கல்லால் அடிப்பதா..? தூக்கில் போடுவதா..??
கல்லால் எறிந்து கொல்லும்படி, மரணதண்டனை விதிக்கப்பட்ட ஈரான் பெண்ணுக்குத் தூக்குத் தண்டனை வழங்குவது குறித்து அந்நாட்டு நீதித்துறை ஆலோசித்துவருகிறது. கல்லால் எறிந்து மரண தண்டனை வழங்கும் முறைக்கு எதிராக சர்வதேச அழுத்தங்கள் அதிகரித்துள்ள நிலையிலேயே ஈரான் அரசு தண்டனை முறையில் மாற்றம் கொண்டுவருவது குறித்து ஆலோசித்து வருகிறது.
குறித்த பெண் மீதான மரண தண்டனை நேற்றைய தினத்தில் நிறைவேற்றப்பட திட்டமிடப்பட்டிருந்தாலும் தண்டனை வழங்கும் முறை குறித்து ஏற்பட்ட சிக்கலில் அது பிற்போடப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஈரானின் கிழக்கு அசர்பைஜான் மாகாணத்தைச் சேர்ந்த சகினா மொஹிமதி அஷ்டானி என்ற பெண்ணுக்கே ஈரான் நீதி மன்றம் கல்லால் எறிந்து மரணதண்டனை வழங்குமாறு தீர்ப்பு அளித்துள்ளது. வேறு ஒரு ஆணுடன் கள்ளத்தொடர்பு வைத்துக் கொண்ட தற்காகவே இவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, இவர் தனது கணவனை கொல்வதற்கு உதவியாகக் குற்றம்சாட்டப்பட்டு 10 ஆண்டு சிறைத்தண்டனை அனுபவித்துள்ளார். எனினும் இவர் இந்த குற்றச் செயல்களில் தொடர்பில்லை என அவரது குடும்பத்தினர் குறிப்பிட்டுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பில் சர்வதேச அளவில் கடும் கண்டனங்கள் வெளியாகி இருந்தன.
அத்துடன் பிரேசில் அரசு மேற்படி பெண்ணுக்கு அடைக்கலம் வழங்கவும் முன்வந்தது. அதேபோன்று கல்லால் எறிந்து கொலை செய்வது காட்டுமிராண்டித்தனமானது என பிரிட்டன் வெளியுறவு அமைச்சு குறிப்பிட்டிருந்தது. இந்நிலையில் அஷ்டானி மீதான மரண தண்டனை விதிக்கும் முறை தொடர்பில் தெளிவு கிடைத்ததும் அது நிறைவேற்றப்படும் என கிழக்கு அசர்பைஜான் மாகாணத்தின் நீதித் துறை அலுவலகத்தின் தலைவர் மாலிக் அஜ்தார் ஷரிபி குறிப்பிட்டார்.

Post a Comment