Header Ads



தமிழ் கூட்டமைப்புக்கு எதிராக சிங்களவர் திரட்டப்படுவர் - தேசப்பற்றுள்ள இயக்கம்


தமிழ் கூட்டமைப்பின் நிலைப்பாட்டுக்கு எதிராக சிங்கள மக்கள் கொதித்தெழ வேண்டிய காலகட்டம் வந்துவிட்டது என்று எச்சரிக்கை விடுத்துள்ள தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம், சிங்கள மக்களை ஒன்றுதிரட்டி நாடளாவிய ரீதியில் பெரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்கவும் திட்டமிட்டுள்ளது.

கூட்டமைப்பின் செயற்பாடுகள் எல்லை தாண்டியுள்ளன. இனியும் சிங்கள மக்கள் அமைதி காக்கக் கூடாது. நாட்டின் எதிர்காலத்தைக் கருத்திற்கொண்டு எமது சமூகம் கிளர்ந்தெழ வேண்டும் என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர அழைப்பு விடுத்துள்ளார்.

நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை சிபாரிசுகளை நிராகரித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுத்துள்ள அறிக்கை தொடர்பில் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியவை வருமாறு,

ஆயுதப் போராட்டத்தில் வெற்றிபெற்ற அரசு, அரசியல் யுத்தத்தில் கூட்டமைப்பிடம் மண்டியிடக் கூடாது. அரசுக்கு எதிராக தமிழ்க் கூட்டமைப்பு தொடர்ந்தும் செயற்படுகின்றது. இந்நிலை தொடருமானால் நாடு படுபாதாளத்தை நோக்கிப் பயணிக்க வேண்டிய அபாயகரமான நிலை ஏற்படும்.

கூட்டமைப்புடனான பேச்சுகளை அரசு உடன் நிறுத்திக்கொள்ளவேண்டும். எமது ஆலோசனைகளை மீறி அரசு செயற்படுமானால் பெரும் சிக்கல்களை எதிர்நோக்க வேண்டிய நிலை ஏற்படும். தமிழ்க் கூட்டமைப்பினர் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளை நிராகரிப்பார்கள் என்பது எமக்கு நன்கு தெரியும். அதுகுறித்து நாம் அலட்டிக் கொள்ளப் போவதில்லை.

இலங்கை அரசை சர்வதேச பிடிக்குள் சிக்கவைக்கும் கூட்டமைப்பின் சதி முயற்சிகள் தொடர்ந்த வண்ணமுள்ளன.
 புலிகளைப் போற்றி அரசியல் பிழைப்பு நடத்திய கூட்டமைப்பு, புலிகளின் கொள்கைகளையே தங்களது அரசியல் கொள்கைகளாகக் கடைப்பிடிக்கின்றது.

கூட்டமைப்பு தொடர்ந்தும் தான்தோன்றித்தனமாகச் செயற்படுகின்றது. இதனை நாம் கைகட்டி வேடிக்கை பார்க்கப் போவதுமில்லை. எமது சமூகத்தை ஒன்றுதிரட்டி விரைவில் இவற்றுக்கு எதிராகப் போராடுவோம். மிக விரைவில் எமது சமூகத்தினர் கிளர்ந்தெழுவர் என்றார். 


No comments

Powered by Blogger.