சிறுவர்களின் மனித உரிமை மீறல்களை அவர்களே முறையிட ஏற்பாடு
சிறுவர், சிறுமியர் தமக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் குறித்து தாமே நேரடியாக சர்வதேச அமைப்புகளிடம் புகார் செய்வதற்கு வழி செய்யும் ஏற்பாடு ஒன்றுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
தொடர்புடைய விடயங்கள்துஷ்பிரயோகம், மனித உரிமை, வன்முறை சிறார் உரிமைகள் குறித்த ஐ நா சாசனத்தில் சேர்க்கப்பட்டுள்ள புதிய பிரிவு ஒன்றை அங்கீகரித்ததன் மூலம் ஐநா பொதுச் சபை இந்த அதிகாரங்களை சிறாருக்கு வழங்கியுள்ளது.
இதன் அடிப்படையில் தமக்கு எதிராக மேற்கொள்ளப்படக் கூடிய மனித உரிமை மீறல்களான, சிறார்களை விற்றல், சிறார் விபச்சாரம், சிறார் ஆபாசப்படங்கள் மற்றும் சிறாரை போர்ப் படைக்கு சேர்த்தல் ஆகியவை குறித்து சிறுவர், சிறுமியர் நேரடியாகவே சர்வதேச அமைப்புக்களுக்கு முறையிட முடியும்.
இத்தகைய முறைப்பாடுகளை சர்வதேச அமைப்புக்களுக்கு கொண்டுவரக்கூடிய ஏனைய அதிகாரம் மிக்கவர்களுடன், தற்போது சிறாரும் தமக்கெதிரான உரிமை மீறல்கள் குறித்து முறையிடும் அதிகாரத்தை பெறுவதாக ஐநாவின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவியான நவி பிள்ளை அவர்கள் கூறியுள்ளார்.
பாரபட்சம் முதல் சிறார் கடத்தல் வரை பலவகையான பரந்துபட்ட உள மற்றும் உடல் ரீதியான துஷ்பிரயோகங்களை தமது அன்றாட வாழ்க்கையில் சிறார்கள் எதிர்கொள்வதாகக் கூறியுள்ள அவர், தமக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் குறித்து சிறார்களே நேரடியாக முறைப்பாடு செய்ய வழி செய்யும் இந்த புதிய சரத்தை அனைத்து நாடுகளும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்தப் புதிய சரத்துக்கான பிரேரணை கடந்த ஜூன் மாதத்தில் ஐநாவின் மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.
இத்தகைய முறைப்பாடுகள் சிறாரிடம் இருந்து நேரடியாகவே கிடைக்கும் பட்சத்தில் குறித்த குற்றங்கள் சிறார் உரிமைகளுக்கான சாசனத்தை மீறுகிறதா என்பதை ஐநாவின் சிறார் உரிமைக்கான குழு ஆராயும் என்றும், அதில் இருக்கக்கூடிய சிறாரை பாதிக்கக்கூடிய சிக்கலான விடயங்களை அது கவனமாகக் கையாழும் என்றும் அதன் மூலம் அவர்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்க அது நடவடிக்கை எடுக்கும் என்றும் ஐநா மனித உரிமைகள் ஆணையர் கூறியுள்ளார்.
இத்தகைய முறைப்பாடுகளை விசாரிக்கும் அதேவேளையில், அந்தக் காலகட்டத்தில் அந்த சிறுவனுக்கோ அல்லது சிறுமிக்கோ திருத்த முடியாத பாதிப்பு ஏதும் ஏற்படாத வகையில் இடைக்கால பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உரிய நாட்டின் அரசாங்கத்தை ஐநா கேட்கும்.
இந்த புதிய சரத்தை நாடுகள் ஏற்பதற்காக 2012 ஆம் ஆண்டு முதல் அது அவற்றின் பார்வைக்கு விடப்படும்.

Post a Comment