட்சிக்கு எதிராக அமைதியான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த அரசியல்வாதிகள் சிலர், துப்பாக்கிச் சத்தத்தால், தங்கள் ஆர்ப்பாட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.

Post a Comment