Header Ads



யாழ்ப்பாணத்தில் இனங்காணப்படாத காய்ச்சல் - சிகிச்சைக்கு மருத்துவர்கள் அறிவுறுத்து

இனங்கானப்படாத ஒருவகைக் காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. காய்ச்சலினால் பீடிக்கப்படுபவர்கள் காலம் தாழ்த்தாது உடனடியாக மருத்துவ சிகிச்சைகளைப் பெற்றுக் கொள்ளுமாறு வைத்தியர்கள் அறிவுறுத்தி இருக்கின்றனர். காய்ச்சலினால் பீடிக்கபட்ட குழந்தை ஒன்று நேற்றுப் பரிதாபகரமாக உயிரிழந்துவிட்டது. காய்ச்சலால் பீடிக்கப்பட்ட குழந்தைக்கு இரண்டு நாள்களாகச் சிகிச்சையளிக்கப்படவில்லை. மூன்றாவது நாள் வைத்தியசாலையில் அனுமதித்த சில மணித்தியாலங்களில் அந்தக் குழந்தை இறந்துவிட்டது.

சங்கானை வைத்தியசாலை சம்பவத்தில் ஆஸ்பத்திரி வீதி, சங்கானையைச் சேர்ந்த கஜேந்திரகுமார் கஜிரூபன் எனும் ஒரு வயதும் நான்கு மாதங்களுமேயான குழந்தையே இறந்தது. குழந்தையின் மரணம் குறித்து தெரியவந்ததாவதது,

காய்ச்சலினால் பீடிக்கப்பட்ட அந்தக் குழந்தையை நேற்று முன்தினம் திங்கட்கிழமை பிற்பகல் 2 மணியளவில் சங்கானை வைத்தியசாலையில் சிகிச்சைக்கெனக் கொண்டு சென்றனர். அன்றைய தினம் அங்கு முற்பகல் 10 மணிவரைக்குமே வெளிநோயானர் பிரிவு இயங்குகிறது. இவர்கள் சென்ற நேரம் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெறமுடியாது எனக் கூறவே குழந்தையைத் தாயார் வீட்டுக்குக் கொண்டு சென்றார்.அன்றிரவு குழந்தைக்குக் காய்ச்சல் அதிகரித்தது. மறுநாளான் நேற்று செவ்வாய்க்கிழமை காலை மீண்டும் சங்கானை வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றார். அங்கு விடுதியில் வைத்து சிகிச்சையளிக்கப்பட்டபோதும் சிகிச்சை பயனளிக்காது குழந்தை இறந்து விட்டது.

இது தொடர்பாகச் சங்கானை வைத்தியசாலை வைத்தியருடன் தொடர்பு கொண்டு கேட்டபோது, போயா தினங்களில் முற்பகல் 10 மணிவரைக்குமே அங்கு வெளிநோயாளர் பிரிவு இயங்குகிறது. நெடுங்காலமாக இந்த நடைமுறை இருந்து வருகிறது. அந்தக் குழந்தையை நேற்று முன்தினம் போயா தினத்தன்று பிற்பகல் மருத்துவ சிகிச்சைக்கெனக் கொண்டுவந்தனர். வெளிநோயாளர் பிரிவில் அந்த நேரத்தில் சிகிச்சை பெறமுடியாது. விடுதியில் வைத்து குழந்தைக்குச் சிகிச்சையளிக்க முடியும் எனவே குழந்தையை விடுதியில் அனுமதிக்கும்படி கோரினோம். எனினும் அந்தக் குழந்தையின் தாயார் அதற்குச் சம்மதிக்காது திரும்பிச் சென்றுவிட்டார் என்றார் அந்த வைத்தியர்.இது தொடர்பாக யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரனிடம் கேட்டபோது அதுபற்றி இன்று புதன்கிழமையே விசாரணை செய்யவுள்ளதாகத் தெரிவித்தார்.

சங்கானைப் பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டனர். உடற்கூற்றுப் பரிசோதனைக்காகச் சடலம் யாழ். போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு விசாரணை, பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிம் ஒப்படைக்கப்பட்டது.   

No comments

Powered by Blogger.