Header Ads



மீண்டும் திட்டமிட்ட வெறுப்பு, பிரசாரத்திற்கு இடமளியாதீர்


பொது பல­சேனா அமைப்பின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் மீண்டும் தனது வெறுப்புப் பிர­சா­ரத்தை கையி­லெ­டுத்­துள்ளார். கடந்த சில தினங்­க­ளாக அரச மற்றும் தனியார் தொலைக்­காட்­சி­களில் தோன்­றி­வரும் அவர், உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலை முன்­னி­றுத்தி முஸ்­லிம்­களின் மனதைப் புண்­ப­டுத்தும் வகை­யி­லான கருத்­துக்­களை வெளிப்­ப­டுத்தத் தொடங்­கி­யுள்ளார்.

தனியார் தொலைக்­காட்சி ஒன்றின் கலந்­து­ரை­யாடல் நிகழ்ச்­சியில் பங்­கேற்ற அவர் “உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலின் சூத்­தி­ர­தாரி அல்­லாஹ்தான்” என வெளி­யிட்ட கருத்து முஸ்­லிம்­களை அதிர்ச்­சி­யிலும் கவ­லை­யிலும் ஆழ்த்­தி­யுள்­ளது. இது தொடர்பில் அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உலமா தனது கண்­ட­னத்தை வெளி­யிட்­டுள்­ள­துடன், நேற்­றைய தினம் பொலிஸ் தலை­மை­ய­கத்தில் முன்னாள் மாகாண சபை உறுப்­பினர் ஒரு­வரால் முறைப்­பாடும் செய்­யப்­பட்­டுள்­ளது.

இந்த விவ­காரம் குறித்து நேற்­றைய பாரா­ளு­மன்ற அமர்­விலும் பேசப்­பட்­டது. பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான சாணக்­கியன் மற்றும் முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் ஞான­சார தேரரின் வெறுப்­பூட்டும் கருத்­துக்கள் குறித்து கண்­டித்துப் பேசி­ய­துடன் அர­சாங்கம் இது குறித்து என்ன நட­வ­டிக்கை எடுத்­துள்­ளது என்றும் கேள்­வி­யெ­ழுப்­பினர். எனினும் அரச தரப்பில் இது குறித்த எந்­த­வித ஆக்­க­பூர்­வ­மான பதிலும் அளிக்­கப்­ப­ட­வில்லை.

கடந்த காலங்­களில் ஞான­சார தேரர் வெளி­யிட்ட வெறுப்புப் பேச்­சுக்­க­ளுக்­கா­கவும் அதன் மூலம் ஏற்­பட்ட வன்­மு­றை­க­ளுக்­கா­கவும் கைது செய்­யப்­பட்டு ஐசி­சி­பிஆர் சட்­டத்தின் கீழ் அவ­ருக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­பட வேண்டும் என உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தல்கள் தொடர்பில் விசா­ர­ணை­களை மேற்­கொண்ட ஜனா­தி­பதி ஆணைக்­குழு தனது இறுதி அறிக்­கையில் சிபா­ரிசு செய்­தி­ருந்­தது. எனினும் இது­வரை அவ­ருக்கு எதி­ராக எந்த நட­வ­டிக்­கையும் எடுக்­கப்­ப­ட­வில்லை. மாறாக இத்­தாக்­கு­த­லுடன் எந்­த­வ­கை­யிலும் சம்­பந்­தப்­பட்­டி­ராத அப்­பாவி முஸ்­லிம்கள் பலர் கடந்த இரு வரு­டங்­க­ளுக்கும் மேலாக சிறை­யி­ல­டைக்­கப்­பட்­டுள்­ளனர்.

இலங்­கையில் பௌத்த சிங்­கள தீவி­ரப்­போக்­கா­ளர்கள் இவ்­வாறு இஸ்­லாத்தை அவ­ம­திப்­பதும் முஸ்­லிம்­களை துன்­பு­றுத்­து­வதும் இதுவே முதற்­த­ட­வை­யல்ல. கடந்த 10 வரு­டங்­களில் சுமார் 1000 க்கும் மேற்­பட்ட இவ்­வா­றான சம்­ப­வங்கள் பதி­வா­கி­யுள்­ளன. எனினும் இவற்றில் ஒன்­றுக்­கா­க­வேனும் குற்­ற­வா­ளிகள் தண்­டிக்­கப்­பட்­ட­தில்லை என்­பதே யதார்;த்தமாகும். தற்­போ­தைய அர­சாங்கம் கொவிட் தொற்­றினால் மர­ணித்த முஸ்­லிம்­களின் ஜனா­சாக்­களை எரித்­தமை உள்­நாட்டில் மாத்­தி­ர­மன்றி சர்­வ­தேச நாடு­க­ளிலும் பாரிய அதிர்ச்­சி­யையும் அதி­ருப்­தி­யையும் ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தது. ஈற்றில் சர்­வ­தேச அழுத்­தத்தின் பேரி­லேயே அப் பிரச்­சி­னைக்கு முடிவு காணப்­பட்­டது.

அன்­றெல்லாம் முஸ்லிம் நாடு­களின் கோரிக்­கை­க­ளையும் அழுத்­தங்­க­ளையும் கண்டு கொள்­ளாத இந்த அர­சாங்கம், இன்று பொரு­ளா­தார மற்றும் மனித உரி­மைகள் சார்ந்த நெருக்­க­டிகள் வந்த பிற்­பாடு முஸ்லிம் நாடு­களின் தயவை நாடி­யி­ருப்­பது வெட்­கத்­துக்­கு­ரி­ய­தாகும்.

ஐக்­கிய அரபு இராச்­சி­யத்­துக்கு விஜயம் செய்­துள்ள எரி­சக்தி அமைச்சர் உதய கம்­மன்­பில கச்சா எண்­ணெயை கட­னுக்குப் பெற்றுக் கொள்­வது குறித்து பேச்­சு­வார்த்தை நடத்­தி­யுள்ளார். தற்­போது நாடு எதிர்­கொண்­டுள்ள அந்­நியச் செலா­வணி பற்­றாக்­கு­றைக்கு தீர்­வாக ஐக்­கிய அரபு இராச்­சி­யத்தின் இந்த உதவி அமையும் என கம்­மன்­பில குறிப்­பிட்­டுள்ளார். அதே­போன்று ஐக்­கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்­டத்தில் பங்­கேற்கச் சென்­றுள்ள ஜனா­தி­பதி குவைத் பிர­த­மரை அங்கு சந்­தித்துப் பேச்­சு­வார்த்தை நடத்­தி­யுள்­ள­துடன் துறை­முக நகர் திட்­டத்தில் முத­லீடு செய்ய வரு­மாறு அழைப்பு விடுத்­துள்ளார். மறு­புறும் தற்­போது ஜனா­தி­ப­தி­யுடன் நியூயோர்க் சென்­றுள்ள வெளி­வி­வ­கார அமைச்சர் பேரா­சி­ரியர் ஜீ.எல்.பீரிஸ் இஸ்­லா­மிய ஒத்­து­ழைப்பு அமைப்பின் பொதுச் செய­லா­ளரைச் சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­தி­யுள்­ள­துடன் முஸ்லிம் நாடு­க­ளுக்கும் இலங்­கைக்­கு­மி­டை­யி­லான உறவு குறித்து நீண்ட நேரம் பிரஸ்­தா­பித்­துள்ளார். மேலும் துருக்­கியின் வெளி­வி­வ­கார அமைச்­ச­ரு­டனும் இரு நாடு­க­ளி­னதும் வர்த்­தக உற­வுகள் குறித்து பேரா­சி­ரியர் பீரிஸ் பேச்சு நடத்­தி­யுள்ளார்.

உல­கி­லுள்ள பெரும்­பா­லான முஸ்லிம் நாடுகள் இலங்­கைக்கு எப்­போ­துமே உதவிக் கரம் நீட்டி வந்­துள்­ளன. யுத்த காலத்­திலும் மனித உரி­மைகள் பேரவை நெருக்­க­டியின் போதும் அனர்த்­தங்­களின் போதும் முஸ்லிம் நாடுகள் ஏரா­ள­மான உத­வி­களை இலங்­கைக்கு வழங்­கி­யுள்­ளன. மத்­திய கிழக்கு நாடு­களில் பணி­பு­ரியும் இலட்­சக்­க­ணக்­கான இலங்­கை­யர்கள் மூலம் பாரிய அந்­நியச் செலா­வணி இலங்­கைக்கு கிடைக்­கி­றது. எனினும் உள்­நாட்டில் வாழும் முஸ்­லிம்கள் தொடர்பில் மாத்­திரம் அர­சாங்கம் ஓரக்­கண்­கொண்டு தீர்­மா­னங்­களை எடுக்­கி­றது.

முஸ்­லிம்கள் விட­யத்தில் உள்­நாட்டில் ஒரு கொள்­கையும் வெளி­நா­டு­களில் வேறு ஒரு கொள்­கை­யையும் பின்­பற்றும் இந்த அர­சாங்­கத்தின் நிலைப்­பாடு ஒரு­போதும் வெற்­றி­ய­ளிக்கப் போவ­தில்லை. தற்­போது ஞான­சார தேரர் அல்­லாஹ்வை அவ­ம­திக்கும் விதத்தில் வெளி­யிட்ட கருத்து குறித்து இலங்­கை­யிலும் உள்ள சகல முஸ்லிம் நாடு­களின் தூத­ர­கங்­களும் விசேட கவனம் செலுத்­தி­யுள்­ளன. இவ்­வா­றான வெறுப்புப் பேச்­சுக்­க­ளுக்கு அரசாங்கம் தொடர்ந்தும் இடமளிக்குமானால் முஸ்லிம் நாடுகள் தமது ஆதரவை விலக்கிக் கொள்ள நேரிடலாம். அது நிச்சயமாக இந்நாட்டை மேலும் படுகுழியில் தள்ளவே வழிவகுக்கும்.

ஞானசார தேரரின் இவ்வாறான கருத்துக்கள்தான் முஸ்லிம் சமூகத்தில் தீவிரவாத சக்திகள் தோற்றம் பெற வித்திட்டன என்பதை அரசாங்கம் அறியாமலில்லை. இதனையே ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையும் சுட்டிக்காட்டியுள்ளது. இவ்வாறானவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்து அவர்களது வாய்களுக்கு பூட்டுப் போடுவதே இப்போதைக்குள்ள தேவையாகும்.- Vidivelli

2 comments:

  1. முஜீபுர் ரஹ்மான், மரிக்கார் போன்றவார்கள் ஒவ்வொரு இஸ்லாமிய நாட்டு தூதுவர்களையும் சந்தித்து இந்த பிச்சைக்கார சிங்கள இனவாதிகளின் இரட்டை முகத்தை தெளிவுபடுத்த வேண்டும்.

    ReplyDelete
  2. தயவுசெய்து இந்த விவகாரத்தை அப்படியே ஐ.நா. சபைக்கும், மனித உரிமைகள் அமைப்புக்கும் முறைப்பாடு செய்வதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்பட வேண்டும். இங்கு செய்யும் முறைப்பாட்டுக்கு எந்தப் பிரயோகனமும் இல்லை. இந்த விடயத்தை திரு சாணக்கியன், த.அ.கட்சியின் ஆலோசனையையும் பெற்றுக் கொள்ள வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.