Header Ads



பாகிஸ்தான், ஆப்கான் எல்லையில் தொடர்ந்து பதற்றம் - அமெரிக்க படைகள் தயார்

 பாகிஸ்தானின் வடக்கு வஜீரிஸ்தான் எல்லை அருகில், அமெரிக்கா, "நேட்டோ' மற்றும் ஆப்கானிஸ்தான் படைகள் குவிக்கப்பட்டுள்ளதை அடுத்து, பாகிஸ்தானும் தனது படைகளை அப்பகுதியை நோக்கி நகர்த்தியுள்ளது. பதட்டம் அதிகரித்துள்ள இந்நிலையில், பாக்., ராணுவத் தளபதி அஷ்பாக் பர்வேஸ் கயானி, அமெரிக்காவுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஒபாமா உறுதி: பாகிஸ்தானின் வடக்கு மற்றும் தெற்கு வஜீரிஸ்தான் பகுதிகள், ஹக்கானி குழுவின் பதுங்கிடமாக உள்ளது. கடந்த செப்., 29ம் தேதி, அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் நடந்த தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டத்தில், ஹக்கானி குழுவை ஒழிப்பது தான் அமெரிக்காவின் நோக்கம் என்பதை அதிபர் ஒபாமா உறுதிப்படுத்தினார். இத்தகவல் பாகிஸ்தானுக்கும் தெரியப்படுத்தப்பட்டது.

குண்டு வீச்சு: இதையடுத்து, கடந்த 15, 16ம் தேதிகளில் வடக்கு வஜீரிஸ்தானில் இரு முறையும், தெற்கு வஜீரிஸ்தானில் ஒரு முறையும் அமெரிக்க ஆளில்லா விமானங்கள் குண்டு வீசித் தாக்கின. இப்பகுதிகளில் தரை வழியாக ராணுவ நடவடிக்கை எடுக்க, அமெரிக்கா தொடர்ந்து பாகிஸ்தானை கோரி வருகிறது. ஆனால், பாக்., மறுத்து வருகிறது.
இந்நிலையில் தான், கடந்த 15, 16ம் தேதிகளில், வடக்கு வஜீரிஸ்தான் மற்றும் ஆப்கனின் கோஸ்ட் மாகாண எல்லைப் பகுதிகளில் அமெரிக்க மற்றும் "நேட்டோ' படைகள் குவிக்கப்பட்டன. கவச வாகனங்கள், பீரங்கிகள், ராணுவ ஹெலிகாப்டர்கள் அங்கு இருப்பதாக பாக்., பத்திரிகைகள் தெரிவித்தன. இதன் மூலம் அமெரிக்கா, வடக்கு வஜீரிஸ்தானில் தரை வழி ராணுவ நடவடிக்கை எடுக்கத் திட்டமிட்டிருப்பது தெரியவந்துள்ளது. அதேநேரம் நேற்று முன்தினம், இந்தப் படைகளோடு ஆப்கன் படைகளும் எல்லையில் நிறுத்தப்பட்டன.

கத்திமுனை நடவடிக்கை: இதுகுறித்து, ஆப்கன் பாதுகாப்பு அமைச்சர் அப்துல் ரகீம் வர்டாக் கூறுகையில், "ஹக்கானி குழுவினர் எல்லையின் இருபுறமும் செயல்பட்டு வருகின்றனர். இது அவர்களை ஒடுக்குவதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை. இதற்கு, "கத்திமுனை நடவடிக்கை' எனப் பெயரிடப்பட்டுள்ளது' என்றார். ஆப்கன் தலைநகர் காபூலில் உள்ள, "நேட்டோ' செய்தித் தொடர்பாளர் கார்ஸ்டென் ஜேக்கப்சன் இதை உறுதிப்படுத்தி கூறுகையில், "எல்லையில் ஊடுருவலைத் தடுக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனினும் இது வழக்கமான ஒன்று தான். இப்போதைக்கு இவ்வளவு தான் சொல்ல முடியும்' என்றார்.

பாக்., துருப்புகள் குவிப்பு: இதற்கிடையில், ஆப்கன் எல்லையை ஒட்டி பாகிஸ்தான் தனது துருப்புகளை நகர்த்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து பேசிய பாக்., ராணுவ செய்தித் தொடர்பாளர் அதர் அப்பாஸ், "எல்லைப் பாதுகாப்புப் படை மற்றும் வழக்கமான ராணுவ வீரர்கள், பயங்கரவாதிகள் ஊடுருவலைத் தடுப்பதற்காக ஆப்கன் எல்லைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்' என்று தெரிவித்தார். எந்தெந்தப் பகுதிகளுக்கு பாக்., துருப்புகள் அனுப்பப்பட்டுள்ளன என்பதை அவர் தெரிவிக்கவில்லை.

எல்லைச் சாவடிகள் திறப்பு: வடக்கு வஜீரிஸ்தானின் குலாம் கான் பகுதியில், "நேட்டோ'வால் மூடப்பட்ட எல்லைச் சாவடிகள் நேற்று முன்தினம் திறந்து விடப்பட்டன. இதனால், அப்பகுதியில் தேங்கியிருந்த 900க்கும் மேற்பட்ட சரக்கு லாரிகள் ஆப்கனுக்குள் சென்றன.

பழங்குடியின தலைவர்கள் சந்திப்பு: வடக்கு வஜீரிஸ்தான் பகுதியைச் சேர்ந்த பழங்குடியினத் தலைவர்கள் சிலர், எல்லைக்கு அப்பால் முகாமிட்டுள்ள, "நேட்டோ' படைத் தலைவர்களை நேற்று  சந்தித்துப் பேசினர். அப்போது, "நேட்டோ படைகள் தன்னிச்சையாக வடக்கு வஜீரிஸ்தானுக்குள் நுழைந்தால், பதிலடி கொடுப்போம்' என அவர்களிடம் உறுதியாகத் தெரிவித்தனர்.

மவுனம் சாதிக்கும் பாக்., ராணுவம்: அமெரிக்கா மற்றும் "நேட்டோ' படைகள், இவ்வளவு தீவிரமாக எல்லைப் பகுதியில் குவிக்கப்பட்டது இதுவே முதன் முறை என்பதால், இருதரப்பிலும் பதட்டம் நிலவுகிறது. இதுகுறித்து பாக்., தரப்பில் விளக்கம் எதுவும் அளிக்கப்படவில்லை. ராணுவத் தரப்பு மவுனம் சாதித்து வருகிறது. ஐ.எஸ்.ஐ.,யின் பொதுத் தொடர்பு இணையதளத்திலும் இது பற்றிய செய்தி வெளியீடு எதுவும் வரவில்லை. ஆனால், எல்லையில் உள்ள பழங்குடியினர், துருப்புகள் குவிப்பை உறுதிப்படுத்தியுள்ளனர்.

கயானி கடும் எச்சரிக்கை: எனினும் ராணுவத் தளபதி கயானி, அமெரிக்கா தரைவழித் தாக்குதல் நடத்துவதற்கான வாய்ப்பு இருப்பதை மறுக்கவில்லை. இதுகுறித்து அவர் கூறுகையில், "அமெரிக்கா தரைவழித் தாக்குதல் நடத்தக் கூடும். ஆனால், அதைச் செய்வதற்கு முன் அவர்கள் ஒன்றுக்கு 10 முறை யோசிப்பது நல்லது. ஏனெனில் பாகிஸ்தான், ஈராக்கோ அல்லது ஆப்கானிஸ்தானோ அல்ல' என்றார். எல்லையில் இருதரப்பிலும் படைகள் குவிக்கப்பட்டதை அடுத்து, பாக்., ராணுவ நிலைக்குழு கூட்டம் நேற்று மூன்று மணி நேரத்திற்கும் மேலாக நடந்ததாக பாக்., பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது. அக்கூட்டத்தில் எம்.பி., ஒருவர், அமெரிக்காவின் தரைவழித் தாக்குதல் சாத்தியமா எனக் கேட்டதற்குத் தான் அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.

"எந்த நேரமும் தாக்குதல் நடக்கலாம்' : ஆப்கன் எல்லையில் படைகள் குவிக்கப்பட்டிருப்பதை அடுத்து, நேற்று பேட்டியளித்த அமெரிக்க அதிகாரிகள் சிலர் கூறியதாவது: ஆப்கன் எல்லைப் பகுதியில், கோஸ்ட், பக்டியா, லோகர், வார்டாக் ஆகிய மாகாணங்களின் எல்லைகளில் ஹக்கானி குழுவின் நடவடிக்கைகள் தொடர்கின்றன. இதற்காக, எல்லையில் 90 நாள் தொடர்ந்து கண்காணித்து வந்தோம். அதன் பின் தான், ஹக்கானி குழுவின் நடவடிக்கைகள் உறுதி செய்யப்பட்டன. அதேநேரம், வடக்கு வஜீரிஸ்தானில் இருந்து அவர்கள் கிழக்குப் பக்கமாக தங்கள் நடவடிக்கைகளை மாற்றிக் கொண்டுள்ளனர். எனினும், தற்போதைய நிலையில் தெற்குப் பக்கம் நிலவரம் இயல்பான பின், எங்கள் கவனம் கிழக்கு நோக்கி திரும்பும். பாகிஸ்தானில் இருந்து ஹக்கானி குழு தாக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. அதனால், எந்நேரமும் தாக்குதல் நடக்கலாம். இவ்வாறு அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஏன் இந்த அதிரடி நடவடிக்கை? : கடந்த மே மாதம் முதல் இதுவரை, பாக்., எல்லையில் இருந்து ஹக்கானி குழுவினர் பல முறை ராக்கெட் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதுகுறித்து, "தி நியூயார்க் டைம்ஸ்' வெளியிட்ட செய்தி ஒன்றில், கடந்த மே மாதம் முதல் இதுவரை, பாக்., பகுதியில் இருந்து ஹக்கானி குழுவினர் 102 முறை ராக்கெட் தாக்குதல் நடத்தியுள்ளதாகவும், அவை ஆப்கனின் பக்டியா மாகாண எல்லைச் சாவடிகளின் அருகில் விழுந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு இதே காலகட்டத்தில் ஹக்கானி குழுவினர், 13 முறை மட்டுமே தாக்குதல் நடத்தியுள்ளனர். தற்போது அதிகரித்துள்ள தாக்குதல், அப்பகுதியில் அவர்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதையே காட்டுகிறது. ஆனால் பாக்., அவர்கள் அப்பகுதிகளில் இல்லை என தொடர்ந்து சாதித்து வருகிறது. இதனால் தான், அமெரிக்கா உடனடியாக ஹக்கானி குழுவை ஒழித்துக் கட்டும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

No comments

Powered by Blogger.