இலங்கையரின் ஆயுட்காலம் 76
இலங்கையில் 30 வருட காலம் மோதல் இடம் பெற்ற பிர தேசங்களில் பயங்கரவாதிகளால் மக்களுக்கு பிரச்சினைகள் ஏற்பட்ட நிலையிலும் அப்பிரதேசங்களில் உள்ள வைத்தியசாலைகளுக்கு வசதிகளை பெற்றுத் தருவதை இலங்கை அரசாங்கம் ஒருபோதும் நிறுத்தவில்லை என சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன கூறினார்.சுகாதார துறைக்கு அழுத்தங்களை ஏற்படுத்தும் சமூக பிரச்சினைகள் தொடர்பான ரியோடி ஜெனய்ரோ நகரில் உலக மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் உரையாற்றிய போதே அமைச்சர் மைத்திரிபால சிரிசேன இவ்வாறு கூறினார். அந்த மாநாட்டில் தொடர்ந்து பேசிய அமைச்சர் மேலும் கூறியதாவது,
அமெரிக்காவில் ஒரு நபர் 88 வயது வரை உயிர் வாழ்கிறார். அதேவேளை சோமாலியா மற்றும் குறைந்த வருமானம் பெறும் நாடுகளில் உள்ளவர்கள் 45 முதல் 51 வயது வரையே உயிர் வாழ்கின்றனர்.
எனினும் உலக சுகாதார அமைப்பின் 2010 ஆம் வருட அறிக்கையின்படி இலங்கையர் ஒருவரின் சராசரி ஆயுட் காலம் 76 வயதாகும். சிறுவர் மரண விகிதம் 1000 பிறப்புகளுக்கு 12 ஆகும். இது அபிவிருத்தி அடைந்த நாடுகளில் நிலவும் மட்டமாகும். இலங்கையில் உள்ள இலவச கல்வி மற்றும் இலவச சுகாதாரம் ஆகிய சேவைகளினால் இந்த வசதிகள் கிடைத்துள்ளன.
30 வருட கால யுத்தத்தின் பின்னர் தற்போது இலங்கையில் பாரிய அபிவிருத்தி வேலைகள் மேற்கொள்ளப்படுகின்றன. எனவே நாட்டின் அனைத்து பிரதேசங்களிலும் சமமான சுகாதார வசதிகளை பெற்றுத்தருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக நாட்டுக்கு தேவையான வைத்தியர்கள், தாதிமார் மற்றும் சுகாதார ஊழியர்களுக்கு பயிற்சி வழங்கும் காலத்தில் அவர்களுக்கு கொடுப்பனவு ஒன்றை வழங்குவதுடன் பயிற்சியை இலவசமாக வழங்கும் உலகின் ஒரேயொரு நாடு இலங்கை மட்டுமேயாகும். நாட்டில் செயற்படும் இலவச கல்விக் கொள்கை காரணமாக இலவச சுகாதார சேவையை செயற்படுத்த மிகவும் இலகுவாக உள்ளது என்று அமைச்சர் அங்கு குறிப்பிட்டார்.
Post a Comment