Header Ads



அன்புள்ள சுமந்திரன் ஐயாவிடம், முஸ்லிம் சமூகம் எதிர்பார்ப்பது...!


அன்புள்ள சுமந்திரன் ஐயா 

வடக்கு முஸ்லிம்கள் புலிகளால் வெளியேற்றப்பட்ட விடயத்தை ஒரு இனச் சுத்திகரிப்பு நடவடிக்கை என தாங்கள் அழுத்தந்திருத்தமாக தெரிவித்து இருந்தீர்கள். அதனை யாழ்ப்பாண முஸ்லிம்கள் சார்பாக நாங்கள் வரவேற்கின்றோம். அதேவேளை இன்னும் சில விடயங்களை உங்களிடமிருந்து எதிர்பார்த்த ஒரு சமுதாயமாக யாழ்ப்பாண முஸ்லிம் சமூகம் இருக்கின்றது என்பதை தங்களின் கவனத்துக்கு கொண்டு வருகின்றோம். 

 நாங்கள் வெளியேற்றப்பட்டபோது எங்களுடைய பணம், நகை, உடைகள்  போன்ற அனைத்துமே சோதனைச் சாவடி அமைத்து கொள்ளையடிக்கப்பட்டு விட்டதை தாங்கள் அறிவீர்கள். அதன் பிறகு எங்களது வீடுகள், பள்ளிவாசல்கள், பாடசாலைகள் எல்லாம் உடைக்கப்பட்டு கதவு நிலை ஜன்னல்கள் வீட்டு உபயோகப் பொருட்கள் அத்தனையும் கொள்ளையடிக்கப்பட்ட நிகழ்வை தாங்கள் அறிவீர்கள். 

 இந்நிலையில் 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு வந்த நிலையில் முஸ்லிம்கள் மீண்டும் யாழ்ப்பாணத்துக்கு மீளக்குடியேறும் எண்ணத்தோடு சென்றனர்.  ஆனால் வீடுகள் எல்லாம் உடைக்கப் பட்டிருப்பதைக் கண்டு அவர்களின் மீள்குடியேற்ற எண்ணம் சிதறிப் போனது. இவ்வாறான ஒரு ஏமாற்றமன மற்றும் நம்பிக்கையற்ற அச்சுறுத்தலான  நிலமை யாழ்ப்பாணத்தில் காணப்பட்டபோதும்,  மீள்குடியேறுவதற்காக 2010 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில் 2000 குடும்பங்கள் விண்ணப்பித்திருந்தனர். அவர்கள் எவருக்குமே வீடுகளைத் திருத்துவதற்கும் நிதி வழங்கப்படவில்லை.  மீள்குடியேற்ற கொடுப்பனவுக்கு வழங்கப் படவேண்டிய 25000 ரூபாவில் சில குடும்பங்களுக்கு 5,000 ரூபாவும் மேலும் சில குடும்ப்னக்களுக்கு 20,000 ரூபாவும் வழங்கப் பட்ட நிலையில் மிகுதிப் பணம் அவ்வாறான பயனாளிகளுக்கு வழங்கப்படாமல் இழுத்தடிப்புச் செய்யப் பட்டது. மேலும் ஆயிரக் கணக்கான குடும்பங்களுக்கு இந்த நிதி வழங்கப் படவில்லை. 

ஒரு புறம் வீடமைப்பு உதவி நிதி வழங்கப்படாமல் இழுத்தடிக்கப் பட்டது. மறுபுறம் மீள்குடியேற்ற நிதியும் முறைகேடாக வழங்கப் பட்டது. இந்த நிலமையில் நண்பர்கள் உறவினர் வீடுகளிலும், உடைந்த வீடுகளுக்குள்ளும், உடைந்த பாடசாலைக் கட்டிடங்களுக்குள்ளும் எத்தனை நாள் தான் வாழ முடியும். போதாக் குறைக்கு மலசல கூட வசதிகள் இன்றி எப்படி முஸ்லிம் குடும்பங்கள் வசிக்கும். வீடமைப்பு நிதி மற்றும் மீள்குடியேற்ற நிதி வழங்கப் படாமல் இழுத்தடிக்கப் பட்டது ஒன்றூ இரண்டு நாட்களல்ல. ஏறக்குறைய 2010 ஆம் ஆண்டு டெசம்பர் முதல் 2015 வரை இவ்வாறு தமிழர்களின் நிர்வாகத்தால் இழுத்தடிக்கப் பட்டது. இதனால் தொடர்ந்து தாக்குப் பிடிக்க முடியாமல் போன குடும்பங்கள் மீண்டும் இடம்பெயர்ந்து வாழ்ந்த இடங்களுக்கே திரும்பிவிட்டனர். 

 இவ்வாறான இழுத்தடிப்புகள் மீள் குடியேற்ற தடைகளுக்கு எதிராக  2015ஆம் ஆண்டு முஸ்லிம் நபரொருவர் உண்ணாவிரதம் இருந்ததைத்  தொடர்ந்து சில குடும்பங்களுக்கு வீடமைப்பு நிதி  வழங்குவதற்கு யாழ் மாவட்ட செயலகம் முன் வந்து முதற்கட்டமாக 25 பேருக்கு வழங்கியது கட்டம் கட்டமாக 225 பேருக்கு வீடமைப்புத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இந்த 225 குடும்பங்களுக்கு நிதி வழங்கப் பட்டதும் ஓரிரு மாதத்திலல்ல. கட்டம் கட்டமாக திட்டமிட்டு இழுத்தடித்து 5 வருடங்களில் தான் அந்த 225 குடும்பங்களுக்கும் வீடமைப்பு உதவித் தொல்கை வழங்கப்பட்டது. என்ன ஒரு நிர்வாகம் நேர்மை. 

 மொத்தமாக விண்ணப்பித்து இருந்த 2000 குடும்ப்னக்களில்  1775 குடும்பங்களுக்கு இதுவரை உரிய வீடமைப்பு உதவிகள் வழங்கப்படவில்லை .   தடைகளை அவர்களே போட்டுவிட்டு பயனாளிகள் யாழில் இல்லை என்ற சொதப்பலைச் செய்து விட்டார்கள். 

2010 மீள்குடியேற்றத்திற்காக பதிவுகளை மேற்கொண்டு விட்டு அவை தொலைந்து விட்டன என்று கூறி 2011ஆம் ஆண்டு மீண்டும் யாழ் பிரதேச செயலகத்தினால் மீள்குடியேற்ற பதிவுகள் மற்றும் விண்ணப்பங்கள் கோரப்பட்டன. அவற்றையும் மக்கள் சமர்ப்பித்தனர். அந்தப் 

பதிவுகளும் ஆவணங்களும் தொலைந்துவிட்டது எனக்கூறி 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27ஆம் தேதி மீண்டும் ஒரு பதிவு மேற்கொள்ளப்பட்டது. இதில் மாவட்ட செயலக அதிகாரிகள் 200 கிராம உத்தியோகத்தர்கள் பிரதேச செயலாளர்கள் உட்பட ஏராளமான அதிகாரிகள் கலந்துகொண்டு பதிவுகளை பெற்றுக்கொண்டனர் அங்கே முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா அவர்களும் கலந்து பார்வையிட்டார். இந்த மீள்குடியேற்ற விண்ணப்ப பதிவுகளின் போதும் 2300 குடும்பங்கள் பதிவுகளை செய்திருந்தனர்.

ஆனால் தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் யாழ்ப்பாணத்தின்  முஸ்லிம்களை மீள்குடியேற்ற விரும்பவில்லை என்பதை அவர்கள் இழுத்தடிப்பு செய்யும் விதத்தில் இருந்தும் மீண்டும்  மீண்டும் பதிவுகளை மேற்கொள்வதில் இருந்தும் அறிந்து கொள்ளக் கூடியதாக உள்ளது.  இது ஒரு ஏமாற்று வேலை என்பதையும் தங்களின் கட்சியோ அல்லது வேறு தமிழ் கட்சிகளோ இந்த விடயங்களை அறிந்தும் எந்த ஒரு தீர்வையும் முன்வைக்கவில்லை என்பதை  நாம் மனவருத்தத்துடன் உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகின்றோம்.

மொத்தமாக பதிவு செய்த குடும்பங்களில்  மீளக்குடியேற முழ்மனதுடன் உள்ள  சுமார் 350 குடும்பத்தினர் வெளிமாவட்டங்களில் வசிக்கின்றனர். அவர்கள் வீடமைப்புகான நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டு ஆரம்பத்தில் யாழ்ப்பாணத்தில் பல மாதங்கள் இருந்தனர்.  ஆனால் அவர்களுக்கு எதுவும் வழங்கப்படவில்லை அதனால் மீண்டும் அவர்கள் தமது இடம்பெயர் இடங்களுக்கே சென்று விட்டனர். 

2016 ஆம் ஆண்டு பதிவு செய்த குடும்பங்களில்  300 குடும்பங்கள் தற்போது யாழ்ப்பாணத்தில் தற்காலிக இடங்களிலும் நண்பர்கள் உறவினர்கள் வீடுகளிலும் குடியேறி உதவியை எதிர்பார்த்தவர்களாக வாழ்கின்றனர்.  அவர்களுக்கு சொந்தமாக காணி இல்லாததால் இந்த வீட்டு உதவித்திட்டம் அவர்களுக்கு கிடைக்கவில்லை.  அதனால் அவர்கள் நண்பர்கள் உறவினர்கள் வீடுகளிலும் ஏனைய வீடுகளிலும் கஷ்டமான நிலையில் வாழ்ந்து வருகின்றனர். 

 தமிழினத்தால் வீடு வாசல் சொத்துக்கள் தொழில்களை இழந்த  ஓர்  இனம் வெளியேற்றிய சமூகத்தாலேயே தொடர்ந்தும் மீள்குடியேற்றத்தில் தடைகளை எதிர்நோக்கி வருகின்றனர். எனவே தங்களைப் போன்ற புத்திஜீவிகள் அரசியல் தலைவர்கள் இந்த விடயத்தில் எங்களுக்கு 500 காணிகளும் தந்து அதில் வீடுகளையும் அமைத்துத் தந்தால் எங்களின் மீள்குடியேற்ற விடயம் ஓரளவுக்கு வெற்றி பெறும். 

வடமாகாண சபை உருவாக்கப் பட்ட பின்னர் மீள்குடியேற்ற நிதியாக முதலாண்டில்  ஏறக்குறைய 3000 மில்லியன் ரூபாவும் தொடர்ந்து பல ஆயிரம் மில்லியன் ரூபாய்களும் அரசாங்கத்தால் வழங்கப் பட்டது. அந்த மொத்த தொகையில் ஒரு பத்து வீதத்தையேனும் யாழ்ப்பாண முஸ்லிம்களின்  மீள்குடியேற்றத்துக்காக  தமிழ் அரசுக் கட்சியினால் ஆட்சி செய்யப் பட்ட வடமாகாண சபை ஒதுக்கியிருந்தால் முஸ்லிம்கள் மகிழ்ந்திருப்பர்.  

2016 , 2017 ஆம் ஆண்டு யாழ்ப்பாண முஸ்லிம்களின்  மீள்குடியேற்றத்துக்காக அப்போதைய அமைச்சர் ரிஷாத் பதியுதீனால் விஷேடமாக ஒதுக்கப் பட்ட 160 மில்லியன் ரூபாய்களை யாழ்ப்பாண செயலகம் திருப்பியனுப்பியிருந்தது. இந்த நிதியினூடாக 200 வீடுகளை அமைத்திருக்க முடியும். அதை அவர்கள் திருப்பியனுப்பி தாங்கள் எவ்வாறான மனநிலை கொண்டவர்கள் என்பதைக் காட்டியிருந்தார்கள். 

யாழ்ப்பாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்துக்கு 500 காணிகளும் அதில் வீடுகளும் தேவை. அதற்காக 750 மில்லியன் ரூபா போதுமானதாகும். அதே  மாதிரிக் கிராமத்தில் வீதிகள் அமைக்கவும், மின்சார இனைப்புகளை வழங்கவும், கலாச்சார மணடபம், சிறுவர் பூங்கா, விளையாட்டு மைதானம் என்பவற்றை அமைக்க 50 மில்லியன் போதுமானதாகும். இதை ஏற்பாடு செய்ய முடியாத நிலை காணப் படுகின்றதா?  

தமிழ் அரசியல் தலைவர்களில் தாங்கள் நேர்மையாக பேசுகிறீர்கள் என்பதை கடந்த கால தங்களின் செயற்பாடுகள் பேச்சுக்கள் காட்டி நிற்பதால் இந்த விடயத்தை உங்களின் கவனத்துக்கு கொண்டு வருகின்றோம்.  அதற்காக உங்களின் எதிர்கால முன்னெடுப்புகளை  நம்பியவர்கள் ஆக நாம் இந்த நாளைக்கே உங்கள் முன் சமர்ப்பிக்கின்றோம்.

யாழ் முஸ்லிம் மீள்குடியேற்ற ஒன்றியம்

No comments

Powered by Blogger.