போதைப்பொருள் வியாபாரிகளை கைது செய்யுங்கள் - முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்
மட்டக்களப்பு - வாழைச்சேனை பிறைந்துரைச்சேனை பிரதேசத்தில் போதைப்பொருள் வியாபாரிகளையும் வீதிகளில் மதுபானம் அருந்துவோரையும் கைது செய்யுமாறு கோரி பிறைந்துரைச்சேனை சாதுலிய்யா வித்தியாலய மாணவர்களும் பிரதேச பொதுமக்களும் இணைந்து வாழைச்சேனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் காரியாலத்தின் முன்னால் இன்று காலை ஆர்ப்பாட்டப் பேரணியில் ஈடுபட்டனர்.
இப்பிரதேசத்தில் சட்டவிரோத போதைப்பொருள் வியாபாரிகளினால் பலர் வீதிகளில் வைத்து மதுபானத்தை குடித்துவிட்டு சண்டையிடுவது மற்றும் பாடசாலையில் இரவில் அத்துமீறி உட்புகுந்து மதுபானம் குடிப்பது,
கடந்த செவ்வாய்கிழமை பாடசாலையின் ஆசிரியரை தாக்கிய சம்பவத்தின் பின்னனியில் போதைப்பொருள் வியாபாரிகள் இருப்பதாகவும் இவ்வியாபாரிகளுக்கு ஒருசில பொலிஸார் ஒத்தாசை வழங்கிவருவதாகவும் இதனால் மாணவர்களின் கல்விகற்றல் நடவடிக்கை பாதிக்கப்பட்டுள்ளது. இவைகளை கண்டித்து சாதுலிய்யா வித்தியாலய மாணவர்களும் பிரதேச பொதுமக்களும் இணைந்து ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்பாடு செய்தனர்.
இவ்ஆர்ப்பாட்ட பேரணி இன்று காலை 8 மணியளவில் பாடசாலை முன்னால் ஆரம்பித்து நுற்றுக்கணக்கானோர் ஊர்வலமாக சட்டவிரோத போதைப்பொருள் வியாபாரிகளையும் வீதிகளிலும் பாடசாலைகளிலும் மதுபானம் குடிப்போரையும் கைது செய்யுமாறும் வியாபாரிகளுக்கு ஒத்தாசை வழங்கும் பொலிஸாரை இனம்கண்டு நடவடிக்கை எடுக்குமாறும் மாணவர்கள் கல்விகற்ககூடிய சூழலை ஏற்படுத்துமாறு பதாதைகள் ஏந்தியவாறு கோஷ்சம் எழுப்பியவாறு வாழைச்சேனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் காரியாலம்வரை சென்றனர்.
முற்பகல் 11 மணிவரை ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு மகஜர் ஒன்றை உதவி பொலிஸ் அத்தியட்சகர் தென்னக்கோனிடமும் மற்றும் சிறுவர் நன்னடத்தை அதிகாரியிடமும் கையளித்ததுடன் உதவி பொலிஸ் அத்தியட்சகரின் வாக்குறுதியை அடுத்து ஆர்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.

Post a Comment