Header Ads



ஆபிரிக்காவின் பின்னடைவுக்கு கிறிஸ்தவமே காரணம் - தென்னாபிரிக்கா ஜனாதிபதி

ஆபிரிக்கக் கண்டத்தில் 19 ஆம் நூற்றாண்டுப் பகுதியில் கிறிஸ்தவம் அறிமுகப்படுத்தப்பட்டமையே அங்கு தற்போது நிலவும் பிரச்சினைகளுக்குக் காரணம் என தென்னாபிரிக்க ஜனாதிபதி கருத்து தெரிவித்துள்ளமை பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. ஜேகப் சூமா தனது சொந்த மாகாணமான கிவாசூலு - நடாலில் நடைபெற்ற நிகழ்வொன்றிலேயே இக்கருத்தினைத் தெரிவித்துள்ளார். 

கிறிஸ்தவமே அனாதைகள் மற்றும் முதியோர் இல்லத்தினை ஆபிரிக்காவுக்கு கொண்டுவந்ததெனவும் இதனால் ஆபிரிக்காவின் பாரம்பரியம், கலாசாரம் ஆகியன பாதிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

புதிய மதங்களின் வருகைக்கு முன்னர் ஆபிரிக்கா தனக்கென தனித்துவத்தைக் கொண்டிருந்ததாகவும், அது இருண்ட காலம் என பலர் கூறியபோதிலும் அக்காலப்பகுதியில் மேற்கூறிய பிரச்சினைகள் எதுவும் இருக்கவில்லையெனவும் சூமா குறிப்பிட்டுள்ளார். 

இவரின் இக்கருத்திற்கு அங்குள்ள கிறிஸ்தவ அமைப்புகள் தமது கவலையைத் தெரிவித்துள்ளன. மேலும் பல அமைப்புகள் அவரின் கருத்துக்குக் கண்டனம் வெளியிட்டுள்ளன. 

எனினும் அந்நாட்டு ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு இதனை மறுத்துள்ளது. சூமா தவறான அர்த்தத்தில் அக்கருத்தைத் தெரிவிக்கவில்லையெனவும், ஆபிரிக்கர்கள் தங்களது பாரம்பரியத்தைக் காக்கவேண்டுமெனும் அர்த்தத்திலேயே அவர் அவ்வாறு கூறியதாகவும் அப்பிரிவு செய்தி வெளியிட்டுள்ளது. சூமா தென்னாபிரிக்காவின் முதல் 'சூலு' இன ஜனாதிபதியான அவர் பழங்குடியின மக்களின் கலாசாரத்தையே அதிகமாகப் பின்பற்றுபவர் என்பது குறிப்பிடத்தக்கது. 


No comments

Powered by Blogger.