Header Ads



இலங்கையில் 18.6 சதவீதத்தினர் புகை பிடிக்கிறார்களாம்

இலங்கையில் சிகரட் உற்பத்தி 20 சதவீதத்தினால் வீழ்ச்சி அடைந்திருப்பதாக இலங்கை மருத்துவ சங்கத்தின் நிறைவேற்றுக் குழு உறுப்பினரான டொக்டர் சுஜீவ ரணவீர தெரிவித்தார். அதேநேரம், இலங்கையில் தினமும் புகைப்பிடிக்கும் பழக்கம் மிக்கவர்களாக 18.6 சதவீதத்தினரே உள்ளனர் எனவும் அவர் கூறினார். புகைப்பிடித்தல் பழக்கத்தை முழுமையாகத் தடை செய்யாமல் அதன் பாவனையைப் பெரிதும் குறைத்துள்ள நாடுகளில் இலங்கை முன்னணியில் திகழ்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சிகரட் தொடர்பாக நடைமுறையிலுள்ள வரிமுறை குறித்து ஊடகங்களுக்குத் தெளிவுபடுத்தும் செய்தியாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. மாநாட்டில் டொக்டர் சுஜீவ ரணவீர தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,

2004ம், 2005ம் ஆண்டு காலப் பகுதியில் இந்நாட்டில் வருடத்திற்கு 4900 மில்லியன் சிகரட்டுகள் உற்பத்தி செய்யப்பட்டன. அது இப்போது 4700 மில்லியன்கள் வரை வீழ்ச்சியடைந்திருக்கின்றது. அதேநேரம் 13-15 வயதுக்கிடைப்பட்டவர்கள் மத்தியில் புகைப்பிடிக்கும் பழக்கம் கொண்டவர்கள் தொடர்பான ஆய்வொன்றை உலக சுகாதார ஸ்தாபனம் அண்மையில் நடத்தியது. உலகிலுள்ள 140 நாடுகளில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இவ்வாய்வின் படி இந்நாட்டில் இவ்வயதுக்கிடைப்பட் டோர் புகைப்பிடிக்கும் பழக்கம் மிக்கவர்களாக மிகக் குறைந்தளவிலேயே உள்ளனர். புகைப்பிடித்தல் பழக்கத்தைத் தவிர்ப்பதற்கும், கட்டுப்படுத்துவதற்கும் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளின் பயனாகவே இந்த அடைவுகளை எம்மால் அடைய முடிந்திருக்கின்றது என்றார்.

இச்செய்தியாளர் மாநாட்டில் அதிகார சபையின் ஆலோசகர் கலாநிதி நிஷான் டிமெல் குறிப்பிடுகையில், சிகரட்டுகளின் விலையை அதிகரிக்கும் அதிகாரம் அரசாங்கத்திடமுள்ளது. இதன்படி 1980 ஆம் ஆண்டு முதல் தலா வருமானத்திற்கு ஏற்ப சிகரட்டுகளின் விலை அதிகரிக்கப்படுகின்றது. அதனால் சிகரட்டுகளின் விலை உயர்வுக்கு ஏற்ப அதற்கான வரியும் அதிகரிக்கப்பட்டது. என்றாலும் 2000, 2005 காலப்பகுதியில் சிகரட்டின் விலை அதிகரிப்புக்கு ஏற்ப அதற்கான வரி உயர்த்தப்படவில்லை. இதனால் இரண்டுக்குமிடையிலான இடைவெளி அதிகரித்துள்ளது. இந்த இடைவெளியைக் குறைப்பதென்றால் சிகரட்டின் விலை ஐம்பது சதவீதத்தால் அதிகரிக்க வேண்டும்.

சிகரட்டுக்கான வரியை அரசாங்கம் சீரமைக்குமாயின் வருடாந்தம் 16 பில்லியன் ரூபா மேலதிக வருமானமாகக் கிடைக்கும். இச்சீரமைப்பை கடந்த 2005 ஆம் ஆண்டு முதல் மேற்கொண்டிருந்தால் நூறு பில்லியன் ரூபாவை அரசாங்கம் வருமானமாகப் பெற முடியும் என்று குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.