Header Ads



இலங்கையில் பிரிட்டன் பிரஜை கொலை - சந்தேக நபரான அரசியல்வாதி சரண்


இலங்கையின் தெற்கே அம்பாந்தோட்டை மாவட்டத்தில் தங்காலை என்ற இடத்தில் உள்ள களியாட்ட ஓய்வு விடுதியொன்றில் நத்தார் பிறப்பு நள்ளிரவில் பிரிட்டிஷ் பிரஜையொருவர் கொல்லப்பட்ட சம்வத்தின் முக்கிய சந்தேக நபர் பொலிஸில் சரணடைந்துள்ளார்.

தங்காலை பிரதேச சபைத் தலைவரான சம்பத் விதான பத்திரண(24 வயது) பொலிஸில் சரணடைந்தவுடன் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் எஸ்பி அஜித் ரோஹன கூறினார்.

தொடர்புடைய விடயங்கள்தாக்குதல், வன்முறை தங்காலை பிரதேச சபையைச் சேர்ந்த வாகன சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை சரணடைந்தவர்கள் நீதவான் முன்னிலையில் அடையாள அணிவகுப்பில் ஈடுபடுத்தப்பட்டதாகவும் அனைவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கூரிய ஆயுதமொன்றால் தாக்கியே பிரிட்டிஷ் சுற்றுலா பயணி கொல்லப்பட்டதாக கூறிய பொலிசார் கொல்லப்பட்டவரின் சடலத்தில் துப்பாக்கிச் சூட்டுக்காயம் காணப்படுவதாகவும் தெரிவித்தனர்.

கொலை நடந்தவுடன் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்ற ஆளுங்கட்சியைச் சேர்ந்த தங்காலை பிரதேச சபைத் தலைவர் உள்ளிட்ட சந்தேக நபர்களை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் தேடி வருவதாக இலங்கை காவல்துறை முன்னதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இந்த சம்பவத்தில் கொல்லப்பட்டவருடன் இருந்த ரஷ்யப் பெண்மணி காயமடைந்து தொடர்ந்தும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாக பொலிஸ் பேச்சாளர் மேலும் கூறினார்.


No comments

Powered by Blogger.