Header Ads



யாழ்ப்பாண முஸ்லிம்களின் வரலாறு (தொடர் - 7)

அப்துல் ரஹீம்

யாழப்பாணக் குடாநாடெங்கனும் முஸ்லிம்கள் பரந்து வாழ்ந்ததுடன் நெயினா(ர்) தீவு மண்டைதீவு, மண்கும்பான், காரைதீவு என்னும் தீவுகளிலும் முஸ்லிம்கள் பரந்து வாழ்ந்துள்ளனர் என்பதற்கு போதிய சான்றுகள் உள்ளன. இன்றும் குடாநாட்டின் பெரும்பாலான காணிகள் சோனகன் வடலி, சோனகவெளி, சோனகவாடி, சோனகஅடி, சோனகரடைப்பு என்றும் சில முஸ்லிம்களின் தனிப் பெயரையும் கொண்டு விளங்குகின்றன. இவை போன்ற பலவற்றை குடாநாட்டின் பெரும்பாலான காணிகளின் தாய் உறுதிகளிலிருந்து பெறலாம்.

மண்டைதீவு, காரைதீவு என்பவற்றில் இன்று முஸ்லிம்கள் வாழ்வதில்லை என்றாலும் மண்டை தீவில் முன்பு வாழ்ந்த முஸ்லிம்களால் தமது காலத்தின் பின் பள்ளிவாயில்களுக்கு எழுதிய காணிகள் இன்றுமிருப்பதை அவதானிக்கலாம். காரைதீவில் இன்றும் ஒரு குறிச்சிக்கு சோனகரடைப்பு என்ற பெயர் எண்டு. இவற்றைவிட உசுமான்துறை வலித்தூணடல் என்பவற்றிலும் உசன் என்பதிலும் முஸ்லிம் பெயர்களின் செல்வாக்கை காணலாம்.

நயினாதீவு, மண்கும்பான், மண்டைதீவு, காரைதீவு ஆகிய இடங்களில் பெரும்பாலும் முத்துக்குளித்தல், அம்பர் பெறல், சங்கு குளித்தல் ஆகிய தொழில்களில் ஈடுபட்ட கீழைக்கரை இஸ்லாமியரின் செல்வாக்கே மிகுந்திருக்க வேண்டும். இருந்தாலும் இதற்கு முன்பே பெருமானாரின் காலத்திலும் இதன் பின் வாழ்ந்த கலீபாக்களின் காலத்திலும் சமயப் பிரச்சாரம் மேற்கொள்ளவென வெளியேறிய நல்லடியார்கள் பலர் உயிருடன் வந்து ஈழத்தின் பல்வேறு கரைகளையும் அடைய சிலர் மரணித்த நிலையிலேயே கரையடைந்துள்ளனர். இவ்வாறான நல்லடியார்கள் வாழ்ந்த காலத்திலும் சிலர் இறந்த பின்பும் அவர்கள் அடங்கப்பட்ட சமாதிகளின் அருகிலும் சில அற்புதச் செயல்களை மக்கள் கண்டறிந்து அவர்களை அவ்லியா எனப்படும் (வலியுல்லாஹ்) ஆண்டவனின் நண்பர் என்று கொண்டாடினர். இவ்வாறான ஒரு சமாதி வெள்ளைக் கடற்கரையில் உண்டு. இங்கு அடக்கம் செய்யப்பட்டிருப்பவர் சுல்தான் அப்துல் காதர் வலியுல்லாஹ் என்றும் அவரின் தங்கையே நயினாதீவில் அடங்கியுள்ளார்கள் என்றும் மக்கள் இன்றும் நம்புகிறார்கள். இவ்வாறு கடற்றொழில் நாட்டம் மற்றும் வியாபாரம் காரணமாக இங்கு குடியேற்றங்களை அமைத்தவர்கள் காலப்போக்கில் குடாநாட்டுக்கு பெயர்ந்திருத்தல் கூடும்.

ஆரம்ப காலத்தில் முஸ்லிம்களின் பிரதான குடியிருப்புகளாக ஐந்து பகுதிகளை நம்மால் அமையாளம் காணமுடியும் இந்த ஐந்து பகுதிகளில் தலையாயது தற்போது அலுப்பாந்தி என்று அழைக்கப்படும் இறங்குதுறை, பறங்கித்தெரு, சின்னக்கடை, கோட்டை, பொலிஸ் நிலையம் ஆகிய பகுதிகளை அடக்கியது.
அடுத்தது மீசாலை எனுமிடத்தில் அமைந்திருந்த உசன் என்ற பகுதி. மூன்றாவது சாவகச்சேரிக்கு அண்மையிலுள்ள சோனகன் புலவு என்ற பகுதியாகும். நான்காவது நல்லூர்க்கோயில் இன்று அமைந்துள்ள பகுதியாகும். ஐந்தாவது இன்று முஸ்லிம்கள் பெருமளவினராக வாழ்கிற நாவாந்துறைக்குக் கிழக்கான பகுதியாகும். இவற்றைவிட சாவச்சேரி, கொடிகாமம், பருத்தித்துறை, ஆணைனக்கோட்டை என்பவற்றையும் பிற இடங்களையும் கொள்ளலாம். யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கு வெளியே கிளிநொச்சி, பள்ளிக்குடா, நாச்சிக்குடா என்பனவும் முஸ்லிம் குடியிருப்புகளேயாகும்.

தொடரும்...

No comments

Powered by Blogger.