நல்ல சமாச்சாரம்தான்..!
நாட்டின் அரசியல்வாதிகள் மனிதர்களுக்கு மட்டுமல்ல, ஏனைய ஜீவராசிகளுக்கும் உதவி செய்யும் கருணை உள்ளம் படைத்தவர்களாக இருக்கிறார்கள். சைபீரியாவில் கடுமையான குளிர் காலம் ஆரம்பிக்கும் ஒக்டோபர், நவம்பர், டிசம்பர், ஜனவரி, பெப்ரவரி மாதங்களின் போது, அங்கிருந்து பல்வகை பறவையினங்கள் பல்லாயிரக்கணக்கான தூரத்தை கடந்துவந்து கீழைத் தேய நாடுகளில் குளிர்காய்வதுண்டு.
அவ்விதம் எமது நாட்டின் நீர்நிலை களின் மீது இந்த பறவையினங்கள் நூற்றுக்கணக்கில் வந்து தங்கியிருந்து மீண்டும் சைபீரியாவில் உஷ்ண நிலை அதிகரிக்கும் போது தங்கள் சொந்த இடங்களுக்கு திரும்புவதுண்டு.
அவ்விதம் வரும் கொக்கு இனத்தைச் சேர்ந்த பறவைகள் பகல் பொழுதில் கொழும்பு பேரை ஏரியில் உள்ள மீன் களை பிடித்து வயிற்றை நிரப்பிக்கொண்டு இரவில் கொழும்பில் உள்ள பெரிய மரங்களில் ஓய்வெடுப்பதுண்டு. கொழும்பு கொம்பனித் தெருவில் உள்ள வர்த்தக அமைச்சின் கட்டிடத்திற்கு முன்னால் உள்ள ஒரு பெரிய மரத்திலும் இந்த கொக்கு இனங்கள் வந்து தரித்திருப்பதுண்டு.
அவ்விதம் மரங்களில் தரித்திருக்கும் அவை அதிகாலையில் மீண்டும் நீர்த்தேக்கங்களுக்கு செல்வதுண்டு. அவற்றில் இரண்டு பறவைகள் மாத்திரம் பட்டம் அனுப்பும் சிறுவர்களின் கடினமான நூல்களில் சிக்கிக் கொண்டு பறக்க முடியாத நிலையில் மரங்களில் ஆதரவற்ற நிலையில் தொங்கிக் கொண் டிருந்தன.
இது பற்றி தகவல் தெரிந்தவுடன் வர்த்தக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தனது நெருங்கிய நண்பனான கொழும்பு மாநகரசபை உறுப்பினர் அஸாத்சாலிக்கு விசயத்தை அறிவித்து, இந்த பறவைகளை மீட்டெடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்ட போது, அஸாத்சாலி கொழும்பு மாநகர ஆணையாளரின் உதவியுடன் தீயணைக்கும் படையினரை வரவழைத்து அவ்விரு கொக்குகளையும் விடுவித்திருக்கிறார்.
விடுவிக்கும் போது அவற்றில் ஒரு கொக்கு இறந்துவிட்டது. மற்ற கொக்கை பேரை ஏரியில் விடச் சென்ற போதுதான், அதன் சிறகுக்கு ஏற்பட்ட காயத்தினால் அதற்கு பறக்க முடியாது என்பது அவதானிக்கப்பட்டது. அதனையடுத்து அந்த கொக்குக்கு வைத்திய சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதுடன் அந்த கொக்குக்கு தேவையான உணவும் பெற்றுக் கொடுக்கப்படுகிறதென்று அஸாத் சாலி தெரிவித்தார்.

Post a Comment