Header Ads



இவ்வருடத்தில் 66 ஊடகவியலாளர்கள் உயிர் தியாகம் - 1,044 பேர் கைது


சர்வதேச அளவில் 2011ஆம் ஆண்டில் 66 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாக எல்லைகள் அற்ற ஊடகவியலாளர் அமைப்பு குறிப்பிட்டுள்ளது. அரபு நாடுகளில் ஏற்பட்டுள்ள மக்கள் கிளர்ச்சி, மெக்சிகோவின் போதைக் கடத்தல் கும்பல் மற்றும் பாகிஸ்தானின் அரசியல் நெருக்கடி காரணமாகவே அதிகமான ஊடகவியலாளர்கள் பலியாகியுள்ளதாக அது கூறியுள்ளது.

இதில் பாகிஸ்தானில் நிலவும் அரசியல் நெருக்கடி காரணமாக 10 ஊடகவியலாளர்கள் இந்த ஆண்டில் மாத்திரம் கொல்லப்பட்டுள்ளனர். இதன் மூலம் செய்தி சேகரிப்பதற்கு மிக அபாயகரமான நாடாக பாகிஸ்தான் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாகவும் பதிவாகியுள்ளது.

அடுத்ததாக அரபு நாடுகளில் ஏற்பட்டுள்ள மக்கள் கிளர்ச்சியில் செய்தி சேகரித்த 20 ஊடகவியலாளர்கள் இந்த ஆண்டில் பலியாகியுள்ளனர். இது மத்திய கிழக்கு நாடுகளில் கடந்த ஆண்டுகளில் ஒப்பிடுகையில் ஊடகவியலாளர் பலி எண்ணிக்கை இரட்டிப்பாகும்.

இதே அளவான ஊடகவியலாளர்கள் லத்தின் அமெரிக்க நாடுகளில் கொல்லப்பட்டுள்ளனர். லத்தின் அமெரிக்க நாடுகளில் நிலவிவரும் ஆயுத கும்பல் மோதல் மற்றும் போதைப் பொருள் கடத்தல் விவகாரம் குறித்த செய்தி சேகரிக்கும் ஊடகவியலாளர்களே அங்கு அதிகம் பலியாகியுள்ளனர். இதில் இந்த ஆண்டில் மாத்திரம் 1,044 ஊடகவியலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இது கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இரட்டிப்பாகும். 

அரபு நாடுகளில் ஏற்பட்டுள்ள மக்கள் கிளர்ச்சி காரணமாகவே அதிக ஊடகவியலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தவிர கிரீஸ், பெலாரஸ், உகண்டா, சிலி மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் ஏற்பட்ட வீதி ஆர்ப்பாட்டங்களின் போதும் அதிக ஊடகவியலாளர்கள் கைதாகியுள்ளனர்.

பிரான்ஸ் தலைநகர் பரிசை தலைமையகமாக கொண்டு இயங்கும் எல்லைகள் அற்ற ஊடகவியலாளர் அமைப்பு வெளியிட்ட அறிக்கையிலேயே இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதில் ஊடகவியலாளர்கள் செய்தி சேகரிப்பதற்கு அபாயகரமான 10 இடங்களை இந்த அமைப்பு அடையாளம் காட்டியுள்ளது. கெய்ரோ நகரின் தஹ்ரிர் சதுக்கம், தென்மேற்கு பாகிஸ்தானின் குஸ்தார் பகுதி மற்றும் பிலிப்பைன்ஸின் மெகடுஷ¤ நகரங்கள் ஊடகவியலாளர்களுக்கு அபாயகரமான பகுதிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

தவிர, சிரியாவின் டெரா, ஹோம் மற்றும் டமஸ்கஸ் நகரங்களும் யெமன் தலைநகர் சனா, லிபியாவின் மிஸ்ரட்டா நகரங்களும் ஊடகவியலாளர்களுக்கு அபாயகரமான பகுதியாக எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சீனா, ஈரான் மற்றும் எரித்திரியா ஆகிய நாடுகளிலேயே அதிக ஊடகவியலாளர்கள் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.