“முஸ்லிம்க்ள் பற்றி பேசுவது” என்பதன் பொருள்..?
அபூ மஸ்லமா
ஐரோப்பாவின் சில நாடுகளில் பனி மூட்டம் ஏற்படும் நாட்கள் வருவதுண்டு. எங்கேயும் பனி. எப்போதும் பனி. எதிரில் இருப்பது என்ன என்று கூட சரியாக தெரியாத அளவிற்கு பனிப்புகார் நிறைந்திருக்கும்.. எதிரில் இருப்பவர் என்ன செய்கிறார் என்பது கூட தெளிவாக தெரியாது. ஆனால் எதிரில் இருப்பவர் ஏதோ ஒன்றை செய்து கொண்டுதான் இருப்பார். ஏன் நாமும் கூட எதோ ஒன்றை செய்து கொண்டுதான் இருப்போம்.
ஐரோப்பாவின் சில நாடுகளில் பனி மூட்டம் ஏற்படும் நாட்கள் வருவதுண்டு. எங்கேயும் பனி. எப்போதும் பனி. எதிரில் இருப்பது என்ன என்று கூட சரியாக தெரியாத அளவிற்கு பனிப்புகார் நிறைந்திருக்கும்.. எதிரில் இருப்பவர் என்ன செய்கிறார் என்பது கூட தெளிவாக தெரியாது. ஆனால் எதிரில் இருப்பவர் ஏதோ ஒன்றை செய்து கொண்டுதான் இருப்பார். ஏன் நாமும் கூட எதோ ஒன்றை செய்து கொண்டுதான் இருப்போம்.
இலங்கையிலும் இப்போது பனிக்காலமே. இது சாதாரண பனிக்காலமல்ல. பனிப்போர் நடக்கும் காலம். சிங்களவர், தமிழர் முரண்பாட்டினால் உருவான மோதல்கள் முடிவுக்கு வந்து இப்போது ஒருவரை ஒருவர் அடியறுக்கும் காலம். வேரோடு. வேரடி மண்ணோடு.
கத்தியின்றி, இரத்தமின்றி நடக்கும் இராஜதந்திர போர். நிழல் யுத்தம். காடுகளிலும், பதுங்கு குழிகளிலும் சண்டையிட்ட காலங்கள் கழிந்து இப்போது சர்வதேச திறந்த வெளியரங்கில் நடைபெறும் சமாதான்திற்கான சண்டையிது. இது பரிமாண முதிர்ச்சியா? அல்லது முட்டாள்தனத்தின் முழுவடிவமா? என்பது கேள்விக்குறியே.
சர்வதேசத்திடம் மண்டியிட்டு முழங்கால்களில் நின்று நடாத்தப்படும் மோதல் இது. இந்த சர்வதேசம் பற்றி சிங்கள அரசோ அல்லது தமிழர் தரப்போ ஏன் யதார்த்தங்களை விளங்க மறுக்கிறார்கள்? நாளை குரங்கு அப்பம் பங்கிட்ட கதையாகிவிடும். பலஸ்தீனத்திலும் ஒரு பிரித்தானிய சிம்பன்ஸியின் வேலையினாலேயே மத்திய கிழக்கு சீரழிகிறது.
“தமிழர் போராட்டத்தை ” சர்வதேசமயப்படுத்தியுள்ளார்கள் தமிழர் தரப்பினர். கூடவே தமது போராட்டத்தின் சில கட்டுப்பாட்டு ஆழிகளை புலம்பெயர் தமிழர்களிடம் வழங்கியுமுள்ளார்கள். தமது போராட்டத்தில் தமிழர்களிற்கு ஏற்பட்ட இழப்புக்களையும், அநியாயங்களையும் படம் போட்டு காட்டி பார்ப்பவர்களையும் அழவைக்கும் அரசியல் பாதையில் பயணிக்கிறார்கள்.
இதே “தமிழர் போராட்டம்” செய்த அநியாயங்கள் தொடர்பில் யாரும் இன்னும் படமெடுக்கவில்லை. கிழக்கு திமோர், இஸ்ரேல், பொஸ்னியா, கியுபெக், சுவிற்சர்லாந்தின் பெடரல் என பல ஒப்சன்களை கைகளில் வைத்தவாறு சீட்டாட்டம் செய்கிறார்கள். இதற்கு பெயர் “தமிழ் தலைமையின் அரசியல் சாணாக்கியம்”. கடைசியாக கையில் எடுக்க வேண்டிய தண்டத்தை முதலாவது கையில் எடுத்து தோற்றுப்போன நிலையில் பேதம், தானம், சாமம் எனும் ஏனைய மூன்றையும் ஒரே நேரத்தில் பாவிக்கும் அரசியல் கோமாளிகள் இவர்கள்.
சர்வதேச முதலீடு, உல்லாச பயணத்துறை, பயங்கரவாதத்திற்கு எதிரான கூட்டு, ஐ.நா. சமாதான படையினரிற்கான இராணுவ உதவி என பந்துகளை மாற்றி மாற்றி வீசி பாசக்கயிற்றில் இருந்து தப்பப்பார்க்கிறது சிங்கள தேசம். இப்போது இவர்கள் இருவருமே ஒரு புள்ளியில் சந்திக்க வேண்டிய நிலை. பரஸ்பரம் நிபந்தனைகளுடனான பேச்சுவார்த்தை எனும் கட்டத்திற்கு வந்துள்ளார்கள்.
பேச்சுவார்த்தை. பரஸ்பர பேச்சுவார்த்தை. பேசட்டும். தாராளமாக பேசட்டும். ஆனால் தங்களை பற்றி பேசட்டும். முஸ்லிம்களைபற்றியல்ல. தமிழர் தரப்பாகட்டும், அரசு தரப்பாகட்டும் வடக்கு கிழக்கு அரசியல் முரண்பாட்டிற்கான தீர்வு திட்டத்தில் முஸ்லிம்களிற்கான அரசியல் உரிமைகள்பற்றி பேச்சு நடாத்த தயாரில்லை.
முட்டாள்தனமான போராட்டத்தில் முஸ்லிம்கள் பங்கெடுக்கவில்லை என்று தமிழர் தரப்போ, ஆதிக்க வெறிகொண்ட போராட்டத்தில் முஸ்லிம்கள் துணையாக நிற்கவில்லை என சிங்கள தரப்போ நினைத்தால் அது அவர்களது தவறு. தீர்க்கமான இறுதி தீர்வில் முஸ்லிம்கள் தொடர்பாக பேசியேயாக வேண்டும். இதில் எந்த நழுவர்களிற்கும் இடமில்லை.
“முஸ்லிம்க்ள் பற்றி பேசுவது” என்பதன் பொருள் தமிழர்களும் சிங்களவர்களும் முஸ்லிம்கள் பற்றி பேசுவது என்பதல்ல. மாறாக தமிழர்களும் சிங்களவர்களும் பேசும் இறுதி தீர்விற்கான பேச்சுவார்த்தையில் “முஸ்லிம்கள் பற்றி முஸ்லிம்கள்” பேச வேண்டும்.
அரசை பொறுத்தமட்டில் தமிழர் அரசியல் ஆதிக்கத்தை பலவீனப்படுத்த ஒரு துரும்பாக முஸ்லிம்களிற்கான அரசியல் உரிமைகள் தொடர்பில் சாதகமான சில முடிவுகளை எடுக்கலாம். அது முஸ்லிம்கள் மீதான அக்கறையினாலோ அல்லது அன்பினாலோ அல்ல. மாறாக கிழக்கில் வாழும் சிங்கள மக்களின் நலன்களை நிலைநிறுத்தவும் அவர்களிற்கான அரசியல் உரிமைகளை பெற்றுக்கொள்ளவுமே.
இங்கே பிரச்சனைக்குரிய விடயம் தமிழர் தரப்பு. இவர்கள் முஸ்லிம்களின் அரசியல் வகிபாகத்தை ஒட்டுமொத்தமாக நிராகரிக்கிறார்கள். அதே பழைய கள்ளை புதிய போத்தலில் தரவே நினைக்கிறார்கள். “இஸ்லாமிய தமிழர்” எனும் மகுடத்தில் முஸ்லிம்களை மட்டறுக்கும் அரசியல் தந்திரம் இது.
“நாங்கள் உங்களிற்காக பேசுவோம். நீங்கள் கவலைபட தேவையில்லை” என்பதே தமிழர்கள் தரப்பின் ஒட்டுமொத்த விடையாக முஸ்லிம்களிற்கு சொல்லப்பட்டுள்ளது. முந்தானை முடிச்சில் முஸ்லிம்களை முடக்கி வைக்கப்பார்க்கிறார்கள் தமிழர்கள். தமிழர் ஆயுத போராட்டம் தான் அழிக்கப்பட்டது. தமிழர் குறுந்தேசியவாதம் உயிரோட்டம் நிறைந்ததாகவேயுள்ளது. அது வடக்கு கிழக்கின் சந்து பொந்தெல்லாம் ஒழிந்து கிடக்கிறது.
போராட்டத்திற்கான மாற்று திட்டங்கள் எனும் பாதையில் தமிழர் போராட்டம் பயணிக்கத்தான் போகிறது. அவர்களிற்கு நிகழ்ந்த அநியாயங்கள் அவர்களை இன்னும் சில காலங்களிற்கு தொடர்ந்தும் வழி நடாத்தும். போர்களம் மாறலாம் போரிடல் மாறுமா? எனும் நியதியின் அடிப்படையில் இது போராட்டவியல் கற்றுத்தரும் பாடம்.
இங்கே முஸ்லிம்கள் இது தொடர்பில் மெத்தனமாக இருக்கிறோம். வடக்கு கிழக்கு பிரச்சனைதானே என தெற்கிலங்கை முஸ்லிம்கள் இது பற்றி சிந்திப்பதில்லை. திருகோணமலையில் சம்மந்தன் பேசிய பேச்சை வடக்கு முஸ்லிம்கள் கணக்கெடுப்பதில்லை. யாழ்ப்பாணத்தில் சேனாதிராஜா பேசிய பேச்சை கிழக்கு முஸ்லிம்கள் கணக்கெடுப்பதில்லை. ஆனால் சம்மந்தனாகட்டும், சேனாதிராஜாவாகட்டும் முஸ்லிம்கள் தொடர்பாக ஒரு கொள்கையிலேயே இருக்கிறார்கள். ஒரு முடிவிலேயே இருக்கிறார்கள்.
நாம் மட்டும் வடக்கு அரசியல் வேறு, கிழக்கு அரசியல் வேறு என முட்டாள்தனமான அரசியல் கணிப்பீடுகளை கொண்டிருக்கிறோம். அவசரமான மிக மிக அவசரமான ஒரு நிலைக்கு நாம் வர வேண்டும். வடக்கு கிழக்கு பிரச்சனை தமிழர் பிரச்சனை மட்டுமல்ல அது தமிழ் பேசும் மக்களது பிரச்சனை என்பதனை உரக்க முன்வைக்க வேண்டும்.
சுண்டல் கடதாசியில் பாசிஸ்ட் பிரபாகரனுடன் ஒப்பந்தம் எழுதிய தலைமையோ அல்லது இறுதி பேச்சுவார்த்தையில் பேச விடயங்கள் தெரியாத நிலையில் எம்.ஐ.சி.யில் தகவல்களை பெற்று பேச்சுவார்த்தை நடாத்த சென்ற தலைமையோ முஸ்லிம்கள் பற்றி பேசுவதும் ஆபத்தானது.
வடக்கு கிழக்கு புத்திஜீவித்துவ முஸ்லிம்கள் இது தொடர்பில் சிந்திக்க வேண்டும். தெற்கிலங்கையின் முஸ்லிம் அமைப்புக்கள், புத்திஜீவிகள், இஸ்லாமிய இயக்க தலைமகள் போன்றவர்களையும் உள்வாங்கிய நிலையில் தமது பேச்சுவார்த்தைக்கான, உரிமைகளிற்கான போராட்ட களத்தில் இறங்குவது அவசரமானதும் அவசியமானதுமாகும்.
தமிழ் இனவாதம் இப்போது தான் அசைய முற்பட்டுள்ளது. அது எழுந்து விஸ்வரூபம் எடுப்பதற்கு முன்பாக அதன் கால்களை தறித்துவிடல் வேண்டும். இல்லையென்றால் நாம் “இஸ்லாமிய தமிழராக எப்படி வாழ்வதென்பதை பற்றி சிந்திக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவோம்.

Post a Comment