Header Ads



துருக்கி படையினர் மீது குர்திஸ் போராளிகள் தாக்குதல் - 24 பேர் மரணம்

துருக்கியின் தென் கிழக்குப் பகுதியில் உள்ள இராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்தி குறைந்தது 24 படையினரை கொன்றுள்ள குர்தீஸ் போராளிகளை இலக்குவைத்து துருக்கிய படையினரும், அந்நாட்டின் போர் விமானங்களும் எல்லை தாண்டி வட இராக்குக்குள் நுழைந்துள்ளன.

இராக்கிய எல்லைக்கு அருகேயுள்ள ஹக்காரி மாகாணத்தில் உள்ள பல இராணுவ நிலைகளை பீகேகே எனப்படும் குர்திஸ்தான் தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த நூற்றுக்கும் அதிகமான போராளிகள் தாக்கியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த தாக்குதலை ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கைக்கான தலைவர் கேத்தரின் அஷ்டன் கண்டித்துள்ளார். கடந்த ஜூலையிலிருந்தே குர்தீஸ் போராளிகள் துருக்கியினுள்ளே தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகின்றனர். ஆகஸ்டில் வெடித்த வன்முறைகளின் தொடர்ச்சியாக வடக்கு ஈராக்குக்குள் நுழைந்த துருக்கிய போர் விமானங்கள் அங்கு பல்வேறு இலக்குகள் மீது குண்டுகளை வீசின.

குர்தீஸ் மக்கள் தொடர்பாக துருக்கி இன்று முற்றிலும் மாறிய, ஒரு நிலைப்பாட்டை நோக்கிச் செல்வதாகவே தெரிவதாக செய்தியாளர்கள் கூறுகின்றனர்.

குர்தீஸ் மக்கள் தொடர்பாக ஆரம்பத்தில் தாராளக் கொள்கையொன்றை கடைப்பிடித்து வந்த ஆளும் மிதவாத இஸ்லாமிய கட்சியான ஏகேபியின் ‘ஜனநாயகமான ஆரம்பம்’ என்று வர்ணிக்கப்பட்ட இந்த அணுகுமுறை, இப்போது எடுக்கப்பட்டிருக்கின்ற கடுமையான உறுதியான நிலைப்பாட்டினால் மாறிப்போயிருக்கின்றது.

No comments

Powered by Blogger.