Header Ads



மன்னாரில் ரஷ்யாவும் எண்ணெய் அகழப்போகிறதாம்

மன்னார் கடல் பரப்பில் எண்ணெய் அகழ்வாராய்ச்சியில் ஈடுபடவென ரஷ்யாவிலிருந்து விசேட நிபுணர்கள் குழுவொன்று இலங்கை வரவுள்ளதாக பெற்றோலியத்துறை அமைச்சு தெரிவிக்கிறது. ரஷ்யாவின் ‘சர்வதேச காஸ்போர்ம் நிறுவனத்துடன் பெற்றோலிய வளத்துறை அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த செய்து கொண்ட உடன்படிக்கையின் பிரகாரம் இன்னும் மூன்று வாரங்களில் குறித்த நிறுவனத்தின் விசேட தொழில்நுட்ப நிபுணர்கள் அடங்கிய குழுவினர் இலங்கை வரவுள்ளனர்.

நான்கு நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு ரஷ்யா சென்றுள்ள அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த ரஷ்ய அரசுடனும், எண்ணெய் மற்றும் எரிவாயு தொடர்பான ரஷ்ய அரசினதும் காஸ்போர்ம் சர்வதேச நிறுவனத்துடனும் பல உடன்படிக்கைகளை செய்துகொண்டுள்ளார். ரஷ்யாவின் காஸ்போர்ம் நிறுவனத்தின் பிரதி தலைவர் வெலேரி குலேயெவ் தலைமையிலான நிறுவன அதிகாரிகளுடன் அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த பேச்சு நடத்தினார்.

அமைச்சருடன் ரஷ்யாவிலுள்ள இலங்கைத் தூதுவர் உதயங்க வீரதுங்க எண்ணெய் அகழ்வாராய்ச்சி தொடர்பான ஆலோசகர் சாலிய விக்கிரமசூரிய, இலங்கையின் சுற்றுலாத்துறை மேம்பாட்டு பணியகத்தின் பிரதி பணிப்பாளர் ரூமி பவுஸர் ஆகியோர் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர். ரஷ்யாவின் எரிசக்தி அமைச்சின் விசேட அழைப்பின் பேரில் அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த ரஷ்யா சென்றிருந்தார். சங்ஹாய் கூட்டுறவு அமைப்பின் (ஷிவிலி) எரிசக்தி அமைப்பின் முதலாவது விசேட அமர்விலும் அமைச்சர் கலந்துகொண்டார்.

இலங்கைக்கும் ரஷ்யாவுக்குமிடையே எரிபொருள் மற்றும் எரிவாயு தொடர்பான ஓர் இணக்கப்பாட்டுக்கு வருவது தொடர்பான பல இருதரப்பு உடன்படிக்கைகள் குறித்து உலக பிரசித்தி வாய்ந்த ரஷ்யாவின் காஸ்போர்ம் நிறுவனத்துடன் பேச்சுக்கள் நடைபெற்றன. எண்ணெய் அகழ்வாராய்ச்சி மற்றும் எண்ணெய்வள உற்பத்திகள் தொடர்பாக இலங்கையில் பட்டதாரிகளையும் இணைத்துக்கொள்வதற்கும், க. பொ. த. உயர்தரத்தில் சித்திபெற்றவர்களுக்கு புலமைப் பரிசில்களை வழங்கவும் ரஷ்ய காஸ்போர்ம் நிறுவனம் இணக்கம் தெரிவித்துள்ளது என்றும் பெற்றோலிய வளத்துறை அமைச்சு தெரிவிக்கிறது.

No comments

Powered by Blogger.