யாழ்ப்பாண முஸ்லிம்களின் வரலாறு (தொடர் - 6)
அப்துல் ரஹீம்
தமிழ்நாட்டில் வாழ்ந்த சேரமான் பெருமாள் (கி.பி. 880) என்ற அரசர் இந்து சமயத்தைச் சேர்ந்தவர். பல இந்துமதப் பக்திப் பதிகங்களை பாடினார். அராபிய வணிகரின் வருகையும் அதனால் ஏற்பட்ட கொள்கைத் தாக்கமும் அவரை இஸ்லாம் மதத்தை தழுவவைத்தன. அவர் தனது பெயரை அப்துல் ரஹ்மான் சாமிரி என்று மாற்றிக்கொண்டார். அவர் அராபியரிடம் பெருமதிப்பு வைத்திருந்தார். அராபியரின் கப்பற்படை உதவி மன்னருக்கு என்றும் தேவையாக இருந்ததனால் தம் நாட்டில் உள்ள மீன்பிடிக்காரர்களான முக்குவர்களின் ஒவ்வொரு குடும்பத்திலும் எவரேனும் ஒரு ஆண் இஸ்லாத்தை தழுவி வாழவேண்டும் என்று ஆணையிட்டார். அவர்களின் பரம்பரையினரே முன்கூறப்பட்ட வலித்தூண்டல், சேந்தான்குளம், உசுமன் துறை ஆகிய இடங்களில் வாந்தவர்கள் எனவும் துணியலாம்.
வரலாற்றுச் சான்றுகளில் கடற் கொள்ளைக்காரர்களாக வெடியரசன் என்பவனும் மீரா என்பவனும் குறிப்பிடப்படுகிறார்கள். அப்போது ஏற்பட்ட கலகம் உன்றைத் தொடர்ந்து வெடியரசள் மட்டக்களப்புக்கு ஓடி ஒரு முக்குவக் குறிச்சியை ஆரம்பித்தான். மீரா என்பவன் விடத்தல் தீவுக்கு ஓடி முகம்மதியக் குடியேற்றம் ஒன்றை ஆரம்பித்தான் என்றும் சான்றுகள் கூறுகின்றன. மீராவும் அவனது சனமும் என்று குறிப்பிடப்படுவதால் ஏற்கனவே முஸ்லிம்கள் கடற்கரையோரங்களில் வாழ்ந்திருக்கிறார்கள் என்பது புலனாகும். வெடியரசன் என்று சொல்லப்படுபவனும் ஒரு முஸ்லிமாக இருக்கலாம் எனத் துணியவும் முடியும்.
யாழ்ப்பாணம் பல பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருந்தது என்றும் நுகரைப்பற்றில் முழுக்க முழுக்க முஸ்லிம்களே (துலுக்கர்) வாழ்ந்தார்கள் என்றும் சான்றுகள் கூறும். முதலாம் விஜயபாகு மழுநாட்டையும் ஆண்ட காலத்தில் அவனது படைவீரராக யாவாயைச் சேர்ந்த கூலிப் படையினரைக் கொண்டுவந்து வைத்திருந்தான். குலோத்துங்க சிங்கையாரின் 13 ஆம் நூற்றாண்டிலே யாப்பகுவை அழித்தபோது பல யாவுகர்கள் சிறையாக பிடிக்கப்பட்டனர். அவ்வாறு சிறையாக பிடிக்கப்பட்ட யாவுக்கர்கள் அனைவரும் முஸ்லிம்களாயிருந்தனர். இதனால் முஸ்லிம்களின் சாவகச்சேரியிலான குடியேற்றம் 13 ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்திருக்க வேண்டும். இவர்கள் கனகசூரிய சிங்கையாரின் காலத்தில் 1564 இல் துரத்தப்பட்டனர்.
ஆதிக் குடியேற்ற காலங்களைவிட இந்தியாவின் தக்கணத்தில் பாமினீ சுல்தான் ஆட்சியில் வட இலங்கையையும் அடக்கி ஆண்டபோது 1422 அளவில் மற்றொரு முஸ்லிம் குடியேற்றமும் நிகழ்ந்துள்ளது. 1450 இல் சிறி சங்கபோதி புவனேகபாகு கனகசிங்கையாரினை வென்ற பின்பும் இந்தியாவிலிருந்து வட இலங்கைக்கு ஒரு முஸ்லிம் குடியேற்றம் நிகழ்ந்துள்ளது.
தொடரும்...
Post a Comment